கொழும்பு பெரிய பள்ளிவாசலின் புதிய நிர்வாக தெரிவிற்கு தடை
Thursday, August 14, 20140 comments
கொழும்பு பெரிய பள்ளிவாசலின் புதிய நிர்வாக தெரிவிற்கு இன்று தடை விதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன
எதிர்வரும் செப்டம்பர் 11ஆம் திகதி வரையான இந்த தடை உத்தரவு வக்பு சபையினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது என அந்த சபையின் தலைவரான அஹ்கம் உவைஸ் தெரிவித்தார்.
கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாகத்தின் பதவிக் காலம் அண்மையில் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் வக்பு சபைக்கு எந்தவித அறிவித்தலையும் மேற்கொள்ளாமல் கடந்த ஞாயிற்றுக்கிழமை (10) கொழும்பு பெரிய பள்ளிவாசலின் புதிய நிர்வாக தெரிவிற்கு ஏற்பாடுகள்
மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த வெள்ளிக்கிழமை (08) ஜும்ஆ தொழுகையின் பின்னர் இந்த நிர்வாக தெரிவிற்கு எதிராக கொழும்பு பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டிருந்தன. இதனையடுத்து குறித்த நிர்வாக தெரிவிற்கான கூட்டம் கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
இதேவேளை, கொழும்பு பெரிய பள்ளிவாசலின் நிர்வாகத்திற்கு எதிராக குறித்த பள்ளிவாசலுக்கு உட்பட்ட 16 தனி நபர்கள் வக்பு சபையில் கடந்த ஜுலை மாதம் முறைப்பாடு மேற்கொண்டிருந்தனர். நிதி மோசடி, சட்ட மீறல், காணி அபகரிப்பு உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்கள் குறித்த முறைப்பாட்டில் கொழும்பு பெரிய பள்ளிவாசலின் நிர்வாகத்திற்கு எதிராக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாடு தொடர்பான விசாரணைகள் வக்பு சபையின் இன்றைய அமர்வில் இடம்பெற்றது. இதன்போது முறைப்பாட்டாளர்கள் சார்பில் சட்டத்தரணி ருஸ்தி ஹபீப் ஆஜராகியிருந்தார். இந்த விசாரணைகளை அடுத்து கொழும்பு பெரிய பள்ளிவாசலின் புதிய நிர்வாக தெரிவிற்கு செப்டம்பர் 11ஆம் திகதி வரை தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என வக்பு சபை தலைவர் தெரிவித்தார்.
அத்துடன் பள்ளிவாசல் நிர்வாகத்தினரையும் முறைப்பாட்டாளர்களையும் செப்டம்பர் 11ஆம் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
அத்துடன் கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பொதுச் செயலாளர் உட்பட நிர்வாக சபை உறுப்பினர்கள் நான்கு பேருக்கு எதிராக தனி விசாரணைகள் மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என வக்பு சபையின் முக்கியஸ்தரொருவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு பெரிய பள்ளிவாசலிற்கு இடைக்கால நிர்வாக சபை ஒன்றை நியமிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, கொழும்பு பெரிய பள்ளிவாசலிற்கு புதிய நிர்வாகமொன்றை நியமிக்குமாறு கோரி சுமார் 5,000 பேர் கையொழுத்திட்ட மகஜரொன்று வக்பு சபையிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக நிர்வாக சபையினை கலைக்குமாறு கோரி கடந்த ஜுலை மாதம் வக்பு சபையின் அமர்வு முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தில் இடம்பெற்ற போது அதற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment