பொதுபலசேனாவின் சங்க சம்மேளன மாநாட்டின்போது எடுக்கப்பட்ட தீர்மனங்கள் அடங்கிய யோசனையை ஐக்கியதேசியக் கட்சி ஒருபோதும் பரிசீலனைக்கு எடுக்கப்போவதில்லை என கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஐ.தே.க.வின் தவிசாளருமான கபீர் ஹாஸிம் தெரிவித்தார்.
ஐ.தே.க. செயலாளர் கடந்தவாரம் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாடொன்றின்போது பொதுபலசேனாவின் யோசனைகளை தாம் பரிசீலிக்கவிருப்பதாக தெரிவித்திருந்தார். இந்த கருத்துகள் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இது தொடர்பில் நாம் ஐ.தே.க. செயற்குழு உறுப்பினர் கபீர் ஹாஸிமிடம் வினவினோம். இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஐக்கிய தேசிய கட்சி ஒரு போதும் இனவாதத்தை கையில் எடுக்காது. ஏனெனில் அக்கட்சி இன ஐக்கியத்தினால் உருவாக்கப்பட்ட கட்சியாகும். இதனை தொடர்ந்தும் நாம் பேணி வருகின்றோம். இன ஐக்கியத்தை சீர்குலைக்க தலைமைத்துவம் ஒருபோதும் இடமளிக்காது. இது இவ்வாறிருக்க பொது பல சேனா அமைப்பு பிரகடனப்படுத்தியிருக்கும் யோசனைகளை ஐ.தே.க. பரிசீலிக்கவிருப்பதாக எமது கட்சியின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டதை செய்திக்குறிப்புகளில் பார்த்தோம். இதனையடுத்து பலரும் என்னை தொடர்புகொண்டு இதுபற்றி கேட்டனர்.
இவ்விவகாரம் தொடர்பில் நான் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரம சிங்கவிடம் கேள்வியெழுப்பினேன். இதன்போது 'பொது பல சேனாவுடன் எந்தவொரு பேச்சுக்கும் இடம் கிடையாது. அவ்வாறு அவர்களின் யோசனைகளை பரிசீலிப்பதாகவிருந்தால் கட்சியின் செயற்குழுவில் ஆராயப்பட்டிருக்கவேண்டும். எனினும் அவ்வாறு எந்த விடயமும் ஆராயப்படவில்லையே' என்று அவர் பதிலளித்தார்.
தலைமையை தாண்டி கட்சிக்குள் பொதுபலசேனாவின் யோசனைகளை கொண்டுவர முடியாது. ஒன்றை நாம் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. பொதுபலசேனாவினர் எமது தலைமையகமான ஸ்ரீ கொத்தாவுக்குள் நுழைய முற்பட்டபோது அவர்களை நாம் அடித்து துரத்தியிருக்கிறோம். அவர்களுக்கு எங்கள் கட்சியிடம் எவ்விதமான வரவேற்பும் கிடையாது.
திஸ்ஸவின் கருத்து ஒருவேளை அவரின் தனிப்பட்ட கருத்தாக இருக்கலாமே தவிர கட்சியின் நிலைப்பாடாக கருத முடியாது என்றார்.
இதனிடையே இவ்விவகாரம் தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயலாளர் விமர்சனமொன்றை வெளியிட்டிருந்தார்.
அதில், பொதுபல சேனாவுடன் அரசாங்கத்திற்கு தொடர்பு இருப்பதாக உத்தியோகபூர்வமற்ற செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்ற நிலையில் ஐக்கிய தேசிய கட்சி அவ்வமைப்புடன் உத்தியோகபூர்வமாக இணைய முயற்சிப்பதாக குற்றம் சுமத்தியிருந்தார்.

Post a Comment