எஸ்.என்.எம்.ஸுஹைல்
கிழக்கு மாகாணத்தில் பரவலாக விவசாய காணிகளும் குடியிருப்பு காணிகளும் சுவீகரிக்கப்பட்டு வருகின்றன. திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டை, கருமலையூற்று, தோப்பூர் என பல பகுதிகளில் முஸ்லிம்களின் காணிகளை அபகரிக்க பல போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் புல்மோட்டை முதலாம் கிராம சேவகர் பிரிவிற்கு உட்பட்ட அரிசி மலைக்குடா என அழைக்கப்படும் பொன்மலைக்குடா கிராமத்தில் 500 ஏக்கர் நிலப்பகுதி புனித பூமி என்ற பெயரில் அபகரிக்கப்படவுள்ளது.
அரிசிமலை என அழைக்கப்படும் பொன்மலைக்குடா 99 % முஸ்லிம் மக்கள் வாழும் பகுதியாகும். தம்பட்டை பகுதியிலிருந்து 1811 ஆம் ஆண்டு காலப்பகுதியிலிருந்த மக்கள் இப்பகுதியில் குடியேறி தமது வாழ்விடத்தை அமைத்துக்கொண்டனர். அப்பகுதியிலேயே விவசாயமும் கடற்றொழிலும் செய்து தமது வாழ்வாதாரத்தை மேற்கொண்டு வந்தனர். யுத்த காலத்தில் மக்கள் அப்பகுதியில் இருந்த போதிலும் உக்கிர மோதல்களின் போது பாதுகாப்புக்கு சவால் ஏற்பட்டது. இதனால் பலர் அங்கிருந்து அகதிகளாக வெளியேறினர். இந்நிலையில் தற்போது அங்கு சுமார் 35 குடும்பங்கள் வசித்து வந்தாலும் குறித்த பகுதியில் 134 குடும்பங்களுக்குரிய காணி உறுதிப்பத்திரங்கள் இருக்கின்றன. பலர் வெளிபிரதேசங்களில் இடம்பெயர்ந்து வசிக்கின்றனர்.
1994,1998,2002 போன்ற வருடங்களில் உறுதிப்பத்திரங்கள் பகிரப்பட்டிருக்கின்றன. 2002 ஆம் ஆண்டுக்கு பின்னர் உறுதிப்பத்திரங்களை பெறுவதற்காக சுமார் 9000 பேர் புல்மோட்டை பிரதேச செயலகத்திற்கு விண்ணப்பித்துள்ளனர். இருப்பினும் அவர்களுக்கு உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படவில்லை.
இந்நிலையில் குறித்த அரிசிமலை பகுதி புனித பூமியாக பிரகடணப்படுத்தி 500 ஏக்கர் காணி அபகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும் மக்கள் தமது இருப்பிற்காக தொடர்ந்தும் போராடி வருகின்றனர்.
காணியை அளப்பதற்காக நில அளவை திணைக்களத்தினர் ஐந்து தடவை வந்து போயுள்ளனர். ஆனால் மக்கள் அதற்கு இடம் கொடுப்பதாக இல்லை. தொடராக இதுவரை 5 முறை அவர்கள் களத்திற்கு வந்து போய் விட்டனர். நேற்று முன்தினம் செவ்வாய்க் கிழமை ஐந்தாவது முறையாக வந்த போது மக்கள் பெரும் எதிர்ப்பை தெரிவித்தனர். பிரதேசத்தில் ஹர்த்தால் நடத்தப்பட்டது. அத்தோடு புல்மோட்டை திருகோணமலை சந்தியில் மக்கள் குழுமியிருந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றையும் நடத்தினர்.
மக்கள் குறித்த பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்திக்கொண்டிருக்கும் போது காட்டுப்பகுதி ஊடாக அதிகாரிகள் உட்புகுந்து காணி அளக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அரிசிமலையை அண்மித்த பொன்மலைக்குடா, வீரந்தீவு மற்றும் தேத்தாவடி தீவு ஆகிய கிராமங்களை ஊடறுக்கும் வகையிலேயே இந்த நில அளவை மேற்கொள்ளப்படவிருந்தது. ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்துக்கு புல்மோட்டை பொலிஸார் மாத்திரமின்றி குச்சவெளி, நிலாவெளி, திருகோணமலை, ஸ்ரீபுரம் ஆகிய பொலிஸ் நிலையங்களில் இருந்தும் பொலிஸார் வரவழைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் மக்கள் தொடர்ந்தும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்ததோடு குறித்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது. இதனால் கலவரம் அடக்கும் பொலிஸார் ஸ்தலத்திற்கு அழைக்கப்பட்டனர்.
பதற்ற சூழ்நிலையின்போது அபூபக்கர் என்பவர் காயமடைந்தநிலையில் புல்மோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்துக்கு திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர், குச்சவெளி பிரதேச சபை தலைவர் எ.பீ.முபாறக், உபதலைவர் எ.ஆதம் பாபா தௌபீக், திருகோணமலை மேலதிக அரசாங்க அதிபர் எஸ். அருள்ராசா, கிண்ணியா நகரசபை தலைவர் ஆர்.எம்.ஹில்மி, குச்சவெளி பிரதேச சபை உறுப்பினர் எம். ஹாசிக், குச்சவெளி பிரதேச சபை உறுப்பினர் எம்.புஸ்பகாந்தன், குச்சவெளி பிரதேச சபை செயலாளர் கிருஷ்நேந்திரன் ஆகியோர் வருகை தந்தனர்.
திருகோணமலை மாவட்டத்தில் தற்போது அதிகார தரப்பினரின் கெடுபிடிகள் அதிகரித்து விட்டன. அப்பாவிமக்கள் தங்களது வீடு, தொழில், காணி, வணக்கஸ்தலம் , வரலாற்று அடையாளங்களை இழக்க நேரிடுகிறது.
தமக்கு இழைக்கப்படும் அநீதிகளின் போது மக்கள் போராட்டங்களில் ஈடுபடுவதற்கு பழகிப்போய்விட்டனர். இதன்போது பிரதேச அரசியல் பிரமுகர்கள் ஒரு விசிட் அடிப்பார்கள். அங்கு ஆக்ரோசமான உரையொன்றும் ஆற்றுவார்கள். சொல்லும் பாணியையும் வேகத்தையும் பார்த்தால் ஆர்பாட்டம் கலையும் கோரிக்கை நிறைவேறும் போல் இருக்கும். அங்குள்ள மக்களின் நிலை 'இலவு காத்த கிளி'க்கு ஒப்பானதே. காரியம் ஒருகாலமும் நிறைவேறுவதாகவே இல்லை.

Post a Comment