முஸ்லிம்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தைப் பலப்படுத்துவதற்கு முன்வர வேண்டும் என சுற்றாடல் வளத்துறை பிரதியமைச்சர் ஏ.ஆர்.ஏ. காதர் தெரிவித்தார்.
அக்குறணை தொடங்கொல்ல பிரதேசத்தில் 16 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள இரண்டு பாலங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. அந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பிரதியமைச்சர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்;
இந்நாட்டில் சுமார் 3 தசாப்தங்களாக தலைவிரித்தாடிய பயங்கரவாத பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்து மக்கள் அச்சமின்றி நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் வாழக்கூடிய சூழலை ஏற்படுத்திய பெருமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கே உரித்தானது. இதனை எவரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.
இன்று நாடு பல்வேறு துறைகளிலும் அபிவிருத்தி கண்டு வருகிறது. கல்வி, சுகாதாரம், போக்குவரத்து உள்ளிட்ட சகல துறைகளும் விருத்தி செய்யப்பட்டு வருகின்றன. தூர இடங்களுக்கான நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டு இன்று மக்களின் போக்குவரத்துக்கான நேரம் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் போன்ற தூர பிரதேசங்களுக்கு செல்வதற்கு நீண்ட நேரம் எடுத்தது. ஆனால் இன்று குறித்த பிரதேசங்களை குறுகிய நேரத்தில் சென்றடைய கூடியவாறு பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.
அதற்கிணங்க அக்குறணை பிரதேசமும் இன்று பல்வேறு துறைகளில் அபிவிருத்தி கண்டு வருகின்றது. அந்த வகையிலேயே தொடங்கொல்ல பிரதேசத்தில் இரண்டு பாலங்களை அமைப்பதற்காக அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இவ்விரு பாலங்களின் நிர்மாணப்பணிகளுக்கென சுமார் 16 மில்லியன் ரூபா செலவிடப்படுகிறது.
இவற்றுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியானது காதரினுடையதல்ல மாறாக இன்று ஆட்சியில் இருக்கும் மஹிந்த ராஜபக் ஷவின் அரசாங்கத்தினுடையது. இதனை இப்பிரதேசத்து மக்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். உதவி செய்வோருக்கு துரோகம் இழைப்பவர்களாக முஸ்லிம் சமூகம் ஒரு போதும் மாறி விடக்கூடாது.
பிங்கா ஓயாவை அண்டிய பிரதேசங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. அவற்றை கட்டுப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. கண்டி மாவட்டம் சகல துறைகளிலும் அபிவிருத்தி கண்ட மாவட்டமாக மாற்றியமைக்கப்படும். ஆகவே, இம்மாவட்ட முஸ்லிம்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் அரசாங்கத்தைப் பலப்படுத்துவதற்கு முன்வர வேண்டும். முஸ்லிம் சமூகம் என்றும் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும் எனவும் கூறினார்.
இந்நிகழ்வில் எரிக் பிரசன்ன வீரவர்தன எம்.பி., மத்திய மாகாண சபையின் ஆளுங்கட்சி உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் என அனேகமானோர் கலந்து கொண்டனர்.
Post a Comment