கல்முனைக் பள்ளிவாசல் நிர்மாண பணிகளுக்கு இடைக்கால தடை
Monday, August 18, 20140 comments
கல்முனைக் குடி பெரிய பள்ளிவாசலில் மேற்கொள்ளப்படும் செயத்திட்டமொன்றிற்கு இன்று தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த தடை உத்தரவு கல்முனை மாவட்ட நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கல்முனைக் குடி பெரிய பள்ளிவாசலினால் பள்ளிவாசல் வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படும் வாகனத் தரிப்பிட நிர்மண பணிகளுக்கு செப்டம்பர் முதலாம் திகதி வரை, கல்முனை மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த செயற்திட்டம் சட்டவிரோதமானது என தெரிவித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீட உறுப்பினரும் கல்முனை மேயரின் இணைப்புச் செயலாளருமான ஏ.சீ.ஏ.சத்தார், எம்.எம்.ராசீக் பரீட் மற்றும் எம்.எல்.ஜஃபர் ஆகியோரினால் கல்முனை மாவட்ட நீதிமன்றின் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
வக்பு சபை, கல்முனை மாநகர சபை மற்றும் பள்ளிவாசல் எல்லைக்குட்பட்ட ஜமாத்தார் ஆகியோரின் அனுமதியின்றி இந்த வாகன தரிப்பிடம் நிர்மாணிக்கப்படுவதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனு மீதான விசாரணைகள் கல்முனை மாவட்ட நீதிபதி எம்.பி.முஹைதீன் முன்னிலையில் இன்று இடம்பெற்றது. இதன்போதே குறித்த நிர்மாண பணிகளுக்கு செப்டம்பர் முதலாம் திகதி வரை இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தார்.
இந்த மனுவில் பிரதிவாதிகளாக கல்முனைக் குடி முஹைதீன் ஜும்ஆ பள்ளிவாசலின் பிரதம பொறுப்பாளர் டாக்டர் எஸ்.எம்.ஏ.அஸீஸ், குறித்த நிர்மாண பணிகளினை மேற்கொள்ளும் கல்முனைக் குடி 9ஆம் பிரிவிற்கான கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் எஸ்.எம்.சம்சுதீன் மற்றும் பொதுச் செயலாளர் அப்துல் வஹாப் ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு விசாரணையில் முறைப்பாட்டாளர்கள் சார்பில் சட்டத்தரணி யூ.எம்.நிசார் ஆஜராகியிருந்தார். இதேவேளை, கல்முனைக் குடி பெரிய பள்ளிவாசலில் மேற்கொள்ளப்படும் இந்த வாகனத் தரிப்பிட செயத்திட்டத்திற்கு கல்முனை மேயர் நிசாம் அண்மையில் எதிர்ப்பு வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment