ஜனாதிபதி தேர்தல்: நாட்டின் நலனுக்கமைய தீர்மானம் எடுப்போம்-பீ.எம்.ஜே.டி
Sunday, November 16, 20140 comments
நாட்டின் நலனையும், பொது மக்களது அபிலாஷைகளையும் மையமாக வைத்து நீதிக்கும் அபிவிருத்திக்குமான மக்கள் அமைப்பு (பீ.எம்.ஜே.டி) நல்லதொரு தீர்மானத்திற்கு வரும் என அவ்வமைப்பின் பொதுச் செயலாளர் இர்பான் காதர் தெரிவித்தார்.
அவருடனான நேர்காணல் வருமாறு,
கேள்வி: ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான நீதிக்கும் அபிவிருத்திக்குமான மக்கள் அமைப்பின் தீர்மானம் என்ன?
இன்னும் உறுதியான தீர்மானத்திற்கு வரவில்லை. ஜனாதிபதித் தேர்தல் குறித்து தேசிய ரீதியாகவுள்ள கட்சிகள் மேற்கொண்டு வருகின்ற காய்நகர்த்தல்கள், உள்ளூர் பொதுமக்களின் எதிர்பார்ப்புக்களை ஆராய்ந்து வருகின்றோம். நாட்டின் நலனையும், பொது மக்களது அபிலாஷைகளையும் மையமாக வைத்து நல்லதொரு தீர்மானத்திற்கு வருவோம்.
குறிப்பாக, எங்களது அமைப்பின் கொள்கைகள், செயற்பாடுகளுடன் ஒத்துவருகின்ற பல அமைப்புக்கள் இலங்கையில் செயல்பட்டு வருகின்றன. அவற்றுடன் கலந்துரையாடி, நாட்டின் தேசிய நலன், சமூகங்களிடையிலான ஒற்றுமை போன்றவற்றை கருத்தில் கொண்டு, நல்லதொரு நிலைப்பாட்டை முன்வைப்பதற்கு சிறந்ததொரு சந்தர்ப்பமாகவும் நாங்கள் இந்த ஜனாதிபதித் தேர்தலைப் பார்க்கின்றோம்.
கேள்வி: நீங்கள் ஆதரிக்கப்போகும் வேட்பாளரிடத்தில் எதிர்ப்பார்ப்பது?
இன மத வேறுபாடுகளுக்கு அப்பால் இருந்து, நாட்டின் நலனை மையப்படுத்தி இந்தத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. குறிப்பாக, நிறைவேற்று ஜனாதிபதி முறையை இல்லாதொழித்தல், ஊழல் மோசடிகளை இல்லாதொழித்து, சுபீட்சமான இலங்கையைக் கட்டியெழுப்புதல், சிறுபான்மையினருக்கு எதிராக நடைபெற்று வருகின்ற இனவாத நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தல், சகவாழ்வுக்கும், இந்நாட்டில் வாழ்கின்ற சகல இனமக்களதும் அபிலாஷைகளுக்கும் முக்கியத்துவமளித்தல் போன்ற பொதுவான பல விடயங்களில் கவனம் செலுத்தப்படும்.
கேள்வி: ஜனாதிபதி தேர்தலில் உங்கள் இயக்கம் பங்குகொள்கின்றமைக்கான காரணம் என்ன?
எமது பிராந்திய மக்கள் மிக நீண்டகாலமாக அரசியல் ரீதியாக பின்தள்ளப்பட்டுள்ளனர். சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் வாக்குகளைப் பெற்றுக்கொண்டு, ஆசனங்களில் அமர்ந்து கொள்வதற்காகத்தான் எமது மக்களைப் பயன்படுத்துகின்றார்கள். இந்நிலை மாற்றமடைய வேண்டும். மத்திய பிராந்தியத்தில் அரசியல் விழிப்புணர்வையும், வழிகாட்டலையும் வழங்க வேண்டும் என்ற நோக்கில்தான் எமது அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. எனவே, இந்த ஜனாதிபதித் தேர்தல் குறித்து ஒரு தீர்மானம் மேற்கொள்ள வேண்டியதொரு பொறுப்பு எமக்கிருக்கின்றது.
அத்துடன், இந்தத் தேர்தலில் ஒவ்வொரு அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகளினதும் தீர்மானங்களும் முக்கியத்துவம் வாய்ந்தவைகளாகவே இருக்கும் என்பது நிச்சயம்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment