-திஸராணி குணசேகர
துட்டகைமுனு மன்னன் தனது முதலாவது யுத்தத்தை குடும்பத்தில் புரிந்தான். தனது இளைய சகோதரன் திஸ்ஸவுக்கு எதிராக புரிந்த யுத்தமே அதுவென மகாவம்சம் குறிப்பிடுகின்றது. துட்டகைமுனு மன்னன் தனது மகுடத்தைப் பாதுகாத்து ஸ்திரப்படுத்தியதன் பின்னர் குறுநில மன்னர்களுக்கும் எல்லாளனுக்கும் எதிராக யுத்தங்களை நடாத்தி வந்தான்.
குறித்த சிவில் யுத்தங்களில் ஆயிரக்கணக்கிலான உயிர்கள் கொல்லப்பட்டிருப்பதாக மகாவம்சம் தெரிவிக்கின்றது. இங்கு கொல்லப்பட்டவர்கள் பௌத்தச் சிங்களவர்கள் என நினைப்பது நியாயமானது. ஆனாலும் தமது சகோதர மதத்தவர்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருப்பது தொடர்பில் மகாவம்சம் எவ்விதக் கருத்துக்களையும் சொல்லவில்லை.
எல்லாளனுக்கு எதிராக மேற்கொண்ட யுத்தத்தில் இடம்பெற்ற மரணங்கள் தொடர்பில் மகாவம்சத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதன்படி துட்டகைமுனு மன்னனின் உள்ளம் நடுங்கியது. இங்கு, பிக்குகள் அச்சப்படுவதிலும் பின்னடைவதிலும் எவ்வித அர்த்தமும் இல்லை என்று துட்டகைமுனு அவர்களை சாந்தப் படுத்தியுமுள்ளான்.
“இத்தகைய செயல்கள் உங்களை சுவர்க்கலோகத்திற்குச் செல்வதை விட்டும் தடுப்பதில்லை. உங்களால் ஒன்றரை மனிதர்கள் மாத்திரமே கொல்லப்பட்டுள்ளார்கள். அதில் ஒருவர் புத்தரின் ஆசீர்வாதத்தைப் பெற்றவர். மற்றையவர் பஞ்சசீலங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டவர். ஏனையவர்கள் மதத்தைப் பின்பற்றாத மிருகங்களை ஒத்த மூட நம்பிக்கையாளர்கள்.” இது துட்டகைமுனுவுக்கு மகாவம்சம் வழங்கிய சான்றிதழ்.
துட்டகைமுனு அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ளப் புரிந்த கொலைகளைக் கணக்கிட்டால், இந்தச் சான்றிதழ் அவருக்கு செல்லுபடியற்றதாகின்றது. எல்லாளனுக்கு எதிரான யுத்தத்தின்போது துட்டகைமுனுவுக்கு ஏற்பட்ட மன உளைச்சலைப் பற்றிக் குறிப்பிடும் மகாவம்சம், பௌத்த மதத்தை நம்பிக்கை கொள்ளாதவர்களை மிருகங்களை விடக்கொடியவர்கள் என்பதாகச் சித்தரித்துள்ளது.
மகாவம்சத்தின்படி அவர்களைக் கொல்வது பாவமில்லை. மதத்திற்காகப் போர் புரிவது சுவர்க்கலோகத்திற்குச் செல்வதற்குக் காரணமாக அமையும். இவ்வாறு மகாவம்சம் புதியதொரு நம்பிக்கையைக் கட்டி யெழுப்பியது.
இத்தகைய நம்பிக்கையை வலுவூட்டுவதற்கும் சட்டபூர்வ மாக்குவதற்கும் மகாவம்சத்தை எழுதிய மகாநாம தேரர் நிர்வாண நிலையை அடைந்த பிக்குகளின் அங்கீகாரத்தையும் ஆசீர்வாதத்தையும் பெற்றுக் கொண்டார்.
