பிரான்ஸில், முஸ்லீம் பெண்கள் , தங்கள் முகத்தை முழுதுமாக மறைக்கும், நிக்காப் என்ற முகத்திரையை அணிவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கெதிராக தொடுக்கப்பட்ட மேல்முறையீட்டை ஐரோப்பிய மனித உரிமைகளுக்கான நீதிமன்றம் உறுதிப்படுத்தியிருக்கிறது.
இந்த மேல்முறையீட்டைத் தொடுத்த 24 வயது பிரெஞ்சுப் பெண் ஒருவர், முகத்திரைக்கெதிரான இந்தத் தடை, தனது மத சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரத்தை மீறுவதாக வாதிட்டிருந்தார்.
எஸ்.ஏ.எஸ் என்ற முதல் எழுத்துக்களால் மட்டுமே அறியப்பட்டிருந்த இந்தப் பெண், இந்த முழு முகத்திரையை அணியுமாறு, தனது குடும்பத்தில் யாரும் தன்னை நிர்ப்பந்திக்கவில்லை என்றும், ஒரு மத உணர்வுள்ள முஸ்லீம் என்ற வகையில், இதை தனது மத சுதந்திர விஷயமாகவே தான் கருதுவதாகவும் கூறியிருந்தார்.
ஸ்ட்ராஸ்பூர்கில் அமைந்துள்ள இந்த நீதிமன்றத்தின் நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், இந்தத் தடை, மத ரீதியாக இந்த ஆடை விஷயத்தை அணுகவில்லை, இது முகத்தை மறைக்கிறது என்பதாலேயே விதிக்கப்பட்டுள்ளது என்று கூறியிருக்கிறார்கள்.
இந்தத் தடை இப்போது இறுதியானது ; இதற்கெதிராக மேல் முறையீடு செய்ய முடியாது.
சார்க்கோஸி அரசு கொண்டுவந்த தடை
முஸ்லீம் பெண்கள் சிலர் அணியும் இந்த முழு முகத்திரைக்கெதிரான பிரெஞ்சுத் தடை, 2010ல் அப்போதைய பிரெஞ்சு அதிபராக இருந்த நிக்கோலஸ் சார்க்கோஸி அரசால் கொண்டுவரப்பட்டது.
இந்தத் தடையின்படி, முழு முகத்திரையை பொது இடங்களில் அணியும் எவருக்கும் 150 யூரோக்கள் அபராதம் விதிக்கப்படும்.
இந்தத் தடையை மீறும் பெண்கள், பிரெஞ்சு குடியுரிமை பற்றி மீண்டும் படிக்கவேண்டும் என்றும் கோரப்படுவார்கள்.
பிரான்ஸில் சுமார் 50 லட்சம் முஸ்லீம்கள் இருக்கிறார்கள். இதுதான் ஐரோப்பாவிலேயே மிக அதிக முஸ்லீம் சிறுபான்மை மக்கள் தொகையுள்ள நாடாகும். ஆனால் இவர்களில் சுமார் 2,000 பெண்களே முழு முகத்திரை அணிவதாகக் கருதப்படுகிறது.
நவீன காலங்களில் முழு முகத்திரை அணிவதைத் தடை செய்த முதல் ஐரோப்பிய நாடு பிரான்சாகும். இதனையடுத்து, பெல்ஜியம் 2011ல் இந்த முகத்திரையைத் தடை செய்தது.
ஸ்பெயினில் பார்சிலோனா போன்ற ஒரு சில நகரங்களும், இத்தாலியின் ஒரு சில நகரங்களும் முழு முகத்திரை அணிவதற்குத் தடை விதித்திருக்கின்றன.
பிரிட்டனில் இது போன்ற தடை ஏதும் இல்லை என்றாலும், நிறுவனங்கள் தத்தம் ஆடை விதிகளை அமல்படுத்தலாம் என்று அனுமதிக்கப்பட்டிருக்கின்றன.
பிரெஞ்சு அரசாங்கம், தான் விதித்த இந்தத் தடைக்கு, பரந்துபட்ட மக்கள் ஆதரவு இருப்பதாகக் கூறுகிறது. முழு முகத்திரை என்பது பிரான்ஸ் பின்பற்றி வரும் மதச்சார்பற்ற தன்மையை மீறுவதாகும் என்றும், மேலும், அது அதை அணியும் நபரின் முழு முகத்தையும் மறைப்பதால், ஒர் பாதுகாப்பு அச்சுறுத்தல் என்றும் அரசு கூறுகிறது.
Post a Comment