கருமலையூற்று பள்ளிவாசலும் கதையளக்கும் தலைமைகளும் (சிறப்பு கட்டுரை)
Thursday, September 4, 20141comments
கருமலையூற்று கதை கடந்த வாரம் வரை பெரிதாக பேசப்பட்டது. தற்போது டப் என்று ஆகிவிட்டது. கடந்த ஆகஸ்ட் 17 ஆம் திகதி பள்ளிவாசல் தகர்க்கப்பட்டதென்ற செய்தி வெளியானதையடுத்து அனல் பறக்க அரசியல்வாதிகளின் அறிக்கைகள் வந்தன. ஆனால் இப்போது அரசியல் வாதிகள் எங்கே சென்றனர் என்று கூட தெரியவில்லை.
மட்டுமன்றி கிழக்கு மாகாணத்தில் காரசார விவாதம் ஆகஸ்ட் மாதம் இரண்டாவது அமர்வில் இடம்பெற்றதாக மாகாண சபை உறுப்பினர் ஒருவர் கடந்த வியாழக்கிழமை தெரிவித்தார். 'அடுத்த வாரத்துக்குள் கேஸ் குறைந்து விடும். அதற்குள் மக்களும் பள்ளிவாசலை மறந்துவிடுவார்கள். மாகாண சபை உறுப்பினர்களும் முஸ்லிம்களுக்கு சாதகமான பதில் கிடைத்ததுபோாபேசாமல் இருந்துவிடுவர்' என்றார். அவர் சொன்னது உண்மைதான். இன்று பொது பலசேனாவும் ஹஜ்விவகாரமும் என்ற படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கையில் கருமலையூற்று பள்ளிவாசல் படம் திரையரங்குகளில் இருந்து கழட்டப்பட்டு விட்டது.
இவ்விவகாரம் தொடர்பில் கிழக்கு முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் மற்றும் தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லாஹ் ஆகியோர் இவ்விவகாரத்தை எவ்வாறு கையாளுகின்றனர் என்பதே இப்போது முஸ்லிம்களிடத்திலுள்ள கேள்வியாகும்.
அமைச்சர் ரிஷாட் வெளிநாட்டு பயணமொன்றில் இருக்கின்றார். அமைச்சர் ஹக்கீம் ஊவாவில் தேர்தல் பிரசாரத்தில் பிஸியாக இருக்கின்றார். அமைச்சர் அதாவுல்லா வழமைப்போல் வாய் திறக்காமல் இருக்கின்றார். கிழக்கு முதலமைச்சர் இவ்விவகாரம் குறித்து எவ்வாறு செயற்படுகின்றார் என்பது குறித்து தெரியாதிருப்பதாக குற்றம்சாற்றப்படுகிறது..
கடந்த ஆகஸ்ட் 17 ஆம் திகதி பள்ளிவாசல் தகர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட தையடுத்து ஊர் மக்கள் பள்ளிவாசலை பார்வையிட செல்ல முற்பட்டனர். கருமலையூற்று பகுதி அதியுயர் பாதுகாப்பு வலயமாக்கப்பட்டு இராணுவ கட்டுப்பாட்டில் இருக்கின்றமையினால் அதற்கான அனுமதி கிடைக்கவில்லை. அன்றைய தினம் சில அரசியல்வாதிகளும் குறித்த இடங்களுக்கு செல்ல அனுமதி கேட்டபோதிலும் இராணுவம் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இருந்த போதிலும் சம்பவம் இடம்பெற்று மறுதினம் ஆகஸ்ட் 18 ஆம் திகதி கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத் மாத்திரம் ஸ்தலத்திற்கு செல்ல அனுமதிக்கப்பட்டார்.
பள்ளிவாசல் பகுதிக்கு சென்று வந்த முதலமைச்சர் 'மழை காரணமாக குறித்த பள்ளிவாசல் இடிந்து விழுந்தது' என்று இராணுவத்தினர் தெரிவித்ததாக குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் பள்ளிவாசல் இடிக்கப்பட்டதாக செய்திகள் வெ ளியான கட்ந்த மாதம் 17 ஆம் திகதிக்கு முன்னர் குறித்த பிரதேசத்தில் கடும்மழை பொழிந்தது. இதன்போது கணரக இயந்திரங்கள் அதிபாதுகாப்பு வலயத்திற்குள் சென்றதை அவதானித்ததாக முன்னாள் ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சின்ன மஹ்ரூப் தெரிவித்தார். மட்டுமன்றி இப்பகுதிக்கு குறித்த தினங்களின் இரவுவேளைகளில் ஹெலிகொப்டர்கள் பறந்ததாகவும் குறிப்பிட்டார்.
இதனிடையே கடந்த மாதம் திருகோணமலை மாவட்டத்தில் அபிவிருத்தி குழு கூட்டம் இடம்பெற்றது. இதன்போது குறித்த பள்ளிவாசல் விவகாரம் பேசப்பட்டுள்ளது. இதன்போது பள்ளிவாசல் மக்களிடம் மீள கையளிக்கப்படவேண்டும் என வலியுறுத்தப்பட்டதாக தெரிய வருகின்றது. இந்த விவகாரம் பேசப்பட்டதையடுத்து பள்ளிவாசலை அங்கிருந்து இல்லாமல் செய்ய வேண்டும் என அரச தரப்பினர் தீர்மானித்து விட்டதாக சின்ன மஹ்ரூப் தெரிவித்தார்.
குறித்த இடம் இயற்கை செழுமை நிறைந்த இடமாகும். எனவே அங்கு உல்லாச விடுதிகள் அமைப்பதற்கான திட்டங்கள் அதிகார தரப்பிடம் இருக்கின்றன. எனவே இந்த பள்ளிவாசலை அகற்றுவதே அவர்களின் நோக்கமாக இருப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.
இதனிடையே கிழக்கு மாகாண சபையில் கடந்த வாரம் கருமலையூற்று பள்ளிவாசல் விவகாரம் கொண்டுவரப்பட்டது. அதன்போது காரசாரமான வாத விவாதங்கள் முன்வைக்கப்பட்டன. சபையின் ஆளும், எதிர் தரப்பினர் இன மத வேறுபாடின்றி பள்ளிவாசல் அகற்றப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் தமிழ்தேசிய கூட்டமைப்பினர் குறித்த விவகாரத்தில் முஸ்லிம்களுக்கு சார்பாக குரல்கொடுத்தனர். எதிர்கட்சி தலைவர் தண்டாயுதபானி இதன்போது ஒரு முக்கிய விடயத்தை சுட்டிக்காட்டியிருக்கின்றார். தமிழர்களின் பிரச்சினைகளின்போது முஸ்லிம்கள் அமைதிகாக்க கூடாது. அவ்வாறே முஸ்லிம்களுக்கு பிரச்சினைவரும்போது நாமும் குரல்கொடுப்போம் என குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு கடந்த மாகாண சபை கூட்டத்தில் பள்ளிவாசலை பார்வையிட மாகாண சபை உறுப்பினர்களுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என கோரப்பட்டது. இதற்கு முதலமைச்சர் ஒரு வார கால அவகாசம் கேட்டார். பள்ளிவாசலுக்கு அழைத்து செல்வதாக உறுதி மொழியையும் வழங்கினார். நேற்றோடு ஒருவாரம் கழிந்து விட்டது ஆனால் இதுவரை உறுப்பினர்கள் அங்கு அழைத்து செல்லப்படவில்லை.
இது விடயமாக இராணுவத்திடம் அனுமதிகோரியுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்தார். ஆனால் இன்னும் அனுமதி கிடைக்கவில்லை. விரைவில் மாகாண சபை உறுப்பினர்கள் அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.
முதலமைச்சரே பள்ளிவாசல் அகற்றப்படுவதற்கு முக்கிய காரணமாகும். முதலில் அவர் விழித்துக்கொள்ள வேண்டும் அப்போது தான் கிழக்கில் உள்ள ஏனைய பள்ளிகளையும் முஸ்லிம்களின் உடமைகளையும் காணிகளையும் பாதுகாக்க முடியும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இம்ரான் குற்றம் சுமத்தினார். மட்டுமன்றி இதற்கான பொறுப்பை முஸ்லிம் காங்கிரஸும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் தேசிய காங்கிரஸும் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏனெனில் அவர்களின் ஆதரவுடன்தான் கிழக்கு மாகாண சபையின் அதிகாரத்தை ஆளும் கட்சி பெற்றது என்றும் அவர் தெரிவித்தார்.
இதுவரை கருமலையூற்று பகுதிக்கு அமைச்சர்களான ஹக்கீம், ரிஷாட், பௌஸி, அதாவுல்லாஹ்வோ சென்றதாக தெரியவில்லை. ஊவா தேர்தல் பிரசார கூட்டங்களில் அமைச்சர் ஹக்கீம் இவ்விவகாரம் பற்றி பேசிவருவதாக செய்திகளில் காண்கிறோம்.
சம்பவம் கேள்வி பட்டதையடுத்து பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வர் ஆகியோரை ஸ்தளத்துக்கு செல்லுமாறு பணித்ததாகவும் ஹக்கீம் வெலிமட தேர்தல் பிரசார கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.
சம்பவ தினத்தன்று மேற்படி தௌபீக் (பா.உ) மற்றும் அன்வர் (மா.ச.உ.) ஆகியோ குறித்த பகுதியில் அமைந்துள்ள இராணுவத்தினரிடம் விவகாரம் பற்றி கலந்தாலோசித்தனர்.
திருகோண மலை மாவட்டத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத், ஆளும் கட்சி முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினராக எம்.எஸ் தௌபீக், கிழக்கு மாகாண ஆளும் கட்சி உறுப்பினரான அன்வர், மறைந்த ஆளும் கட்சி மாகாண சபை உறுப்பினர் ஹஸன் மௌலவியின் வெற்றிடத்துக்கு சட்டத்தரணி லாஹிர் என பலரும் இருக்கின்றனர். எதிர்க்கட்சியின் மாகாண சபை உறுப்பினராக இம்ரான் மஹ்ரூப் இருக்கின்றார். மற்றும் பல உள்ளூராட்சி சபை தலைவர்களும் உறுப்பினர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். இருந்தும் பள்ளிவாசலை பாதுகாத்து தர முடியாதுள்ளது.
வெறும் அரசியலுக்கான பேசுபொருளாகவே பள்ளிவாசல்களுக்கு எதிரான நடவடிக்கைகள் இருக்கின்றன. அதனை மட்டும் முஸ்லிம் கட்சிகள் புள்ளி விபரங்களுடன் மக்கள் மத்தியில் பிரஸ்தாபிக்கின்றனர். ஆனால் அதற்கான தீர்வை பெற்றுக்கொடுப்பதில் அக்கறைகாட்டுவதாக தெரியவில்லை.
எது எப்படியோ பள்ளிவாசலில் கைவைக்கப்பட்டுவிட்டது. ஆனால் இதற்கு முஸ்லிம் தலைமைகள் காத்திரமான நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை. இவையெல்லாம் தேர்தலுக்கு தேவையான குறிப்புகள் என்று பதிவு செய்து வைக்கின்றனர் போலும்.
+ comments + 1 comments
tessttt
Post a Comment