பதுளை மாவட்டத்தில் அரச கட்சியில் முஸ்லிம் ஒருவரை வேட்பாளராக நியமிக்காமல் விட்டதன் மூலம் அரசுக்கு சோரம் போன முஸ்லிம் அமைச்சர்களின் கூட்டணி என்பது முஸ்லிம்களை ஏமாற்றி அவர்களின் வாக்குகளை அரசுக்கு தாரை வார்க்கும் மோசடி என்பது தெளிவாகியுள்ளது என உலமாக்கட்சித் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் மேலும் தெரிவித்ததாவது;
அரசாங்கத்தில் இணைந்து அமைச்சு பதவிகளை பெற்றுள்ள முஸ்லிம் கட்சிகள் தம்மை அரசுக்கு விரோதமாகக் காட்டிக் கொண்டு முஸ்லிம் மக்களிடம் நாடகமாடுவதை அடிக்கடி காண்கிறோம். அதிலும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கடந்த கிழக்கு மாகாண சபை தேர்தலின் போது தம்புள்ள பள்ளிவாயல் தாக்குதலை வைத்து அரசுக்கு எதிரானவர்கள் போல் காட்டி முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்று அரசுக்கு தாரை வார்த்ததை நாடு அறியும். இது ஒரு ஏமாற்று வேலை என்பதை அன்றே நாம் மக்களுக்கு தெளிவு படுத்தினோம். ஆனால் எமது வார்த்தைகளில் உள்ள உண்மையை புரிந்து கொள்ள முயற்சிக்காத கிழக்கு மக்கள் முஸ்லிம் காங்கிரஸுக்கு வாக்களித்து ஏமாந்து நின்றதை கண்டோம்.
அதன் பின் கடந்த மேல் மாகாண சபை தேர்தலின் போது அமைச்சர்களான ஹக்கீம், ரிசாத் ஆகியோரின் கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்டு முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்ற பின் மாகாண சபையில் அரசுக்கு ஆதரவளித்தனர். அவர்கள் அரசாங்கத்தின் அமைச்சர்கள் என்பதால் அவ்வாறே செய்வர் என்ற யதார்த்தத்தைக்கூட புரியாதவர்களாக முஸ்லிம்கள் இருப்பது கவலைக்குரியதாகும்.
தற்போதுள்ள சூழ்நிலையில் அரச கட்சிகளுக்கு எந்தவொரு முஸ்லிமும் வாக்களிக்கமாட்டான் என்பதை தெரிந்த கொண்டு அமைச்சர்களான ஹக்கீம், ரிசாத் ஆகியோரை கிழக்கு மாகாண அமைச்சர் ஒருவரின் கட்சியில் களமிறக்கி முஸ்லிம்களின் வாக்குளை பெறும் நாடகம் நடக்கிறது. இதற்கு முஸ்லிம் கட்சிகள் ஒற்றுமைப்பட்டுவிட்டதான போலியான தோற்றம் காண்பிக்கப்படுகின்றது. உண்மையில் அமைச்சர்கள் தலைமையிலான முஸ்லிம் கட்சிகள் ஏற்கனவே அரசாங்கத்தில் இணைந்ததன் மூலம் ஒற்றுமையாகத்தான் உள்ளார்கள்.
முஸ்லிம்களை ஏமாற்றுவதற்காக தேர்தலில் அரச சார்பு முஸ்லிம் கட்சிகள் ஒற்றுமை என்பது சமூகத்துக்கு ஆரோக்கியத்தை தராது. மாறாக அரசுக்கு ஆதரவான மற்றும் அரசுக்கு ஆதரவில்லாத முஸ்லிம் கட்சிகள் சமூக பிரச்சினைகள் தீர்ப்பதில் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டுமென்பதே எமது நீண்டகால கோரிக்கையாகும்.
ஆகவே முஸ்லிம் அமைச்சர்களின் போலியான தேர்தல் ஒற்றுமைக்கு பதுளை முஸ்லிம்கள் ஏமாற மாட்டார்கள் என்பது எமது நம்பிக்கையாகும். இன்றைய சூழ்நிலையில் அரசுக்கு எதிரான ஏதாவதொரு கட்சிக்கு முஸ்லிம்கள் ஒற்றுமைப்பட்டு வாக்களிப்பதன் மூலம் பதுளை முஸ்லிம்கள் தமது குரலை மாகாண சபையில் ஒலிக்கச் செய்ய முடியும். அதனை விடுத்து அமைச்சர்கள் கட்சிக்கு வாக்களிப்பது என்பது முஸ்லிம் சமூகம் தன்னைத்தானே காட்டிக் கொடுப்பதுடன் இது பதுளை வாழ் முஸ்லிம்களின் எதிர்காலத்துக்கு பாரிய ஆபத்தை தோற்றுவிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

Post a Comment