ஹஜ் முரண்பாடுகள் தொடர்பில் கடும்போக்கு அமைப்பான பொதுபல சேனாவிடம் 10 ஹஜ் முகவர்கள் முறையிட்டுள்ளனர் என அவ்வமைப்பினர் ஊடகப்பேச்சாளர் டிலந்த விதானகே தெரிவித்தார்.
ஹஜ் கோட்டா பகிர்வு தொடர்பில் அண்மைக்காலமாக பெரும் பிரச்சினைகள் ஏற்பட்டிருந்தன. அமைச்சர் பெளஸி நியாயமற்ற முறையில் கோட்டா பகிர்வை மேற்கொண்டிருந்ததாக குற்றம் சுமத்தி ஹஜ் முகவர்களின் அமைப்புகளில் ஒன்றான செரண்டிப் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது. அதனையடுத்து பௌஸியினால் தயாரிக்கப்பட்ட கோட்டா பகிர்வு அட்டவனை செல்லுபடியற்றது என நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
எனினும் விடயம் நீதிமன்றத்துக்கு செல்வதற்கு முன்னர் அமைச்சர் பௌசி விபரங்களை சவூதி ஹஜ் அமைச்சுக்கு சமர்பித்திருந்தார். இந்நிலையில் குறித்த கோட்டா பகிர்வை சவூதி ஏற்றுககொண்டதாக அறிவித்திருந்தது.
இவ்வாறானதொரு நிலையிலேயே செரண்டிப் அமைப்பின் தலைவரும் என்.எம். டிரவல்ஸ் இன் உரிமையாளருமான முஹம்மத் தலைமையிலான குழுவினரே பொதுபல சேனாவிடம் சென்று முறையிட்டுள்ளனர்.
இன்று பொதுபலசேனாவை சந்தித்த முகவர்கள் தொடர்பில் அவ்வமைப்பின் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவிக்கையில்,
"ஹஜ் விவகாரம் தொடர்பில் நீதிமன்றம் சென்ற குழுவினர் நேற்றிரவு என்னுடன் தொடர்புகொண்டு சந்திப்பொன்றை மேற்கொள்ள வேண்டும் என்றனர். இதற்கமைய இந்த சந்திப்பு இன்று காலை ஏற்பாடாகியிருந்தது. பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளார் கலகொட அத்தே ஞானசார தேரரின் அனுமதியுடனான இந்த சந்திப்பு ராஜகரியவிலுள்ள இடம்பெற்றது.
தற்போது ஹஜ் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளமையினால் இந்த விடயத்தில் தலையிடுமாறு கோரிக்கை விடுத்தனர். எனினும் முஸ்லிம் சமயத் தலைவர்களை உள்ளடக்கிய அமைப்பு மற்றும் முஸ்லிம் அரசியல் தலைவர்களை இந்த விடயத்தில் சந்தித்து நடவடிக்கை எடுக்குமாறு நாங்கள் ஆலோசனை வழங்கினோம்.
எனினும் இந்த விடயம் தொடர்பில் குறித்த குழுவினருடன் நாம் ஏற்கனவே பேசியுள்ளோம். எனினும் எமக்கு அவர்களிடமிருந்து சதகாமான பதில் கிடைக்கவில்லை. இதன் காரணமாகவே இன்று நாங்கள் உங்களை நாடியுள்ளோம். இந்த விடயத்தில் எமக்கு தீர்வொன்றினை பெற்றுத் தாருங்கள் என்று கோரிக்கை விடுத்தனர். எனினும் இந்த கோரிக்கை தொடர்பில் நாங்கள் இதுவரை எந்தவித இறுதித் தீர்மானமும் மேற்கொள்ளவில்லை.
காரணம் இது முஸ்லிம் சமூகத்தின் உள்ளக விடயமாகும். அத்துடன் இந்த விடயத்தில் தலையிடுவது தொடர்பில் எமது அமைப்பிற்கு இதுவரை எந்த நோக்கமுமில்லை. ஆனால் ஹஜ் விவகாரம் குறித்து உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு பின்பற்ற வேண்டும்" என்றார்.

Post a Comment