இரட்டை இலைக்கு அளிக்கும் வாக்குகள் வெற்றிலைக்கு அளிக்கும் வாக்குகளேயாகும் - முஸ்லிம் சங்கம்

Friday, August 15, 20140 comments


எதிர்வரும் ஊவா மாகாண சபை தேர்தலில் ஆளும் கட்சியின் பங்காளி கட்சிகளாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் அகில இலங்கை மக்கள் காங்கிரசும் இணைந்து ஜனநாயக ஐக்கிய முன்னணியின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதானது ஆளும் கட்சிக்கு துணை போவதற்கேயாகும் என  கம்பஹா மாவட்ட ஐக்கிய முஸ்லிம் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சங்கத்தின் செயலாளர் ஜனாப் ஏ.ஆர்.எம்.முஸம்மில் (JP) மேலும் தனது அறிக்கையில்;

கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக நாட்டில் குறிப்பாக முஸ்லிம்கள் சொல்லொண்ணா கஷ்டங்களையும் பிரச்சினைகளுக்கும் முகம் கொடுத்து வருவதை அறியாதார் இல்லை. தம்புள்ளை ஹைரிய பள்ளிவாசல் முதல் அண்மையில் அளுத்கம, தர்கா நகர், பேருவளை அசம்பாவிதம் வரை 150 க்கும் மேற்பட்ட சிறு சிறு சம்பவங்கள் நடந்தும் இதுவரை யாரும் சட்டத்தின் முன் கொண்டு வரப்படவோ கைது செய்யப்படவோ இல்லை என்பது அனைவரும் அறிந்தவிடயமே.

இது இவ்வாறிருக்க சமூக உணர்வில்லாத முஸ்லிம்கள் இன்னும் அரசாங்கத்தை ஆதரிப்பதில் என்ன பயன்? அரசாங்கத்தை விமர்சித்து வாக்குகளை பெற்றுக்கொண்டு மீண்டும் ஆளும்கட்சியை பலப்படுத்துவதே இவர்களின் உள்நோக்கம். சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்கும் கட்சி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ். அரசாங்கம் தோல்வி  கண்டு ஆட்டம்  கண்டு கலையும் நேரத்தில் பேரம் பேசி எதிர்க்கட்சியுடன் கூட்டு சேர்வதே தலைவர் ரவூப் ஹக்கீமின்  மேற்கூறப்பட்ட கருத்தின் விளக்கம்.

கடந்த பொது தேர்தலில் எதிர்க்கட்சியுடன் இணைந்து போட்டியிட்டு வெற்றி பெற்றதும் ஜனநாயகத்தையே குழி தோண்டி புதைக்கக்கூடிய 18வது அரசியல் சீர்திருத்த மசோதாவை ஆதரித்து அரசுடன் இணைந்ததை யாவரும் அறிவர்.

அதுமட்டுமில்லாமல் கிழக்கு மாகாண தேர்தலிலே கடுமையாகவும் கோபாவேசத்துடனும் ஆளுங் கட்சியை விமர்சித்து வாக்கு வங்கியை நிரப்பி கொண்டு ஆளுங்கட்சிக்கு துணை போனதில் ரவூப் ஹக்கீமின் இரட்டை வேடம் புலனாகிறது.

கிழக்கு மாகாண சபைதேர்தலிலே நிச்சயமாக முஸ்லிம் காங்கிரசுக்கு அளிக்கப்பட்ட வாக்குகள் ஆளும் கட்சிக்கு விரோதமாக அளிக்கப்பட்ட வாக்குகளே. கிறீஸ் பேய் காவியுடையணிந்த அரச பயங்கரவாதம் என ஆளும் கட்சியை விமர்சித்ததன் பயனாகவே இன்று கிழக்கு மாகாண மக்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு வாக்களித்தனர். அது அரசாங்கத்தின் ஒரு யுக்தியே ஒழிய வேறில்லை. அவ்வாறு இல்லையானால் நிச்சயமாக கிழக்கு மாகாண தேர்தலில் ஆளுங்கட்சி தோல்வி காண்பது உறுதி.

அதே யுக்தியை ஊவா மாகாணத்தில் ஐ.தே.க. வையும் அதன் முதலமைச்சர் வேட்பாளருமாகிய ஹரீன் பெர்னாண்டோவின் வெற்றியை முடக்குவதற்கு ஆளும் கட்சியினால் திட்டமிட்டு செயற்பட வைப்பதே மேற்படி திட்டம்.

காஸாவில் இஸ்ரவேல் மேற்கொள்ளும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை பிரித்தானியா அரசாங்கம் சரியான முறையில் கையாளவில்லையென தெரிவித்து ஆளும் கட்சியின் முஸ்லிம் பெண் அமைச்சர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதை நாம் கவனத்தில் கொள்வது அவசியம்.

ஆனால் இலங்கையில் எவ்வளவோ அசம்பாவிதங்கள் நடந்தும் ஒரு அமைச்சராவது எதிர்ப்பை தெரிவித்து வெளியேறவில்லை.

ஊடகங்களிலும் மேடைகளிலும் ஆணித்தரமான பேச்சுக்களையும் அறிக்கைகளையும் விட்டு தொடர்ந்து எமது மக்களையும் முஸ்லிம்களின் பொருளாதாரத்தையும் சீர்குலைப்பதிலேயே எமது தலைவர்கள் உள்ளனர்.

எனவே தான் தற்பொழுது ஊவா மாகாண மக்கள் மத்தியில் இதே விதமாக ஏமாற்று வித்தைகளையும் மாயா ஜாலங்களையும் கூறி அரசாங்கத்தை விமர்சித்து தமது அரசியல் ஆசனங்களையும் சொகுசான அமைச்சுப்பதவிகளையும் தற்காத்து கொள்ளவே இவர்கள் களமிறங்கியுள்ளனர் என்பதை ஊவா மாகாண மக்கள் குறிப்பாக முஸ்லிம் மக்கள் சிந்தித்து வாக்களிக்க கடமைப்பட்டுள்ளனர்.

அளுத்கம, பேருவளை, தர்கா டவுன் அசம்பாவிதங்களின் போது முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையில்;

இந்த அரசாங்கத்தில் நான் ஒரு முக்கிய அமைச்சராகவும் அதுவும் நீதி அமைச்சராகவும் இருப்பதில் வெட்கமடைகின்றேன். ஆனாலும் இந்த அரசாங்கத்தை அசெளகரியத்துக்கும் இக்கட்டான நிலைக்கும் தள்ளுவதற்கும் நான் விரும்பவில்லை என பகிரங்கமாக கூறியதை யாரும் அறிவர்.

ஆனால் முஸ்லிம்களையும் முஸ்லிம்களின் பொருளாதாரத்தையும் அசெளகரியத்துக்கும் இக்கட்டான நிலைக்கு தள்ளுவதை அவர் விரும்புகிறார். அதை விட எனது பதவியையும் எனது சொகுசான வாழ்க்கையையும் விட்டுக்கொடுக்க நான் விரும்பவில்லை என்பது மேலும் பொருந்தும்.

மேலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமை பின்பற்றி தற்பொழுது அமைச்சர் ரிஷாத் பதியுதீனும் அதே பாதையில் பயணிக்க ஆரம்பித்து விட்டது ஒன்றும் ஆச்சரியப்பட கூடியதல்ல. காரணம் ஊவா மாகாண சபை தேர்தலில் ஆளுங்கட்சி தோல்வி காண்பது உறுதியாகி விட்ட நிலையில் இன்றைய அரசியல் சூழ்நிலையில் இன்னும் சில மாதங்களில் பொது தேர்தலோ ஜனாதிபதி தேர்தலோ நடப்பது உறுதி. அதிலும் ஆளுங்கட்சி தோல்வி காண்பதை யாராலும் தடுக்க முடியாது. அதன் காரணத்தினாலேயே இவர்கள் காய் நகர்த்த முற்பட்டுள்ளனர் என்பதே உண்மை.

எனவே, அரசியல் மாற்றத்துக்காக மட்டுமல்ல முஸ்லிம்கள் மீது ஏவப்பட்டுள்ள காட்டுமிராண்டித்தனமான செயலை சுட்டிக்காட்டி முஸ்லிம்கள் யாவரும் அரசாங்கத்தையும் அரசாங்கத்துக்கு துணை போகும் முஸ்லிம் அமைச்சர்களுக்கும் ஒரு பாடம் புகட்ட எதிர்த்து வாக்களிப்பது காலத்தின் அவசியம்.

Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham