காணாமல் போன சுமார் 40 இலட்சம் ரூபா பெறுமதியான இரத்தினக் கற்களை தேநீர் கடையொன்றிலிருந்து கண்டெடுத்து அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்த சம்பவமொன்று கடந்த 6 ஆம் திகதி சனிக்கிழமை மாலை பேருவளை சீனன் கோட்டை பத்தை இரத்தினக் கல் வர்த்தக சந்தையில் இடம்பெற்றது.
காலி அலோசியஸ் கல்லூரியில் கல்வி கற்று க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றி பின்னர் இரத்தினக் கல் வியாபாரம் தொடர்பாக பயிற்சி பெற்றுவரும் காலி கிந்தொட்டை குருத்துவத்தை என்ற பகுதியைச் சேர்ந்த முஹம்மத் ஹாசிம் ஜிப்ரி முஹம்மத் நிஜாத் என்ற மாணவனே தனது தந்தையுடன் வந்து இந்த கற்களை உரியவரிடம் ஒப்படைத்தார்.
இதன் உரிமையாளர் எஹலிய கொடையைச் சேர்ந்த முஹம்மத் றியாழ் என்பவராவார். 11 பொதிகளை கொண்ட இந்த இரத்தினக் கற்கள் சூடேற்றுவதற்காக பலரிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டவைகளாகும். சூடேற்றிய பின் நல்ல நிலைக்கு வந்தால் இக் கற்கள் பல கோடி ரூபா பெறுமதி மிக்கவைகளாக மாறலாம் என இரத்தினக் கல் வர்த்தகர்கள் இங்கு தெரிவித்தனர்.
இரத்தின கற்களை ஒப்படைத்த மாணவனுக்கு உரிமையாளர் றியாழ் 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவை இதன் போது அன்பளிப்பாக வழங்கினார்.
11 பார்சல்கள் கொண்ட இரத்தினக் கற்கள் கடந்த வாரம் (3/9/14) புதன்கிழமை பத்தை இரத்தினக் கல் வர்த்தக சந்தை பகுதியில் காணாமல் போயுள்ளது அன்றைய தினம் தனது தந்தை மற்றும் நண்பர்களுடன் சந்தைக்கு வர்த்தக நடவடிக்கைக்காக வந்துள்ள இந்த மாணவன் தேநீர் அருந்துவதற்கு கடையொன்றுக்குச் சென்ற போது இதைக் கண்டெடுத்து வீட்டுக்குச் சென்று தந்தையிடம் உரிமையாளரைத் தேடி ஒப்படைக்கும்படி கூறியுள்ளார். பின்னர் தந்தை தனது மகனுடன் வந்து சீனன் கோட்டை இரத்தினக் கல் வர்த்தகர் ஸினான் உஸ்மான் ஹாஜியாரிடம் கற்களின் உரிமையாளரை தேடி அறிவிக்குமாறு கேட்டுள்ளார்.
இதனையடுத்து உரிமையாளரை தேடி கற்கள் ஒப்படைக்கப்பட்டன. இந்த மாணவனின் முன்மாதிரியை இங்கு வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடும் உள்நாட்டு வெளிநாட்டு இரத்தினக் கல் வர்த்தகர்கள் பெரிதும் பாராட்டினர்.
இரத்தினக் கல் வர்த்தகம் தொடர்பாக பயிற்சி பெறும் இந்த மாணவனுக்கு சிறந்ததொரு எதிர்காலமுண்டு என்றும் இங்குள்ள வர்த்தகர்கள் சுட்டிக் காட்டினர். பேருவளை நகர சபை முன்னாள் உறுப்பினர் தஸ்லீம் சாபி ஸினான் உஸ்மான் உட்பட பலரும் இதன் போது பங்குபற்றினர்.
Post a Comment