திருகோணமலை கருமலையூற்று பிரச்சினையை மூன்று மாதத்தில் தீர்த்துத் தருவேன் என்ற முதலமைச்சரின் வாக்குறுதி ஒரு வருடம் ஒன்பது மாதம் 13 நாட்கள் கழிந்தும் நிறைவேற்றப்படவில்லை. இந்த நிலையில் குறித்த பிரசித்தி பெற்ற பள்ளிவாசல் உடைக்கப்பட்ட பிரச்சினையை இந்த மாகாணசபை அவசரப் பிரேரணை ஒன்றிணைக்கொண்டு வந்து இன்று விவாதிக்கின்றது. இந்த நிலையில் கிழக்கு மாகாணசபை தூங்கிக்கொண்டிருக்கிறதா? என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் அமீர் அலி கேள்வி எழுப்பினார்.
கிழக்கு மாகாணசபை அமர்வு நேற்று நடைபெற்றது. அதன்போது உறுப்பினர் அன்வரினால் சமர்ப்பிக்கப்பட்ட தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தில் அவர் அதை கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கேள்வி எழுப்பினார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்;
கடந்த 06.11.2012 திகதி மேற்படி புராதன பள்ளிவாசல் தொடர்பான விஷேட தனிநபர் பிரேரணை ஒன்றை சபையில் சமர்ப்பித்திருந்தேன்.
இந்த பள்ளிவாசல் காணி இப்பிரதேசத்தின் வாழ்ந்த தனிநபர் ஒருவரால் வழங்கப்பட்டிருக்கின்றது. இங்கு சுமார் 110 குடும்பங்கள் வரை வாழ்ந்துள்ளனர். இவர்களில் பலரிடம் ஆங்கிலேயர் காலத்து உறுதியிருக்கின்றது. இவ்வாறான நிலையில் குறித்த மக்களின் ஆதார ஆவனங்களுடன் அந்தத் தனிநபர் பிரேரணையை நான் சமர்ப்பித்து குறித்த பள்ளிவாசல் மற்றும் மக்கள் அங்கு தொழுகை நடத்தக்கூடிய நிலைமையை ஏற்படுத்த வேண்டும். உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்து அவை விடுவிக்கப்பட வேண்டும் என்று இந்த சபையில் கேட்ட போது முதலமைச்சர் மூன்று மாதத்தில் இந்தப்பிரச்சினைக்கு தீர்வு பெற்று தருவதாக உறுதியளித்தார். ஆனால் ஒரு வருடம் ஒன்பது மாதம் 13 நாட்கள் கழிந்துள்ள நிலையில் பாதுகாக்கப்பட வேண்டிய புராதன புனித இந்தப் பள்ளிவாசல் உடைக்கப்பட்ட நிலையில் மீண்டும் இந்த சபையில் பேசிக்கொண்டிருக்கின்றோம்.
இந்த சபை வெறும் பேசும் சபையாக மாறி விடக்கூடாது. இந்த சிற்பக்கலை வேலைகளுடன் கூடிய பள்ளிவாசலை நாம் ஒரு முறை சென்று பார்த்திருக்கிறோம்.
அந்தப் பள்ளிவாசல் பகுதியில் எங்கிருந்தோ ஒரு நீரூற்று வந்து கொண்டிருக்கிறது. அந்த ஊற்றை மக்கள் வுழு செய்வதற்காக பயன்படுத்துகின்றனர். இவ்வாறான புராதன புனித பள்ளிவாசல் வெள்ளைக்காரர் காலத்தில் குண்டு போட்டும் கூட அழிந்துவிட வில்லை. 1988 ஆம் ஆண்டு இந்திய அமைதிப்படை இங்கு நிலைகொண்ட போது மக்கள் இடம்பெயர்ந்தனர். 1994 ஆம் ஆண்டு இலங்கை அரசின் பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டது. அண்மையில் அஸ்வர் எம்.பி உட்பட சிலர் பாதுகாப்பு அனுமதி பெற்று பார்வையிட்டிருந்தனர்.
இங்கிருக்கின்ற பள்ளிவாசல் உரிய திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. இவ்வாறான புனித வரலாற்று தளம் மூன்று நாட்களுக்கு முன்னர் உடைக்கப்பட்டிருக்கின்றது. இது காற்று, மழை காரணமாக உடைக்கட்டிருக்கின்றது என்ற பொய்யான செய்தியை முதலமைச்சரிடமிருந்து கேட்கத் தயாராக இல்லை. இங்கு நான் உரையாற்ற வருமுன்னர் வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு குறித்த தினங்களில் ஏதாவது கடுமையான அனர்த்தம் பதியப்பட்டுள்ளதா? என வினவித்தான் வந்தேன். அவ்வாறு ஒன்றும் இல்லையென்று உறுதியளித்துள்ளனர். இராணுவத்திற்கு பாதுகாப்புத் தேவைக்கு இடம்தேவையாக இருந்தால் இது பற்றி முதலமைச்சர் பள்ளி நிருவாகம் உள்ளிட்டோரை அழைத்து பேசி செயற்படுவது ஏற்கக்கூடிய விடயமாக இருக்கும். இந்த பள்ளிவாசல் உடைப்பு விடயம் முஸ்லிம்களைப் பொறுத்த வரையில் கேவலமான விடயம். நூறு வீதம் இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழிருந்த இந்த பள்ளிவாசல் உடைப்பு இராணுவம் தான் செய்திருக்கிறது.
நூறுவீதம் எம்மை பாதுகாக்கும் என இராணுவத்தை நம்பி வந்த சமூதாயம் எங்கள் சமூதாயம். ஆகவே, இந்த சம்பவம் இந்த மக்களுக்கு கிடைத்த பரிசா? இந்த மாவட்டத்திலே இருக்கக்கூடிய மக்கள் இந்தப்பள்ளிவாசலுக்கு நடந்த நிகழ்வு பற்றி அறிய மிகவும் ஆவலாக இருக்கின்றார்கள். இந்த நாட்டில் சமயத்தளங்கள் தாக்கப்படுவதில்லை என்று ஜனாதிபதி கூறுகின்றார். அவ்வாறானால் அவர் பொய் கூறுகிறாரா?ஆகவே, இந்த விடயத்தில் முதலமைச்சர் மற்றும் தவிசாளருக்கும் மிகப்பொறுப்புண்டு மீண்டும் இந்த நாட்டில் ஒரு கலவர நிலைமையை தோற்றுவிக்க முயற்சிக்கப்படுகின்றதா? இதுபோன்ற நிகழ்வுகளால் தான் முப்பது வருடங்களுக்கு மேலாக தமிழ் இளைஞர்கள் ஆயுதமேந்தி போராடினர். இன்று அளுத்கம, அநுராதபுரம், தம்புள்ள, திருகோணமலை என இந்தப் பிரச்சினை தொடர்ந்த வண்ணம் இருக்கிறது. இது மேலும் பரவி விடுமோ என்று கவலையாக இருக்கின்றது. இதனால் எழுந்த அழுத்தத்துடன் தான் இங்கு நான் பேசுகின்றேன்.
ஏன் இந்தக் கொலைவெறி? இந்த இராவணுவத்திற்கு மத சிந்தனை பற்றி போதிக்கப்படவில்லையா? சமூகம் பெரிதா? பதவி பெரிதா? என்று கேட்டால் நான் சமூகம் தான் பெரிது என்று சொல்லுவேன். சமூகத்தின் எதிர்பார்ப்பினை தீர்க்காவிட்டால் எந்த பதவிகளில் இருந்து வேலையில்லை. வெறுமனே கிழக்கு மாகாணசபையில் இருந்து கொண்டு சமாதானம் பற்றிப் பேசுவதில் எனக்கு உடன்பாடில்லை.
எனவே, இந்த பள்ளிவாசல் நிலைமைப்பற்றி உண்மை விபரத்தை இந்த சபையில் தெரியப்படுத்தவேண்டும். அத்துடன் அதனை நேரடியாக பார்வையிட வசதி செய்ய வேண்டும் என்றும் கூறினார்.

Post a Comment