ஏனெனில், அடுத்தவரின் உயி ரைப் பறிப்பது மனிதனாக இருந்தாலும் மிருகமாக இருந்தாலும் அது பாவமான காரியமாகும் என்பதாக புத்தர் உயிர்களைக் கொல்வது தொடர்பில் கொண்டுள்ள நிலைப்பாடு தெளிவாக உள்ளமையினாலாகும்.
சங்யுக்த நிகாயவில் உள்ள காமினி சங்யுக்தவில் வருகின்ற யோதஜீவ சூத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஊர்ப் பிரதானியான யோத ஜீவ, யுத்தத்தில் சண்டை யிட்டுக் கொல்லப்படுபவர்கள் சுவர்க்கம் செல்வார்களா என்று புத்தரிடம் வினவினார்.
அதற்கு புத்தர் மூன்று முறை பதிலளிக்காமல் இருந்துவிட்டு மீண்டும் வற்புறுத்தியபோது இவ்வாறு பதிலளித்தார்: “சமர் ஒன்றின்போது தாக்குவதற்கு முயற்சிக்கின்ற போராளியொருவர் இவர்களைக் கொன்று விட வேண்டும், வெட்ட வேண்டும், அழிக்க வேண்டும் என்ற விதங்களிலேயே சிந்திக்கிறார். அச்சந்தர்ப்பத்தில் அவரைத் தாக்கி கொன்று விட்டால் அவர் மீண்டும் நரகத்திலேயே பிறப்பார்.”
சண்டைகளில் கொல்லப்படுகின்றவர்களுக்கு அவ்வாறுதான் அமையும். இதில் எவ்வித மாற்றங்களோ பாரபட்சங்களோ இல்லை. பௌத்த மதத்தைப் பாதுகாப்பதற்காக வேண்டி இறப்பவர்கள் சுவர்க்கலோகத்திற்குச் செல்வார்கள் என்பது பற்றி புத்தர் எங்கும் குறிப்பிடவில்லை.
இவ்வாறு மாற்ற முடியாத கொள்கைகளாக புத்தர் சொன்ன விடயங்கள் மகாநாம தேரருக்கும் அவரது காலத்தில் நிலவிய தாதுசேன மன்னனின் ஆட்சி முறைமைக்கும் பொருந்த வில்லை.
தாதுசேனன் மகாநாம பிக்குவினது அனுசரணையாளனும் மைத்துனனும் ஆவான். நாடு பெரும் இழப்புக்களை சந்தித்த காலப்பகுதியில் மாமாவும் மைத்துனனும் கூட்டுச் சேர்ந்தார்கள்.
இலங்கை 30 வருடங்களாக பாண்டியர்களது ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்தது. இறுதியாக ஆட்சி செய்த பாண்டிய மன்னனைத் துரத்தியடித்து விட்டு தாதுசேனன் ஆட்சிபீடம் ஏறினான். இந்த யுத்தத்திலும் கொலைகள் இடம்பெற்றன. சிலபோது தாதுசேனனின் கையால் முதலாவது பஞ்சசீலம் பாரியளவில் மீறப்பட்டிருக்கலாம். (முதலாவது சிலம் – உயிர்களைக் கொல்லக் கூடாது என்பது.)
அவரது யுத்த வீரர்கள் மரணத்திற்குப் பிந்திய வாழ்வு பற்றி சிந்தித்திருப்பார்கள். எனவேதான் இத்தகைய சந்தர்ப் பத்தில் மகாநாம தேரர் முன்வந்து “பாவமில்லாத யுத்தம்” எனும் நம்பிக்கைக் கோட்பாட்டை உருவாக்கி மன்னனையும் போர்புரிந்த வீரர்களையும் தைரியப்படுத்தி இருக்கலாம்.
எனவே, இத்தகைய கருத்தியலை பிரச்சாரப் படுத்துவதில் மகாநாம தேரர் வெற்றி கண்டார். அவர் புத்தரின் போதனைகளை தலைகீழாய் மாற்றி முழுமையானதொரு வித்தியாசமான பௌத்த சமயத்தை உருவாக்கினார். அம்மதம் 15 நூற்றாண்டுகளாக இலங்கை அரசியல் உருவாக்கத்தில் தாக்கம் செலுத்தி வந்துள்ளது.
