எகிப்திய நீதிமன்றமொன்று முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் தலைவர் மொஹமட் பாடி உட்பட 683 பேருக்கு மரண தண்டனை விதித்து திங்கட்கிழமை தீர்ப்பளித்துள்ளது.
கடந்த ஆண்டு மின்யா நகரிலுள்ள பொலிஸ் நிலையமொன்றின் மீது தாக்குதலை நடத்தியதாக மேற்படி 683பேரும் குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ளனர்.
அத்துடன் கடந்த மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட மரண தண்டனைகளில் 492 மரண தண்டனைகளை மாற்றும் வகையில் இந்த நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அவற்றில் பல ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டுள்ளன.
நீதிபதி யூஸெப் சப்றி தலைமையிலான மேற்படி நீதிமன்றத்தின் வழக்கு விசாரணைகள் மனித உரிமைக் குழுக்களதும் ஐக்கிய நாடுகள் சபையினதும் கடும் கண்டனத்தைச் சம்பாதித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
குற்றஞ்சாட்டப்பட்டவரின் சட்டத்தரணிகள் தமது வாதத்தை சமர்ப்பிப்பது நீதிமன்றத்தால் தடுக்கப்பட்டுள்ளதாகவும் ஒவ்வொரு வழக்கும் சில மணித்தியாலங்கள் மட்டுமே நீடித்ததாகவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்தது.
நீதிமன்றத்துக்கு வெளியே கூடியிருந்த குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் பெண் உறவினர்கள் நீதிமன்ற தீர்ப்பை கேட்டதும் மயங்கி விழுந்துள்ளனர்.
மேற்படி நீதிமன்றத்தால் முன்னெடுக்கப்படும் வழக்கு விசாரணைகள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் கடந்த மாதம் குற்றஞ்சாட்டியிருந்தார். அவை சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தை மீறுவனவாக உள்ளதாக அவர் கூறினார்.
கடந்த வருடம் ஜூலை மாதம் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பைச் சேர்ந்த ஜனாதிபதி மொஹமட் முர்ஸி இராணுவத்தால் ஆட்சி கவிழ்க்கப்பட்டதையடுத்து அந்த அமைப்பைச் சேர்ந்தவர்களை நசுக்கும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் போது நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டதுடன் பல்லாயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
திங்கட்கிழமை மரண தண்டணை விதிப்புக்குள்ளானவர்களில் 50பேர் மட்டுமே தடுப்புக் காவலில் உள்ளனர்.
Post a Comment