தம்புள்ளையில் முஸ்லிகள் அச்சத்தில்
Thursday, November 13, 20140 comments
தம்புள்ளை வாழ் முஸ்லிகள் தற்போது அச்சமும் பீதியும் கலந்த மனப்போக்குக்கு உள்ளாகியிருப்பதாகவும், அண்மைய பேருவளை, தர்காநகர் வன்முறைபோல இங்கும் ஓர் வன்முறை வெடிக்கும் அபாயமுள்ளதாகவும் தம்புள்ளை பள்ளிவாசல் நிர்வாகசபை உறுப்பினர் சட்டத்தரணி புஹாருத்தீன் அமானுல்லா தெரிவித்தார்.
தவிர, தம்புள்ளை முஸ்லிம்களின் சொத்துக்களுக்கும் உடைமைகளுக்கும் பாதுகாப்பற்றதோர் சூழ்நிலை உருவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தம்புள்ளை, முஸ்லிம் வர்த்தக நிலையமொன்றுக்கு துணி வாங்க வந்த யுவதியொருவரிடம், நேற்றைய தினம் குறித்த நிறுவனத்துக்குள் வைத்து சிலர் தப்பாக நடக்க முயன்றதாகக் கூறப்படும் சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று தம்புள்ளை நகரின் கடைகள் அனைத்தும் மூன்று மணி நேரம் மூடப்பட்டிருந்தன.
இதனால், நகரும் வெறிச்சோடியிருந்தது. மட்டுமன்றி, இதற்கு ஆதரவான ஒரு குழுவினராலேயே காலை 11.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணிவரை இக்கடையடைப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருக்கும் நிறுவன உரிமையாளர் உட்பட்ட ஐவர் எதிர்வரும் 22ஆம் திகதிவரை விளக்க மறியலில் வைக்கப்பட்டிருக்கின்றனர்.
இதேநேரம், தம்புள்ளை நகராதிபதி மற்றும் நகரசபை எதிர்க்கட்சித் தலைவர்களின் ஏற்பாட்டில் அங்கு இன்று ஆர்ப்பாட்டப் பேரணியொன்றும் இடம்பெற்றது.
மேற்படி சம்பவம் நடைபெறும் தறுவாயில் பொதுபலசேனா அமைப்பினரும், ஞானசார தேரரும் தம்புள்ளையை அண்டிய பிரதேசமொன்றில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment