நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஏற்பாட்டில் இலங்கையின் சமகால அரசியல் நிலைப்பாடும் மாற்று அரசியல் வேலைத்திட்டத்தின் அவசியப்பாடும் என்ற தொனிப்பொருளில் பிரமுகர்களுடனான சந்திப்பு ஒன்று நேற்றுமுன்தினம் 29.09.2014 மாலை 6.30 மணியளவில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் கொழும்புக் காரியாலயத்தில் இடம்பெற்றது.
நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தேசிய அமைப்பாளர் அஷ்ஷெய்க் MBM.பிர்தௌஸ் (நளீமி) அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முன்னணியின் தலைமைத்துவ சபையின் பிரதித்தலைவர் அஷ்ஷெய்க் MJM.மன்சூர் (நளீமி), அதன் பொதுச்செயலாளர் அஷ்ஷெய்க் MR.நஜா முஹம்மத், பதுளை மாவட்ட செயற்குழு உறுப்பினர் சட்டத்தரணி இம்தியாஸ் உள்ளிட்ட தலைமைத்துவ சபை உறுப்பினர்களுடன் சட்டத்தரணிகள், சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் சிவில் சமூக நிறுவனங்களின் முக்கிய பிரதிநிதிகள் மற்றும் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது நல்லாட்சிக்கான தேசிய முன்னையின் கடந்தகால செயற்பாடுகள் தொடர்பில் விரிவாக விளக்கமளிக்கப்பட்டதோடு தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசிய கட்சி என்பனவற்றுக்கிடையில் செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு புரிந்துணர்வு உடன்படிக்கைகள் தொடர்பிலும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பில் கலந்துகொண்ட பிரமுகர்களினால் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கும் விரிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டது.
அதேவேளை நாட்டின் தற்போதைய அரசியல் சூழலில் நல்லாட்சித் தத்துவத்தின் அடிப்படையிலும் விழுமிய அடிப்படையிலும் அரசியல் முன்னெடுப்புக்களை முன்னெடுப்பது சம்பந்தமாக தமது நிலைப்பாடுகளை பிரமுகர்கள் முன்வைத்ததோடு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தற்போதைய முன்னெடுப்புக்கள் தொடர்பில் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.
அத்துடன் இம்முன்னேடுப்புக்கள் எவ்வித இடையூறுகளுமின்றி உறுதியான கொள்கை நிலைப்பாட்டோடு முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதையும் அவர்கள் வலியுறுத்தினர்.

Post a Comment