கசினோ சூதாட்ட சட்டமூலத்தை எதிர்ப்போம் என்கிறது ஜே.வி.பி
Monday, April 21, 20140 comments
எதிர்வரும் 24 ஆம் திகதி அரசாங்கம் மீண்டும் கசினோ சூதாட்டத்தை சட்டமாக்கும் சட்ட மூலத்தை பாராளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளது. இதனை எதிர்த்து வாக்களிப்போம். அது மட்டுமன்றி இச்சமூக விரோத சட்டத்தை எதிர்த்து மக்களை அணிதிரட்டுவோம் என்றும் ஜே.வி.பி.யின் பிரசார
செயலாளரும் எம்.பி.யுமான விஜித ஹேரத் தெரிவித்தார்.
அமைச்சரவையிலுள்ள தேசப்பற்றாளர்கள் இன்று பற்றாளர்களாக மாறி விட்டனர் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
பெலவத்தையிலுள்ள ஜே.வி.பி.யின் தலைமையகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே விஜித ஹேரத் எம்.பி. இதனை தெரிவித்தார்.
இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் மதுவுக்கு முற்றுப்புள்ளி வைத்து புதியதொரு சமூகத்தை உருவாக்குவோம் என்ற மஹிந்த சிந்தனையுடன் அரசாங்கம் 2005 இல் ஆட்சிக்கு வந்தது.
அதன் பின்னர் தடம்புரண்ட அரசாங்கம் 2010 ஆம் ஆண்டில் கசினோ சூதாட்ட சட்ட மூலத்தை பாராளுமன்றத்தில் முன்வைத்தது.
இச் சட்ட மூலத்தில் கொழும்பு டி.ஆர்.விஜேவர்த்தன மாவத்தையை கசினோ வலயமாக்கி நாட்டில் பிரதேசங்களில் இயங்கும் கசினோக்களும் அவ்வலயத்திற்குள்ளேயே கொண்டு வரப்படுமென்றும் தெரிவித்தது.
இதற்கு அரசிலுள்ள ஹெல உறுமயவும் ஆதரவு வழங்கியது. 2013 ஆண்டு செப்டெம்பர் மாதம் விசேட வர்த்தமானி அறிவித்தலொன்று பாராளுமன்றத்தில் முன் வைக்கப்பட்டது. அது டி.ஆர்.விஜேவர்தன வீதியை தாண்டிச் சென்றது. கொம்பனி வீதி கிலெனி வீதி ஜஸ்டிஸ் அக்பர் மாவத்தையிலும் கசினோ சூதாட்டம் பந்தயத்துடன் இரண்டு ஹோட்டல்கள் அமைக்கப்படுமென தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு நாட்டுக்குள் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்திற்குள்ளும் வெளியேயும் இதனைக் கூட்டாக எதிர்த்தது. அதேபோன்று மகாநாயக்க தேரர்களும் அனைத்து மதத் தலைவர்களும் எதிர்த்தனர்.
கசினோ சூதாட்டம் சட்டமாக்கப்பட்டால் நாட்டில் விபசாரம் மற்றும் சமூக கலாசார சீரழிவுகள் தலை தூக்கி நாடு சின்னாபின்னமாகும்.
பாதாள உலகக் கோஷ்டிகள் தலைதூக்கும் ஆட்சியாளார்களை தீர்மானிக்கும் சக்தியாக கசினோ சூதாட்டம் மாறும் என இதனால் ஏற்படும் விளைவுகளை நாடு முழுவதும் மக்களுக்கு தெளிவுபடுத்தினோம்.
நாடு முழுவதும் எதிர்ப்புகள் தலை தூக்கியும் அரசாங்கம் இச்சட்ட மூலத்தை நிறைவேற்றுவதை தற்காலிகமாக சுருட்டிக்கொண்டது.
இன்று மீண்டும் இச்சட்ட மூலத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக 3 வர்த்தமானி அறிவித்தல்களை ஜனவரி 30 ஆம் திகதி அரசு வெளியிட்டுள்ளது.
அதில் கசினோ சூதாட்டம் பந்தயம் என்ற சொற்களை அகற்றி அழகான சிங்கள வார்த்தைகளால் மாயாஜாலம் காட்டி கொழும்பில் மூன்று ஹோட்டல்கள் அமைக்கப்படுவதோடு அதனோடு இணைந்த வேறு வசதிகளும் அங்கு ஏற்படுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமையவே எதிர்வரும் 24ம் திகதி இச்சட்ட மூலம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது. இணை வசதிகள் என்பது என்ன என்பதை அரசாங்கம் குறிப்பிட வேண்டும். இது வேறு ஒன்றும் அல்ல. கசினோ சூதாட்டமும் பந்தயமும் என்பதேயாகும்.
அதனை மூடி மறைத்து கசினோ சூதாட்டத்தை அரசாங்கம் சட்டமாக்க முயற்சிக்கின்றது. நாட்டை சீரழிக்கும் இதற்கு அமைச்சரவையிலுள்ள தேசப்பற்றாளர்களும் அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கியுள்ளனர்.
இதன் மூலம் தேசப்பற்றாளர்கள் கசினோ பற்றாளர்களாக மாறியுள்ளனர். அது மட்டுமல்லாது கொத்தமல்லி, வெள்ளைப்பூண்டு, பருப்பு என மக்களின் அத்தியாவசிய பொருட்களிற்கான வரிகளை அதிகரித்துள்ள அரசாங்கம் கசினோ சூதாட்டக்காரர்களுக்கு 10 வருடத்திற்கு மேலான அனைத்து வரிகளிலும் வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளது.
நாய்களின் உணவு வகைகளின் விலைகளை குறைத்து சூதாட்டத்திற்கு வரிவிலக்கு வழங்கப்பட்டுள்ளது. சம்புத்தத்துவ ஜயந்திக்கு ஒழுக்க சீலத்துடன் அணி திரள்வோம் என்ற அரசாங்கம் இன்று அதனை கசினோ சூதாட்டத்திற்கான ஒழுக்க சீலத்துடன் அணி திரள்வோம் என மாற்றிக் கொள்ள வேண்டும். இலங்கையின் பொருளாதார வளர்ச்சியின் மூலோபாயமாக கசினோ சூதாட்டத்தை அரசாங்கம் உயர்த்தியுள்ளது.
எனவே இதனை எதிர்ப்பவர்களை அரசாங்கம் தேசத்துரோகிகளாக முத்திரை குத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
எதிர்வரும் 24 ம் திகதி கசினோ சூதாட்டம் மற்றும் பந்தயம் பிடிக்கும் சட்ட மூலம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது. இதற்கு எதிர்த்து வாக்களிப்போம். அதுமட்டுமன்றி நாட்டை விபசார கலாசாரத்தில் சமூக விரோத செயற்பாடுகளில் தள்ளிவிடும் இதற்கு எதிராக மக்களை அணிதிரட்டுவோம். போராடுவோம்.
இவ்விடயம் தொடர்பில் அரசியல் பேதங்களுக்கு அப்பால் சென்று எதிர்க்க அனைத்து சக்திகளும் முன்வர வேண்டும் என்றும் விஜித ஹேரத் எம்.பி. தெரிவித்தார்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி
.jpg)
Post a Comment