அபூ அப்துல்லாஹ்
ஊவா மாகாணத்தில் பதுளை மாவட்டத்தில் 37,000 முஸ்லிம் வாக்குகளும், மொனராகலை மாவட்டத்தில் 11,000 முஸ்லிம் வாக்குகளுமே இருக்கின்றன. இவற்றுள் 50% முதல் 60% வரையான வாக்குகளே அளிக்கப்படும் வாக்குகளாகும், அதாவது பதுளை மாவட்டத்தில் 20,000 வாக்குகளும் மொனறாகல மாவட்டத்தில் 7,000 வாக்குகளுமே கணக்கில் கொள்ளப்படவேண்டும். இத்தகைய சொற்பமான வாக்குகளை ஊவா மாகாண முஸ்லிம்கள் மாவட்ட ரீதியில் தம்முடைய நலன்களைப் பெற்றுக்கொள்வதற்காக எவ்வாறு பயன்படுத்தப் போகின்றார்கள் என்பதில் மிகவும் கூடுதல் கவனம் அவசியப்படுகின்றது.
தேர்தலுக்கான அறிவுப்புகள் வருவதற்கு முன்னர் ஊவா தேர்தல் குறித்து பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. ஊவா முஸ்லிம்களை ஸ்த்திரமான அரசியல் ஒழுங்கினை நோக்கி வழிநடாத்தவேண்டி பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும் இறுதியாக வழமைபோன்ற சுயநல நோக்கோடு கூடிய, விட்டுக்கொடுப்புகளுக்கும் தூர நோக்கிற்கும் உடன்படாத அரசியல் சக்திகள் தத்தமது வழிகளிலே சென்று முடிவுகளை மேற்கொண்டு இப்போது மக்கள் தீர்ப்பிற்காக முன்வந்திருக்கின்றார்கள். இந்த நிலையில் மக்கள் சீராக அறிவூட்டப்படவேண்டும். மக்கள் தமது தெரிவுகளை வழமைபோன்று அற்பத்தனமான விடயங்களுக்காக மேற்கொள்ளாது சமூக நலனுக்கான தெரிவாக அவற்றை மேற்கொள்ளவேண்டும். அது மாத்திரமல்ல அத்தகைய தெரிவின் பங்காளிகளாகவும் மக்கள் இருக்கவேண்டும்.
தேர்தல் களத்தை எடுத்துக்கொண்டால் அங்கே பலவிதமான வியூகங்கள் முஸ்லிம்களை மையப்படுத்தி முன்னெடுக்கப்படுகின்றன. அவற்றுள் மூன்று முக்கிய வியூகங்கள் குறித்து இப்பத்தியில் கவனம் செலுத்துவோம்.
1. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்துள்ள முஸ்லிம் அணியினர்
2. ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துள்ள் முஸ்லிம் அணியினர், மற்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினர்
3. மலையக முஸ்லிம் கவுன்ஸிலின் ஏற்பாட்டில் இணைந்திருக்கும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அணியினர்.
குறிப்பாக பதுளை மாவட்ட முஸ்லிம்களின் அடிப்படைப் பிரச்சினைகளை நோக்கும் போது மிகப் பிரதானமான விடயங்களாக பின்வரும் இரண்டு விடயங்களை நாம் குறிப்பிடலாம்
1. ஏனைய சமூகங்களுடன் நல்லிணக்கமான சகவாழ்வு
2. முஸ்லிம்களுடைய அரசியல் இருப்பை உறுதி செய்யும் அரசியல் பிரதிநிதித்துவம்
இந்த இரண்டு விடயங்களையும் நடைபெறவிருக்கும் ஊவா மாகாணசபைத் தேர்தலில் பதுளை, மொனறாகல மாவட்ட முஸ்லிம்கள் எவ்வாறு கையாளப்போகின்றார்கள் என்பதே அவர்கள் உவா மாகாணசபைத் தேர்தலை மிகச்சிறப்பாக பயன்படுத்தினார்களா இல்லையா என்பதைத் தீர்மானிக்கப்போகின்றது.
குறிப்பாக பதுளை மாவட்டத்தில் இனநல்லுறவு வெகுவாகப் பாதிப்படைந்திருக்கின்றது. சிங்கள -முஸ்லிம் சமூக உறவுகளும் தமிழ்-முஸ்லிம் உறவுகளும் அங்கே சிறப்பானதாக இல்லை என்பதை நாம் காணுகின்றோம்.
குறிப்பாக பொதுபலசேனாவின் பல ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் பதுளை மாவட்ட முஸ்லிம்களை இலக்கு வைத்து அமைந்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. எனவே சமூக நல்லிணக்கம் என்பது மிகவும் அவசியமான ஒன்றாக இம்மாவட்டத்தில் உணரப்படுகின்றது. அதேயளவிற்கு ஸ்திரமான முஸ்லிம் சமூக அரசியல் இருப்பை வெளிப்படுத்துவதற்கு போதிய அரசியல் பிரதிநிதித்துவம் இல்லாமல் இருப்பதும் அங்கே காணப்படும் குறைபாடாக அமைந்திருக்கின்றது.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்துள்ள முஸ்லிம் அணியினர் ஊவா மாகாணசபைத் தேர்தலில் முஸ்லிம் பிரதிநிதியொருவரை களமிறக்கத் தவறியிருக்கின்றனர். அங்கிருந்து கிடைக்கும் தகவல்களின் பிரகாரம் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தனியாக களமிறங்கியிருக்கும் முஸ்லிம் காங்கிரஸ் கூட்டணியினருடன் இணைந்து சுதந்திரக் கட்சி முஸ்லிம் வேட்பாளர்களைக் களமிறக்க தீர்மானித்திருந்தனர் என்றும் அதற்கு குறித்த கூட்டணியினர் ஆரம்பத்தில் சம்மதம் தெரிவித்திருந்தனர் என்றும், இறுதித் தறுவாயில் மறுப்புத் தெரிவித்தனர் என்றும் அதனாலேயே இரு பக்கத்திலும் சுதந்திரக் கட்சியின் அங்கத்தவர்களை இணைக்க முடியாது போனது என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இதனை உறுதிசெய்யும் வகையில் அமைச்சர் நிமல்சிறிபால டி சில்வா பல மேடைகளில் நாம் முஸ்லிம் வேட்பாளர்களை தனியாக நிறுத்தியுள்ளமையால் எமது அணியில் முஸ்லிம்களை இணைத்துக் கொள்ளவில்லை என பகிரங்கமாக கூறிவருகின்றார்.
எனினும் சுதந்திரக் கட்சியின் முஸ்லிம் அணியினர் பதுளை மாவட்டத்தில் முஸ்லிம் அல்லாத ஆனால் முஸ்லிம்களின் விவகாரங்களை கருத்திலெடுத்து சேவையாற்றக்கூடிய வேட்பாளர்களை ஆதரிப்பது எனத் தீர்மானித்திருக்கின்றார்கள். அந்தவகையில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, அமைச்சர் டிலான் பெரேரா போன்றோருடன் அவர்கள் செயலாற்றவுள்ளார்கள் என அறியக் கிடைக்கின்றது. இது சிறப்பான முயற்சியாகவே நோக்கப்படுகின்றது.
இதனை மேலும் உறுதி செய்யும் வகையில் பதுளை மாவட்டத்தின் சுத்ந்திரக்கட்சி முஸ்லிம் அணியினர் தமது செயற்பாடுகளை மேலும் ஒழுங்குபடுத்தி முன்னெடுப்பது சிங்கள- முஸ்லிம், தமிழ்- முஸ்லிம் உறவைக் கட்டியெழுப்ப வாய்ப்பாக அமையும்.
ஐக்கிய தேசியக் கட்சி பதுளை மாவட்டத்தில் இரண்டு முஸ்லிம் வேட்பாளர்களையும், மொனறாகல மாவட்டத்தில் ஒரு முஸ்லிம் வேட்பாளரையும் களமிறக்கியிருக்கின்றது. அதுமாத்திரமன்றி அண்மையில் ஊவா மாகாண சபைத் தேர்தலை முன்னிறுத்தி நல்லாட்சிக்கான தேசிய முன்னணியுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தையும் ஐக்கிய தேசியக் கட்சி மேற்கொண்டிருக்கின்றது. இதன் மூலம் ஊவா மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெரும்பட்சத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை அது உறுதிசெய்திருக்கின்றது. அது மாத்திரமன்றி பொதுவாக குறித்த ஒப்பந்தத்தில் இன நல்லிணக்கத்திற்கான பலவிடயங்களில் உடன்பாடுகள் எட்டப்பட்டிருக்கின்றன.
பொதுவாக நோக்குமிடத்து ஐக்கிய தேசியக் கட்சி வெளிப்படைத்தன்மையுடன் கூடிய ஒரு ஒப்பந்தத்தை முஸ்லிம் தரப்பினருடன் மேற்கொண்டிருப்பது ஊவா முஸ்லிம்களை மேலும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைத்திருக்கின்றது என்றே சொல்லவேண்டும். ஊவா மாகாண முஸ்லிம்களின் வாக்குகள் ஐக்கிய தேசியக் கட்சிக்கான வெற்றி வாக்குகளாக அமையும் வாய்ப்பும் இதன் மூலம் ஏற்பட்டிருக்கின்றது. பதுளை மாவட்ட முஸ்லிம்களின் வாக்குகளில் இரண்டு முஸ்லிம்களுக்கானதாக இருப்பினும் மீதமுள்ள ஒரு வாக்கு சகோதர இன வேட்பாளருக்கானதாகவே அமையவுள்ளது. அதேபோன்று மொனராகல மாவட்டத்தின் முஸ்லிம் வாக்குகள் ஒரு முஸ்லிம் வேட்பாளருக்கானதாகவும், ஏனைய இரண்டு சகோதர இன வேட்பளர்களுக்கானதாக அமையும். உண்மையில் இவை நல்லிணக்கத்திற்கான வாக்குகளாகவே அமையவிருக்கின்றன.
எனவே குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி என்பன ஊவா மாகாணத்தில் சிறப்புமிக்க முன்மாதரியொன்றினை ஏற்படுத்தியிருக்கின்றார்கள் என்றே கூறவேண்டும். இதன் பயன்பாட்டினை முஸ்லிம்கள் சரிவர அடைந்துகொள்வதற்கு முன்வரவேண்டும்.
மலையக முஸ்லிம் கவுன்ஸிலின் ஏற்பாட்டில் இணைந்திருக்கும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அணியினர். இந்தக் கூட்டணி குறித்து ஊவா மாகாண முஸ்லிம்களும், இலங்கை முஸ்லிம்களும் அவ்வளவு அலட்டிக்கொண்டதாக அறியக்கிடைக்கவில்லை. முஸ்லிம் காங்கிரஸ் கடந்த கிழக்கு, வடக்கு, வடமேல், மேல், மத்திய மாகாணங்களில் தனித்து வேட்பாளர்களை நிறுத்தியது. அரசுக்கெதிரான பிரச்சாரங்களைக் கொட்டித் தீர்த்தது. மக்களை அதிகமாக உணர்ச்சிவசப்படுத்தியது. தேர்தலின் பின்னர் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினருடன் சரணாகதி அரசியல் நடாத்திக் கொண்டிருக்கின்றது.
அதே போன்றுதான் அமைச்சர் றிஷாத் பதியுத்தீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு மிகவும் நெருக்கமான ஆளும் தரப்பின் பங்காளிக் கட்சியாகும். எனவே இவர்கள் இருவரும் இணைந்து புதிய சின்னத்துடன், பொது வேட்பாளர் என்ற கோஷத்துடன் களமிறங்கியிருப்பதை மக்கள் கோமாளித்தனமாகவே பார்க்கின்றார்கள்.
ஏனெனில் ஊவா மக்களின் அடிப்படை அபிலாஷைகளாகிய இனங்களுக்குடையிலான நல்லிணக்கம், முஸ்லிம்களின் அரசியல் இருப்பை உறுதிசெய்யும் உறுதிப்படுத்தப்பட்ட பிரதிநிதித்துவம் ஆகிய இரண்டு முக்கிய விடயங்களையும் முதன்மைப்படுத்தாமல் சமூக ஒற்றுமை என்கின்ற வேறு ஒரு விடயத்தை இக்கூட்டணி தன்னுடைய பிரதான செய்தியாக மாற்றியுள்ளமை மக்கள் மத்தியில் பல்வேறு ஐயப்பாடுகளை உருவாக்கியிருக்கின்றது.
ஊவா முஸ்லிம்கள் தம்மை ஏனைய இனங்களை விட்டும் தனிமைப்படுத்தும் அமைப்பாகவே இக்கூட்டணியினை நோக்குகின்றார்கள். ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு வாக்களிப்பதாயின் அவர்களுடைய சின்னமாகிய வெற்றிலைச் சின்னத்திற்கு நேரடியாக வாக்களிக்க முடியும். புதிய கூட்டணியினூடாகத்தான் வாக்களிக்கவேண்டிய தேவை எமக்குக் கிடையாது என மக்கள் பகிரங்கமாகவே தெரிவித்து வருகின்றார்கள். இந்த அடிப்படைகளை வைத்து நோக்குகின்றபோது எல்லோரும் எதிர்பார்த்தது போல புதிய முஸ்லிம் கூட்டமைப்பு ஊவா தேர்தலில் செல்வாக்கு அற்ற ஒருவிடயமாக மாறிவிட்டது.
இப்போது ஊவா முஸ்லிம்களுக்கு முன்னாலிருக்கின்ற தெரிவுகள் இரண்டாகும்.
ஒன்று ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு வாக்களிப்பது. இதன் மூலம் நல்லிணக்கத்திறான பலமான உறவுகளை ஆளும் தரப்பினருடன் ஏற்படுத்திக் கொள்வது. எதிர்வரும் காலங்களில் ஆளும்தரப்பினூடாக முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வது என்கின்ற ஒரு தெரிவும்.தற்போதைய எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களிப்பது: இதன் மூலம் களத்தில் உள்ள ஒரு வேட்பாளரையாவது வெற்றிபெறச் செய்வது, அதன் மூலம் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்வது, மேற்கொள்ளப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை முழுமையாக அமுலாக்கம் செய்வதனூடாக சமூக நல்லிணக்கத்தை உறுதிசெய்வது என்கின்ற மற்றுமொரு தெரிவும்.
இவ்விடயத்தில் ஊவா மாகாண முஸ்லிம்கள் மிகவும் பொறுப்புணர்வுடன் செயலாற்ற வேண்டும்.தங்களுக்கு முன்னால் உள்ள சவால்களை எதிர்கொள்வதற்கு தம்மை தயார்படுத்திக் கொள்தல்வேண்டும். சிறப்பான தெரிவுகளின் மூலம் ஊவா மக்களின் அரசியல் முதிர்ச்சி உலகிற்கு பறைசாற்றப்படும்.
Post a Comment