நல்லாட்சியை நிறுவுவதற்கான திட்டத்தில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி
Friday, November 14, 20140 comments
அரசாங்கம் ஜனாதிபதித் தேர்தல் ஒன்றினை அவசரமாக நடத்துவதற்கான சகல ஏற்பாடுகளையும் செய்துகொண்டிருக்கும் இத்தருணத்தில், அவ்வாறான ஒரு தேர்தலுக்கான அவசரமும் அவசியமும் நாட்டு மக்களுக்கு இல்லை, ஆனால் மக்களின் நலன் கருதி உடனடியாகத் தீர்க்கப்படவேண்டிய பிரச்சினைகள் ஏராளம் இருக்கின்றன என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
நீதித்துறையின் சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளதாக மக்கள் உணர்கிறார்கள். மக்களின் பொருளாதார நிலை வளப்படுகின்ற வகையில் நாட்டின் அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படவில்லை.
ஊழலும் மோசடியும் வீண் விரயமும் உச்சத்தில் இருக்கின்றன. அதிகாரத் துஷ்பிரயோகம் மலிந்து காணப்படுகின்றது. நாட்டின் மிகப் பெறுமதியான சொத்துக்களும் வளங்களும் குறைந்த தொகைகளுக்கு விற்கப்படுகின்றன அல்லது குத்தகைக்கு கொடுக்கப்படுகின்றன.
நாட்டின் நிலையான அபிவிருத்திக்கு அவசியமான நிரந்தர சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் இல்லாதொழித்து சகவாழ்வுகளை அழித்தொழிக்கும் நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் இடமளித்துள்ளது.
இவ்வாறு நாட்டினதும் மக்களினதும் எதிர்கால சந்ததிகளினதும் நலன்களைப் பாதிக்கும் மோசமான அரசியல் நெருக்கடிக்குள் நாடு சென்றுள்ளது. இந்தநிலையிலிருந்து நாட்டினைப் பாதுகாப்பதும் விடுவிப்பதும் இந்த நாட்டிலுள்ள ஒவ்வொரு பிரஜையின் மீதுள்ள தலையாய கடமையாகும்.
அந்தவகையில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, மக்களின் நலன்களை உத்தரவாதப்படுத்தும் நல்லாட்சி விழுமியங்களின் அடிப்படையில் சட்டத்தின் ஆட்சிமுறையொன்றினை நிறுவும் நோக்கில் செயற்படும் ஒரு அரசியல் இயக்கம் என்ற வகையில் நாடு எதிர்நோக்கியுள்ள அரசியல் நெருக்கடியிலிருந்து நாட்டையும் மக்களையும் விடுவிப்பதற்கான முயற்சியில் களமிறங்கியுள்ள தேசிய சக்திகளுடன் இணைந்து செயற்படுவதற்கு முன்வந்துள்ளது.
இவ்வாறு நாடு ஒரு அரசியல் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதற்கான அடிப்படைக் காரணம் தற்போது நடைமுறையிலுள்ள அரசியல் அமைப்பின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையும் அது கொண்டுள்ள அபரிமிதமான அதிகாரங்களும், அவ்வதிகாரங்களை மேலும் வலுப்படுத்தத்தக்கதான 18வது திருத்தச்சட்டமுமாகும்.
எனவே தற்போதுள்ள நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்கி, 17வது திருத்தச் சடட்டத்தினூடாக ஸ்தாபிக்கப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்களை மீண்டும் உருவாக்கி, தேர்தல் முறைகளிலும் தேவையான மாற்றங்களை ஏற்படுத்தி ஜனநாயகத்தையும் மக்கள் சுதந்திரத்தையும் தேசிய ஒற்றுமையையும் கட்டியெழுப்பக்கூடிய ஒரு தேசிய பொது வேலைத்திட்டத்தில் சகல எதிர்க்கட்சிகளும், சிவில் சமூக அமைப்புக்களும், தொழிற் சங்கங்களும் அணிதிரண்டு வருகின்றன.
இவ்வாறு இன்று காலத்தின் தேவையாகவும் நாட்டின் முதன்மைப்படுத்தப்பட்ட விவகாரமாகவும் மாறியுள்ள இத்தேசிய நிகழ்ச்சித் திட்டத்தில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியும் தன்னை இணைத்துக்கொண்டுள்ளது.
அந்தவகையில் கோட்டை நாக விகாராதிபதி மதிப்பிற்குரிய மாதுலுவாவே சோபித தேரரின் தலைமையிலான சமூக நீதிக்கான தேசிய இயக்கம் மேற்கொண்டுள்ள முன்னெடுப்புக்களிலும் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் தூய நாளைக்கான தேசிய இயக்கத்தின் ஸ்தாபகருமான மதிப்புக்குரிய அத்துரலிய ரத்ன தேரர் மேற்கொண்டுள்ள முன்னெடுப்புக்களிலும் பங்களிப்புச் செய்வதற்கு நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் ஒன்றினை நடத்துவதற்குப் பதிலாக 19வது திருத்தச் சட்டத்தினூடாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களை வரையறுத்து பாராளுமன்றத்திற்கும் அமைச்சரவைக்கும் அதிகாரங்களை அளிக்கத்தக்க வகையிலும், தேர்தல் முறையில் மாற்றங்களைக் கொண்டுவருவதற்கும் அரச மற்றும் பொது நிறுவனங்களில் காணப்படும் ஊழல், மோசடி, அதிகாரத் துஷ்பிரயோகம், வீண்விரயம் என்பவற்றினைத் தடுப்பதற்கான சட்டரீதியான ஏற்பாடுகளைச் செய்யவும் முன்னெடுத்துவரும் அரசியல் வேலைத்திட்டத்திலும் தனது ஆதரவை வழங்க நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தீர்மானித்துள்ளது.
இந்த அரசியல் முன்னெடுப்புக்கள் தேசிய நலன்களை முன்னிறுத்திய வேலைத்திட்டங்கள் என்பதாலும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் அடிப்படைக் கொள்கைகளுடன் அவை உடன்பட்டுச் செல்வதாலும் இந்த முன்னெடுப்புக்களில் இணைந்து பணியாற்ற நல்லாட்சிக்கான தேசிய முன்னணி முன்வந்துள்ளது.
மேலும் 19வது திருத்தச் சட்டப் பிரேரணைக்காக முன்வைக்கப்பட்டுள்ள முன்மொழிவுகள் குறித்து சமூகத்தளத்தில் கலந்துரையாடல்களை நடத்தி நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தனது யோசனைகளையும் விரைவில் முன்வைக்கவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment