நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்ற எதிர்பார்ப்புடன் இருப்பது மாத்திரமன்றி வாக்காளர்கள் தனது வாக்கினை உரிய முறையில் பிரயோகிக்க வேண்டும் என கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். எச். ஏ. ஹலீம் கோரினார்.
மேலும் ஊழல் மோசடிமிக்க அரசாங்கத்தை தோற்கடிக்கவும் ஜனாதிபதி முறைமையை ஒழிக்கவும் அனைவரும் அணி திரள வேண்டும் எனவும் அவர் வேண்டினார்.
கட்டுகஸ்தோட்டை இனிகலை பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்
நாட்டின் நிலைமை மிகவும் மோசமாக காணப்படுகிறது. இந்நிலையில் ஜனாதிபதி தேர்தல் ஜனவரி 8 ஆம் திகதி நடத்தப்படவுள்ளது.
இந்த தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். அவற்றில் நாட்டில் வாழும் சிறுபான்மை இனத்தவர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாகும்.
சிறுப்பான்மை இனத்தவர்கள் கடந்த காலங்களில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்தனர். அளுத்கம கலவரம் தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரம் உட்பட முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட அடாவடித்தனங்களினால் முஸ்லிம்கள் மனதளவில் பலவீனமடைந்துள்ளனர்.
அதேபோன்று தமிழ் - கிறிஸ்தவ மக்களுக்கு எதிராகவும் பல அடாவடித்தனங்கள் இந்த அரசின் பின்னணியில் இயங்கும் அமைப்புக்கள் மேற்கொண்டு வருகின்றன.
இவையனைத்திற்கும் எல்லை மீறிய அதிகாரமே காரணம். எனவே இந்த அரசியல் முறைமையை மாற்றி அமைக்க வேண்டும்.
இதற்கமைய பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியானவுடன் 100 நாட்களுக்கும் நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட்டு பிரதமர் ஆட்சி முறைமை அறிமுகப்படுத்தப்படும்.
மேலும் தற்போதைய தேர்தல் முறைமையை நீக்கி தொகுதி மட்ட முறைமை அறிமுகப்படுத்தப்படும். நாட்டில் புதிய அரசியல் கலாசாரம் ஏற்படுத்தப்படும்.
எனவே நாட்டில் நிச்சயமாக இம்முறை மாற்றம் ஏற்படும். அதற்காக நாம் அணி திரள வேண்டும்.
நாட்டின் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்கும் போது ரணில் விக்கிரமசிங்க பிரதமராவார். எனினும் இதுவரை ஐ. தே. க. தோல்விக்கான பிரதான காரணம் வாக்காளர்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்களிக்க செல்லாமையாகும்.
எனவே ஐ.தே.க. வெற்றி பெறும் நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று கூறி விட்டு வாக்களிக்கவில்லையெனில் எவ்வித பிரயோசனமும் இல்லை.
ஆகவே அனைவரும் வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று வாக்குகளை உரிய முறையில் பிரயோகிக்க வேண்டும் என்றார்.

Post a Comment