காஸா பிராந்தியத்தில் இஸ்ரேல் புதிதாக மேற்கொள்ளப்பட்ட வான் தாக்குதல்களில் ஹமாஸ் போராளிகுழுவின் தலைவர் ஒருவரது மனைவியும் பிள்ளையும் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் பேராளிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.
தமது ஆயுதப்பிரிவான காஸா படையணியின் தலைவரான மொஹமட் டியிப்பை இலக்கு வைத்து செவ்வாய்க்கிழமை இரவு இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அவர் உயிர் தப்பியுள்ளார். ஆனால் அவரது மனைவி, மகன் உட்பட 11 பேர் பலியாகியுள்ளதாக ஹமாஸ் போராளிகுழுவின் தலைவர் முஸா அடி மர்ஸூக் தெரிவித்தார்.
காஸா பிராந்தியத்தில் இருந்து சுமார் 50 ஏவுகணைகள் செவ்வாய்க்கிழமை ஏவப்பட்டுள்ளதாகவும் பிறிது 20 ஏவுகணைகள் புதன்கிழமை ஏவப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேல் தெரிவித்தது.
தற்காலிகமாக நடைமுறைப்படுத்தப்பட்ட 24 மணிநேர யுத்த நிறுத்தம் காலாவதியாவதற்கு பல மணித்தியாலங்களுக்கு முன்பே தாக்குதல்கள் ஆரம்பமானதாக கூறப்படுகிறது.
அதே சமயம் காஸாவிலான வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வரும் முகமாக எகிப்திய தலைநகரில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் எதுவித உடன்படிக்கையும் எட்டப்படாத நிலையில் முடிவடைந்துள்ளது. அங்கு பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டிருந்த இஸ்ரேலிய தூதுக் குழுவினர் தாம் தாய்நாடு திரும்ப்போவதாகத் தெரிவித்தனர்.
இந்நிலையில் புதிதாக இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் இஸ்ரேலிய அமைச்சரவை கடந்த புதன்கிழமை கலந்துரையாடியுள்ளது.
அன்றைய தினம் காஸாவில் இஸ்ரேல் புதிதாக நடத்திய தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என நம்பப்படும் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
யுத்த நிறுத்தம் முடிவடைந்ததையடுத்து இடம்பெற்ற தாக்குதல்களில் சுமார் 100 பேர் காயமடைந்துள்ளனர்.
அதே சமயம் இஸ்ரேலின் டெல் அவிவ் மற்றும் ஜெருசலேம் ஆகிய நகர்களில் போருக்கான ஒலி பிறப்பிக்கப்பட்டது.
காஸாவிலிருந்து ஏவப்பட்ட பல ஏவுகணைகளை தாம் சுட்டு வீழ்த்தியுள்ளதாகவும் இஸ்ரேல் தெரிவித்தது.
கடந்த ஜூலை 8 ஆம் திகதி இஸ்ரேல் காஸா பிராந்தியத்திலான தாக்குதல்களை ஆரம்பித்தது முதற்கொண்டு இதுவரை 2,028 பலஸ்தீனர்களும் 66 இஸ்ரேலியர்களும் உயிரிழந்ததுள்ளனர்.




Post a Comment