மகாவம்ச சதியை நேற்று இரவு நான் கனவில் கண்டேன்
பொலிஸார் புத்தரை துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல,
இரத்தம் தோய்ந்த அவரது உடல் யாழ் நூலகப் படிக்கட்டில் வீழ்ந்து கிடந்தது
யாழ்நூலகம் தீயிட்டுக் கொழுத்தப்பட்டமை தொடர் பில் பேராசிரியர் எம்.ஏ நுஃமான் எழுதிய கவிதை வரிகள் மேற் கண்டவாறு ஆரம்பிக்கின்றது.
புத்தர் ஏன் அவ்வாறு கொல் லப்பட்டார் என்று அமைச்சர்கள் வினவியபோது பொலிஸார் இவ்வாறு கூறினர்.
“அவரைக் கொல்லாமல் எவ்வாறு ஈயைக் கூட இம் சிப்பது?”
உண்மை. ஆனால் புத்தர் நிஜமாகவே ஆறாம் நூற்றாண்டில் கொல்லப்பட்டு விட்டார். மகா நாம தேரர் பௌத்த மதத்தை மீள எழுதியது மாத்திரமல்லாமல் அப்போராட்டகரமான பௌத்த மதத்திற்குப் பொருத்தமான புதிய துணிச்சலான புத்தர் ஒருவரையும் உருவாக்கினார்.
மகாவம்சத்திலுள்ள புத்தர் கௌதம சித்தார்த்த புத்தருக்கு முற்றிலும் மாறுபட்டவராவார். திரிபிடகவில் சொல்லப்பட்டுள்ள புத்தரைப் போல் அல்லாமல், மகாவம்சத்தில் உள்ள புத்தர் ஏமாற்று வித்தைகளாலும் அதிகூடிய மனித பலத்தாலும் எதிரிகளின் கொட்டத்தை அடக்கும் ஒருவராகச் சித்தரிக்கப்பட்டுள்ளார்.
அவர் புத்தர் காட்டிய வழியில் சகல உயிரினங்களுக்கும் சமஅளவில் கருணை செலுத்துவதில்லை. மகாவம்சத்திலுள்ள புத்தரிற்கு கடப்பாடுகள் உள்ளன. எதிர்காலத்தில் தன்னுடைய மதத்தைப் பாதுகாக்கும் வகையிலான இலங்கையைக் கட்டியெழுப்புவதே அவருடைய குறிக்கோளாக உள்ளது. இத்தகைய அரசியல் வேலைத் திட்டத்தில் கடவுள்கள் அவருடைய தோழர்கள். விஜயன் இவரால் பயன்படுத்தப்பட்ட ஒரு குற்றவாளி. இலங்கையின் ஆதிவாசிகளான ராக்சதர்கள் (பேயினத்தவர்கள்) இவரது எதிரிகள்.
மகாவம்சத்தின் புத்தர், புத்தர் ஒருபோதும் செய்யாதவற்றைச் செய்கின்றார். இலங்கைக்கு வந்து பிசாசுகளுக்கு பிரித் ஓதுவதற்குப் பதிலாக அவர்களை விரட்டி விடுகிறார். திரிபிடகவின்படி புத்தர் பிசாசுகளை எதிரிகளாகக் கருதவில்லை.
‘யக்ஷ சங்யுக்த’வில் புத்தர் ஆலவக எனும் பிசாசை பொறுமை, நீதி, சுய உணர்வு போன்ற பண்புகளைக் கொண்டு அடக்குகிறார். மகாவம்சம் குறிப்பிடுவதன் படி தமிழர்களைப் போன்று பிசாசுகளும் பிறப்பால் கொடியவர்களாவர். மகாவம்சத்தின் புத்தர் காற்று, மழை, இருளைக் கொண்டு பிசாசுகளைப் பீதியுறச் செய்து பரிசுத்த பூமியிலிருந்து அவர்களை விரட்டியடித்துள்ளார்.
தற்பொழுது இலங்கைக்குள் சுதேசிகள், நாடோடிகள் என்கின்ற கருத்துக்கள் வலுப்படுத் தப்படுவதனால் இங்கு இன ஐக்கியத்தைப் பேண முடியாதுள்ளது. பௌத்தர்கள் தாம் இந்நாட்டின் தனி உரிமையார்கள் என்று நினைக்கிறார்கள். ஏனையவர்களுக்கு இந் நாட்டில் எவ்வித உரிமைகளும் இல்லை என்பதாகவும் தெரிவிக்கின்றார்கள்.
இக்கருத்து மகாவம்ச நம்பிக்கையின் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. புத்தர் தனது மரணத் தறுவாயில் தன்னுடைய மதம் அழியாமல் இருப்பது இலங்கையில் என்றும், அதனைக் கவனமாகப் பாதுகாத்துத் தருமாறு இறைவனிடம் வேண்டியுள்ளார் என்றும் மகாவம்சம் குறிப்பிடுகின்றது.
புத்தரின் இறுதிக் காலத்தின் சில தினங்கள் பற்றி மகா பரிநிர்வாண சூத்திரத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் புத்தர் இறைவனிடம் வேண்டிக் கொண்டதாக எவ்விதப் பிரார்த்தனைகளும் கூறப்படவில்லை. தன்னுடைய மதம் தூய்மையான முறையில் பாதுகாக்கப்படுவது இலங்கையில் என்று புத்தர் ஒரு போதும் குறிப்பிடவுமில்லை.
இவையனைத்தும் மகாநாம தேரர் கட்டிய போலி நம்பிக்கைகள். யோதஜீவ சூத்திரத்தில் புத்தரின் பதிலைக் கேட்ட யோதஜீவ அழலானார். ஏனெனில் நீண்ட காலப் போராட்டத்தில் இறந்தவர்கள் சுவனம் செல்வார்கள் என்று போலியான ஆசிரியர்களால் யோதஜீவ ஏமாற்றப்பட்டுள்ளார் என்பதாக புத்தர் சுட்டிக்காட்டிய காரணத்தினாலாகும்.
மகாநாம எனும் தேரரால் அரசியல் நோக்கங்களுக்காக வேண்டி எழுதப்பட்ட மகாவம்சம் தற்பொழுது 15 நூற்றாண்டுகளையும் கடந்துள்ள நிலையில் அவரது வழிவந்த காவியுடை தரித்த, தரிக்காத மோசடிப் பேர் வழிகளால் நாம் காலா காலமாக ஏமாற்றப்பட்டு வந்துள்ளோம்.
இலங்கை பௌத்தர்களின் பரிசுத்தப் பூமி என்பதாகவும் பௌத்தர்களுக்கு இங்கு பௌத் தர் அல்லாதவர்களுடன் வாழ முடியாது என்பதனால் அவர்களை சண்டையிட்டு விரட்டியடிப்பது பாவமில்லை என்பதாகவும் மகாவம்சத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய போலி நம்பிக்கைகள் இங்குள்ள சிறுபான்மை, பெரும்பான்மை இனத்தவர்களுக்கு மத்தியில் உள்ள உறவுகளை சிதைத்து விரிசல்களைத் தோற்றுவித்துள்ளன.
எமது வரலாற்றையும் அரசியலையும் பௌத்த மதத்தையும் மகாநாம தேரரும் அவரது சீடர்களும் கட்டிய போலி நம்பிக்கைகளிலிருந்து விடுவித்துக் கொள்ளாத வரையில் இலங்கையில் இன ஐக்கியத்தைக் கட்டியெழுப்பிக் கொள்ள முடியாது போகும்.
தமிழில் : ஹெட்டி ரம்ஸி

Post a Comment