ஹக்கீம் முஸ்லிம்கள் எதிர்பார்க்கும் முடிவையே அறிவிப்பார்! - இம்ரான் நம்பிக்கை

Friday, December 19, 20140 comments


முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் முஸ்லிம்கள் எதிர்பார்க்கும் முடிவையே அறிவிப்பார் என கிழக்கு மாகாண சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

நேற்று கிண்ணியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு நம்பிக்கை தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இன்று நாட்டு மக்கள் அனைவரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் முடிவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர் அவரது முடிவு தாமதமாக இருப்பதால் சிலரது நச்சரிப்புக்களையும் அவர் தாங்க வேண்டியுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

அமைச்சர் ரவூப் ஹக்கீம் மனவிருப்பத்தோடு இந்த அரசாங்கத்தில் இணைந்தவரல்லர். அவரது கட்சியிலுள்ள சில சுயநலமிகள் கட்சியை உடைத்துக்கொண்டு வெளியேறி கட்சியை சின்னாபின்னமாக்கி விடும் நிலைமையை அவதானித்து கட்சியைப் பாதுகாப்பதற்காகவே அரசில் இணைந்தார். இதனால் தான் கண்ணை விழித்துக் கொண்டு குழியில் விழுந்ததாகக் கூட அவர் கூறியுள்ளார்.

18 ஆவது தித்தத்தம் வெற்றி பெற பிரதான பங்களிப்பு வழங்கியது முஸ்லிம் காங்கிரஸ் தான். அதனால் தான் இன்று மகிந்த ராஜபக்ஷவால் மூன்றாவது தடவையும் வேட்பாளராக நிற்க முடிகின்றது. எனினும் இந்த நன்றி கெட்ட அரசு இத்தனை பெரிய உதவி செய்த முஸ்லிம் காங்கிரசை கௌரவத்தோடு நடத்த வில்லை.

கிழக்கு மாகாண சபை அரச சார்பு சபையாக இருப்பதற்கும், கமநெகும சட்ட மூலம் அங்கீகரிக்கப் படுவதற்கும் பிரதான பங்களிப்பு வழங்கியது முஸ்லிம் காங்கிரஸ் தான். இதையெல்லாம் அனுபவித்த அரசு முஸ்லிம் காங்கிரசை கரிவேப்பிலை போன்று பயன்படுத்தத் தொடங்கி விட்டது.

இந்த மன வேதனை அமைச்சர் ஹக்கீமுக்கு உண்டு. எனவே, அவர் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் சரியான முடிவை ஏற்கனவே எடுத்திருப்பார் என்பதில் சந்தேகமில்லை.

எனினும், கட்சி விசுவாசம் குறைந்த சிலர் கட்சிக்கு உள்ளேயே இருக்கின்றனர். இவர்கள் இரவில் ஒன்றும், பகலில் ஒன்றும் பேசுகின்றனர். இதனால் உடனடி நடவடிக்கைகளை எடுக்க முடியாத நிலை தலைவர் என்ற நிலையில் அமைச்சர் ஹக்கீமுக்கு உண்டு. முடிவை அறிப்பதற்கு தாமதம் ஏற்படுவதற்கு இதுவே காணமாகும்.

மீண்டும் ஒரு கட்சிப் பிளவு இல்லாத நிலையில் செயற்படுவதே அவரது எண்ணம். இருப்பினும் காலம் நெருங்குவதால் மிகவிரைவில் பொதுமக்கள் எதிர்பார்க்கின்ற முடிவை அவர் அறிவிப்பார் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு எனவும் தெரிவித்துள்ளார்.

Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham