'மைத்திரியின் யுகத்தை தோற்றுவித்து மகிந்தவின் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம்'
Friday, December 19, 20140 comments
மகிந்த ராஜபக் ஷ குடும்ப ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர மைத்திரி யுகத்தை தோற்றுவித்து நாட்டில் சகலரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நல்லாட்சியை உறுதிப்படுத்துவோம் என கூறிய கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். எச். ஏ. ஹலீம் நாட்டில் மாற்றம் ஏற்பட வேண்டுமென்பதே சிறுபான்மையின மக்களின் அபிலாஷையாகும் எனவும் கூறினார்.
ஹாரிஸ்பத்துவ தொகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டமொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
தற்போது நாட்டில் ஜனநாயகம் சட்டம் முழுமையாகவே சீர்குலைந்து காணப்படுகிறது. மக்களுக்கு சுதந்திரமாக செயற்பட முடியாத நிலைமை காணப்படுகிறது. சிறுபான்மை இனத்தவர்களின் மீது அடக்குமுறை பிரயோகம் செய்யப்படுகிறது. ஊடக சுதந்திரம் முழுமையாக இல்லாமல் காணப்படுகிறது.
இவ்வாறானதொரு நிலைமை ஏனைய ஆட்சியின் போது இடம்பெறவில்லை. யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டாலும் சிறுபான்மை மக்களுக்கு நிம்மதியாக சந்தோஷமாக வாழ முடியாதுள்ளது.
மேலும் அபிவிருத்தி என்ற பெயரில் கோடிக்கணக்கில் பணம் கொள்ளையிடப்பட்டு வருகிறது. அதிவேக பாதை என்பது நாட்டிற்கு கட்டாயம் தேவையாகும். இருப்பினும் அவற்றினூடாக செய்யப்படுகிற ஊழல் மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தால் பல அதிவேக பாதைகளை தீர்மானிக்க முடியும்.
அபிவிருத்தி என்ற பெயரில் ஊழல் செய்யும் அரசு அத்தியாவசிய பொருட்களின் மீது வரி விதித்தும் கொள்ளையிடுகின்றது.
எனினும் இலவச சுகாதாரம், கல்விக்கு வரவு செலவு திட்டத்தினூடாக குறைந்தளவிலான நிதியையே ஒதுக்கீடு செய்கிறது.
எனவே அரசாங்கம் மகிந்த ராஜபக் ஷ குடும்ப ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் இதனூடாக நாட்டின் நல்லாட்சியை ஏற்படுத்தும் மைத்திரி யுகமொன்றை ஏற்படுத்த வேண்டும்.
நாட்டில் மாற்றம் ஏற்பட வேண்டுமென்பதே சிறுபான்மை மக்களின் அபிலாஷையாகும் என்றார்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment