ஹஜ்ஜுக்கு சென்று திரும்புகையில் கடத்தப்பட்டு கொல்லப்பட்டவர்கள் குறித்து விசாரணை

Sunday, July 6, 20140 comments


1990ம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டம் குருக்கள்மடம் பகுதியில் ஹஜ்ஜுக்கு சென்று திரும்பிக்கொண்டிருந்த கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட முஸ்லிம்கள் தொடர்பில் அவர்களின் உறவினர்களிடமிருந்து பொலிஸாரால் வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்படுகின்றன.

இன்று ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் நாளை மறுதினம் செவ்வாய்கிழமை வரை காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் அவற்றைப் பதிவு செய்ய விஷேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கினறனர்.
பொலிஸ் தகவல்களின்படி இன்று முதல் நாளில் 28 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

1990ம் ஆண்டு இலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையில் மீண்டும் போர் மூண்ட காலத்தில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் 150க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் காணாமல் போயுள்ளதாக முஸ்லிம்கள் கூறுகின்றார்கள்.

1990ம் ஆண்டு ஜுலை 12ம் திகதி மட்டக்களப்பு- கல்முனை நெடுஞ்சாலை வழியாக வாகனங்களில் பயணம் செய்தவேளையிலே, விடுதலைப்புலிகளினால் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டு குருக்கள்மடம் கடலோரமாக இவர்கள் புதைக்கப்பட்டுள்ளதை அந்தப் பகுதி மக்கள் மூலம் தங்களால் அறிய முடிந்ததாகவும் அவர்கள் தெரிவிக்கின்றார்கள்.

சம்பவத்தில் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் தமது உறவினர்கள் இருவர் தொடர்பாக காத்தான்குடி பிரதேசவாசியொருவர் பொலிஸில் செய்திருந்த முறைப்பாடொன்றின் பேரில் பொலிஸாரால் நீதிமன்றத்தில் முன் வைத்த அறிக்கையொன்றின் பேரில் முஸ்லிம்களின் புதைகுழிகள் என அடையாளம் காணப்பட்ட இடங்களில் அடுத்த மாதம் 18ம் திகதி அகழ்வுப் பணிகளை மேற்கொளவதற்கான உத்தரவு களுவாஞ்சிக்குடி மஜிஸ்திரேட் நீதிமன்றத்தினால் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலே, குறித்த மனிதப் புதைகுழி தொடர்பாக இதுவரை முறைப்பாடுகளை பதிவு செய்யாதவர்களிடமிருந்து முறைப்பாடுகளை பதிவு செய்வதற்கான இந்த விஷேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
24 வருடங்களுக்கு முன்னதாக சம்பவம் இடம்பெற்றிருந்தாலும் இது தொடர்பாக அழுத்தங்களை கொடுக்க கூடிய சூழ்நிலை இருக்கவில்லை என முறைப்பாட்டாளரொருவர் தெரிவித்தார்.

நூற்றுற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் சம்பவத்தின் போது காணாமல் போயுள்ளதாக கூறப்படுகின்ற போதிலும் காத்தான்குடி பிரதேச முஸ்லிம்கள் 66 பேர் தொடர்பான விபரங்கள் தன்னிடம் பதிவாகியிருப்பதாக முறைப்பாட்டாளர்களை விசாரணைக்காக அழைத்து வந்திருந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினரான மொகமட் பாறுக் ஷிப்லி செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham