ஊவாவில் அதிக தேர்தல் வன்முறைகள் பதிவு; நிலைமை மேசம் எனவும் தெரிவிப்பு
Monday, September 1, 20140 comments
செப்டெம்பர் 20ஆம் திகதி நடக்கவுள்ள ஊவா மாகாணசபைத் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் நடந்துவரும் சூழலில், அப்பிரதேசங்களில் எதிர் கட்சிகளின் அரசியல் அலுவலகங்களை இலக்குவைக்கும் தாக்குதல்கள் அதிகரித்துவருவதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் கூறுகின்றனர்.
ஆகஸ்ட் 29ஆம், 30ஆம் திகதிகளில் வெல்லவாய, மொனராகலை பிரதேசங்களில் 4 ஐக்கிய தேசிய கட்சி அலுவலகங்களும், 5 மக்கள் விடுதலை முன்னணி அலுவலகங்களுமாக மொத்தம் 9 தேர்தல் அலுவலகங்கள் தாக்கப்பட்டுள்ளதாக கஃபே என்ற தேர்தல் கண்காணிப்பு அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த வாரத்தில் 72 மணிநேரத்தில் 21 எதிரணிக் கட்சி அலுவலகங்கள் மொனராகலை மாவட்டத்தில் தாக்கி அழிக்கப்பட்டன. இதில் ஐ.தே.கவின் 14 அலுவலகங்கள் உள்ளடங்குவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் பிரதேசங்களில் இலக்கத்தகடு அற்ற வாகனங்கள் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றமையையும் கஃபே சுட்டிக்காட்டியுள்ளது.
'தாக்கியவர்கள் யார் என்று இதுவரையில் தெரியாமல் இருக்கின்றது, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆதரவான குண்டர்களே இவ்வாறான தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக எதிர் கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
இதேவேளை, தேர்தல் வன்முறைகள் தொடர்பில் இதுவரை 33 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் எஸ்எஸ்பி அஜித் ரோஹண கூறினார்.
தேர்தல் வன்முறைகள் தொடர்பில் 8 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை ஊவா மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் தங்களுக்கு 141 முறைபாடுகள் கிடைக்கப் பெற்றிருப்பதாக கெபே கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெப்ரலுக்கு தேர்தல்கள் தொடர்பில் 158 முறைபாடுகள் பதிவாகி இருக்கின்றன தெரிவித்துள்ளது.
Post a Comment