முஸ்லிம் சிங்கள மீள் குடியேற்றத்துக்கு கூட்டமைப்பினரும் ஆயருமே தடை: சம்பிக்க

Monday, April 28, 20140 comments



விடுதலைப் புலிகளால் வன்னியிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்கள் அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்பட வேண்டும் அது முஸ்லிம்களின் உரிமையாகும். ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்புமே இதற்கு எதிராக செயற்படுகின்றார்கள் எனக் குற்றம்சாட்டும் ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சம்பிக ரணவக வன்னியில் இந்தியப் பிரஜைகள் ஒரு இலட்சம் பேர் பலாத்காரமாக குடியேற்றப்பட்டது போல் இன்றும் சட்டவிரோதமாக இங்கு வந்து தங்கியுள்ள வெளிநாட்டவர்களை குடியேற்றுவதற்கு எடுக்கப்படும் முயற்சிகளை பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்த வேண்டுமென்றும் அமைச்சர் தெரிவித்தார்.

பத்தரமுல்லையிலுள்ள ஜாதிக ஹெல உறுமயவின் தலைமையத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அதன் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சம்பிக ரணவக இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் வடக்கிலிருந்து புலிப் பயங்கரவாதிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் அவர்கள் வாழ்ந்த சொந்த இடங்களில் மீள் குடியேற்றப்பட வேண்டியதோடு புத்தளத்தில் 1981 க்கு முன்னர் காணப்பட்டதைப் போன்று குடிப் பரம்பலை ஏற்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இதுவே எமது கொள்கையாகும். அத்தோடு வில்பத்து தேசிய வனாந்தரமென்பது பாதுகாக்கப்பட வேண்டிய சொத்தாகும். எனவே, இதனை அழித்து மக்களை மீள் குடியேற்றுவதையும் குடிமனைகளை அமைப்பதையும் ஏற்றுக் கொள்ள முடியாது. அவ்வாறான நடவடிக்கைகள் சட்டவிரோதமானவையாகும்.

அது மட்டுமன்றி தற்போது வில்பத்து வடக்கு மேற்கு பிரதேசங்களில் சரணாலயப் பகுதிகளில் 43 குடும்பங்கள் குடிசைகள் அமைத்து வாழ்கின்றன. இது சட்ட விரோதமான நடவடிக்கையாகும். வனவள இலாகா  மற்றும் மத்திய சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் அனுமதியின்றி வனங்களை அழிக்க முடியாது.  மக்கள் குடியேறவும் முடியாது.

பயங்கரவாதிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களையும் யுத்தத்தால் இடம்பெயர்ந்த சிங்களவர்களையும் மீள வடக்கில் குடியேற்ற விடாது தடுப்பவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்பும் விக்னேஸ்வனுமேயாவர்.  எனவே, வில்பத்து பிரச்சினை தொடர்பில் அரசாங்கத்தில் அங்கம் வகிப்பவரென்ற காரணத்தால் அமைச்சர் ரிஷாத் பதியூதின் மீது விமர்சனங்களை முன் வைப்பது பொருந்தாத விடயமாகும்.

அன்று விடுதலைப் புலிப் பயங்கரவாதிகள் பலத்துடன் இருந்த போது முஸ்லிம் மக்களை காட்டிக்கொடுத்து பிரபாகரனோடு உடன்படிக்கை செய்தவர் தான் ஹக்கீம். எனவே முஸ்லிம்களை பற்றி பேசுவதற்கு அவருக்கு அதிகாரம் இல்லை.

1977 - 1981 ஆம் ஆண்டுகளில் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு அனுப்பப்படவிருந்த இந்தியப் பிரஜைகள் வன்னியில் குடியேற்றப்பட்டனர். இன்றும் அதே போன்ற பிரச்சினை தலைதூக்கியுள்ளது. சுற்றுலா விசாவில் இங்கு வரும் இந்தியர்கள் பாகிஸ்தானியர்கள் மாலைதீவு நாட்டவர்களை  நிரந்தரமாக குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் சூட்சுமமாக நடைபெற்று வருகின்றது.

இது தொடர்பாக பாதுகாப்பு படையினர் விழிப்பாக இருக்க வேண்டும்.

வெளிநாடுகள்
இந்தியா பாகிஸ்தான் சவூதி டுபாய் என வெளிநாடுகளின் உதவியுடன் வடக்கில் நிர்மாணிக்கப்படும் வீடுகளை ஒரு குறிப்பிட்ட இனத்துக்கோ அல்லது தமக்கு வேண்டப்பட்டவர்களுக்கோ வழங்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.

நாட்டின் அரசியலமைப்பின் பிரகாரம் சிங்கள தமிழ் முஸ்லிம் இனங்களின் இன விகிதாசாரத்திற்கமைய குடியேற்றப்பட வேண்டும். அத்தோடு வடக்கிலிருந்து வந்து புத்தளத்தில் வாழும் முஸ்லிம்களால் அங்கு 1980 இல் காணப்பட்ட குடிப்பரம்பலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதனை மீண்டும் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

மன்னாருக்கு ஒரு சட்டம் கொழும்புக்கு ஒரு சட்டம் அமுலில் இருக்க முடியாது. பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட இலங்கை பூராவும் ஒரு சட்டம் தான் அமுலில் இருக்க வேண்டுமென்றும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் பத்தரமுல்ல தயாவங்ச தேரர் மற்றும் மேல் மாகாண சபை உறுப்பினர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க ஆகியோரும் கலந்து கொண்டனர்.  

Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham