அரசாங்கம் அண்மையில் நாட்டில் இடம்பெற்ற வன்முறைகளுடன் தொடர்புடைய குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் அழைப்பு விடுத்துள்ளார்.
முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு காரணமானவர்கள் சுதந்திரமாக நடமாடிக்கொண்டிருப்பதாக தெரிவித்த அவர் அவர்கள் கைது செய்யப்பட்டு சட்டமும் ஒழுங்கும் நிலை நாட்டப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
கொழும்பிலிருந்து அரபு செய்தி சேவைக்கு அளித்த பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
வன்முறையை தூண்டி விட்ட அமைப்புகளும் நபர்களும் அவர்களது குற்றங்களுக்காக பொறுப்புக்கூற வேண்டும் எனத் தெரிவித்த அவர் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிப்பதில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் அரசாங்கம் எடுத்துக் கொண்ட முயற்சிகளுக்கு பாராட்டுத் தெரிவித்தார்.
வன்முறைகளுக்கு பின்னர் பின்தங்கிய பிரதேசங்களில் வாழும் முஸ்லிம் குடும்பங்கள் பாதுகாப்பு இன்மையை உணர்வதாக இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்துக்கும் அடிப்படைவாத குழுவொன்றே பொறுப்பாக உள்ளது எனவும் அவர்கள் சரியான முறையில் கையாளப்படா விட்டால் முஸ்லிம்கள் இந்த நாட்டில் அமைதியாக வாழ முடியாது எனத் தெரிவித்த அவர் அந்தக் குழு கடந்த இரு வருடங்களுக்கு மேற்பட்ட காலப்பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிராக ஆங்காங்கே இடம்பெற்ற தாக்குதல்களுடன் தொடர்புபட்டிருந்ததாக அவர் கூறினார்.
அத்துடன் மத வழிபாட்டிடங்கள் தாக்கப்படுவது குறித்து வருத்தம் தெரிவித்த அவர் நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் பேணுவதற்கு பாதுகாப்பு படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும் எனவும் சட்ட முறைமை பொதுமக்களின் அக்கறைகளை எடுத்துக்கூறுவதாக அமைய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
வன்முறையால் நாட்டிலுள்ள முஸ்லிம் சமூகம் அதிர்ச்சிக்குள்ளாகியும் விரக்தியடைந்தும் உள்ளதாக கூறிய ஹக்கீம் நாட்டில் வன்முறை மீள இடம்பெறுவதை தடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாக தெரிவித்தார்.
நாட்டில் 20 மில்லியன் சனத்தொகையில் சுமார் 10 சதவீதத்தினர் முஸ்லிம்களாவர். அவர்களில் அநேகர் ஆளும் அரசாங்கத்திற்காக பயனுறுதிப்பாடுகளுடைய வாக்கு வங்கியினை உருவாக்குபவர்களாக உள்ளனர். ஆனால் அண்மைய சம்பவம் ஆதரவைக்குறைப்பதாகவும் அரசாங்கத்திலான நம்பிக்கையை இழக்க வைப்பதாகவும் உள்ளதாக ஹக்கீம் கூறினார்.
Post a Comment