துருக்கிய தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பதவி விலகிச் செல்லும் பிரதமர் இஸ்லாமியவாதி ரிசாப் தையிப் அர்துகான் தனது வெற்றியை துருக்கியின் முதலாவது நேரடி ஜனாதிபதி தேர்தலிலான வெற்றியாக குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் வெற்றியையடுத்து தனது ஏ.கே. கட்சியின் தலைமையக மாடி மாடத்திலிருந்து உரையாற்றிய அர்துகான் இது நாட்டுக்கான புதிய சகாப்தமெனவும் அவரது வெற்றி அனைத்து துருக்கியர்களதும் வெற்றி எனவும் தெரிவித்தார்.
அவர் இந்த தேர்தலில் இரண்டாம் சுற்று வாக்கெடுப்பொன்றை தவிர்க்கும் வகையில் 52 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார்.
இதுவரை காலமும் துருக்கிய ஜனாதிபதி பதவி வைபவ ரீதியான பதவியாக மட்டுமே இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அர்துகான் ஜனாதிபதி பதவிக்கான அதிகாரங்களை அதிகரிக்க விருப்பம் கொண்டுள்ளார்.
2003 ஆம் ஆண்டிலிருந்து துருக்கிய பிரதமராக பதவி வகித்த அவருக்கு மீண்டும் ஒரு தவணைக் காலத்திற்கு பிரதமராக பதவி வகிப்பதற்கு அரசியலமைப்பு ரீதியில் தடையை எதிர்கொண்டுள்ளார்.
இந்நிலையில் அவர் எதிர்வரும் 28 ஆம் திகதி அந்நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ளார்.
இந்நிலையில் தற்போது ஏ.கே. கட்சித் தலைவரையும் பிரதமரையும் நியமிக்க வேண்டியுள்ளது.

Post a Comment