மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்
மனிதன் தனது ஆசாபாசங்களை இச்சைகளை உள்ளுணர்வுகளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துதனது சொல் செயல அங்கீகாரம் உற்பட வாழ்வின் சகல அங்கங்களிலும் அமசங்களிலும் புனிதனாக்கப்படும் புனித மிகு மாதமே ரமழான் மாதமாகும்.
மனிதன் உடல் அறிவு ஆன்மா என்ற மூன்று பிரதான அம்சங்களை கொண்டிருக்கின்றான், மனித வாழ்வின் வெற்றி அல்லது தோல்வி குறித்து பேசப்படும் பொழுது இந்தமூன்று அம்சங்கள் குறித்தும் கவனம் செலுத்தப் பட வேண்டியது கட்டாயமாகும்.
மண்ணில் வாழ்வதற்காக மண்ணினால் படைக்கப்பட்ட மனிதனுக்கு உடல் என்ற கட்டமைப்பு அமையப் பெற்றிருக்கிறது,இந்த உடல் உயிருடன் இருப்பதனால் மனிதன் முழுமை பெறுவதில்லை, மனிதன் தனியாளாக குடும்பமாக சமூகமாக தேசமாக வாழ்வதற்கும் வாழ்வோடு தொடர்புபட்ட கல்வி கலை கலாச்சாரம் பண்பாடு நாகரீகம் என்றும் அரசியல் பொருளாதாரம் என வாழ்வின் அத்துணை அமசங்களையும்நிர்ணயித்துக் கொள்ள மனிதனுக்கு "அறிவு" அல்லது "பகுத்தறிவு" மற்றும் உள்ளுணர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
மனிதனின் அறிவோடும் உள்ளுணர்வுகளோடும் இரண்டறக் கலந்த "ஆன்மா" மனித வாழ்வில் எத்தகைய பங்கினை வகிக்கின்றது என்பதனைமனிதன் அறிய முற்பட்ட பொழுது மனிதனால் ஆராயப்பட்ட பல்வேறு சித்தாந்தங்கள் கொள்கைகள் கோட்பாடுகள் உலகில் தோற்றம பெற்றுள்ளன இஸ்லாமியர்களை பொறுத்தவரையில் ஆன்மா ஆன்மிகம் குறித்த அருளப்பட்ட வேதங்களும் குறிப்பாகஇறுதி இறை தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களும் தெளிவாக காட்டித் தந்துள்ள அகீதா எனும் நம்பிக்கைக் கோட்பாடுகளாக விசுவாசித்துள்ளனர்.
மனிதனின் வாழ்வு குறித்து பல்வேறு கோட்பாடுகள் உலகில் இருக்கலாம் இஸ்லாமியர்களாகிய எங்களுக்கு வாழ்வும் மரணமும் நிரந்தரமான மறுமை வாழ்விற்கான ஒரு சோதனைக் களம் மாத்திரமே, எனவே எமது தனி மனித குடும்ப சமூக தேசிய பொருளாதார அரசியல் கலை கலாச்சார பண்பாட்டு நாகரீக வாழ்வின் அனைத்து அமசங்களும் அல்லாஹ்வால் அருளப்பட்ட இறைநெறியைதழுவியதாகவே இருக்க வேண்டும் என்பதில் நாம் ஆழமாக விசுவாசம் கொண்டுள்ளோம்.
அந்தவகையில் இஸ்லாம் விரும்புகின்ற வாழ்வு நெறி ஆழமான ஆன்மீக அடித்தளங்களில் மாத்திரமே கட்டி எழுப்பப் பட்டுள்ளமையை இஸ்லாமியநம்பிக்கைக் கோட்பாடுகள் உணர்த்துகின்றன, படைத்துக் காத்துப்பரிபாலிக்கின்ற ஏக வல்லோனாகிய அல்லாஹ்விடம் நாம் மீளுவோம், யுக முடிவுஇருக்கிறது, மறுமை நாளில் நாம் மீண்டும் உயிர்ப்பிக்கப் படுவோம், நாம்கேள்வி கணக்கின் போது விசாரிக்கப் படுவோம், சுவர்க்கம் நரகம் எனநிரந்தரமான வாழ்விடங்கள் எமக்காக சித்தப்படுத்தப்பட்டுள்ளன வானவர் ஜிப்ரீல் முதல் மலாயிகாமார்கள் பணியில் அமர்த்தப்பட்டிருக்கின்றார்கள்,எமக்கு முன்னால் பல வேதங்கள் அருளப்பட்டிருக்கின்றன என இன்னும் பல மறைவான விடயங்களிலும் முஸ்லிம்கள் ஆழமான நம்பிக்கைகளை கொண்டுள்ளனர்.
உண்மையில் இஸ்லாம் மனிதனின் உடல் அறிவு ஆன்மா ஆகிய மூன்று பிரதான அம்சங்களுக்கும் இடையில் சமநிலை பேணுகின்ற ஒரு அழகியவாழ்வு நெறியை எங்களுக்கு பெற்றுத் தந்துள்ளது, மண்ணிலே வாழுகின்ற மனிதனின்சடரீதியிலான ஆசாபாசங்களை தேவைகளை அறிவினாலும் ஆராய்ச்சியினாலும் உழைப்பினாலும் முயற்சியினாலும் அடைந்து கொள்கின்ற உலக வாழ்வின் அடைவுகளை வாழ்வின் வெற்றி தோல்வி குறித்த பெறுமானங்களாக கணிப்பீடுகளாக இஸ்லாமகருதுவதில்லை. அதேவேளை உலக வாழ்வின் ஆசாபாசங்களை தேவைகளை இச்சைகளை முற்று முழுதாக துறந்து முனிவர்களாக சந்நியாசிகளாக துறவறம் பூணும் சமயத் துறவிகளாகவாழுமாறும் இஸ்லாம வலியுறுத்தவில்லை அவ்வாறான ஒரு ஆன்மீக மெஞ்ஞான பேரின்பத்தையும் இஸ்லாம் போதிக்க வில்லை.
ஆக,இஸ்லாமிய ஆன்மிகம் ,இஸ்லாமிய நபிக்கைக் கோட்பாடுகள் உலக வாழ்வில் மனிதன் தனியாளாகவும் குடும்பமாகவும் சமூகமாகவும் தேசமாகவும் ஆசைகளையும்தேவைகளையும் அடைந்து கொள்கின்ற போராட்டத்தை இறைவழியில் நெறிப்படுத்துகின்ற உயிரோட்டமுள்ள ஆன்மீகமாகும், மனிதன் தனது பொருளாதார சமூக அரசியல் கலைகலாச்சார பண்பாட்டு வாழ்வில் அல்- குரானும் சுன்னாவும் அவற்றினடியாக பெறப்பட்ட இஸ்லாமிய ஷரீஅத்தும் காட்டுகின்ற நெறிமுறைகள் பிறழாது முழுநேரஇறையுணர்வை இறையச்சத்தை பேணுதலை விழிப்புணர்வை அவதானத்தை உள்ளுணர்வுகளை உந்துதல்களை இஸ்லாமிய ஆன்மிகம் மனிதனில் ஏற்படுத்துகின்றது.
அந்த வகையில் ஆழமான ஆன்மீக பண்பாட்டு பக்குவப் பயிற்சிகளை ஒவ்வொரு விசுவாசியும் பெற்றிருத்தல் அவசியமாகிறது அந்த வகையில் அல் குரான்அருளப்பட்ட மாதம் முழுவதுமாக புனித நோன்பு கடமையாக்கப்பட்டு விசுவாசிகளுக்கான ஆன்மீக பயிற்சிகளை இஸ்லாம் கண்டிப்பாக கடமையாக்கியுள்ளது.
மனிதன் தனது ஆசாபாசங்களை இச்சைகளை உள்ளுணர்வுகளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துதனது சொல் செயல அங்கீகாரம் உற்பட வாழ்வின் சகல அங்கங்களிலும் அமசங்களிலும் புனிதனாக்கப்படும் புனித மிகு மாதமே ரமழான் மாதமாகும்.
அல்லாஹ்விற்கும் அடியானுக்கும் இடையில் உள்ள உறவை நோன்பு நெருக்கமாக்குகின்றது,ஒவ்வொரு தனிமனிதனினதும் நோன்பும் அதன் தராதரமும் அல்லாஹ்வுக்கும் அந்த அடியானுக்கும் இடையில் உள்ள மிகவும் இரகசியமானபந்தமாகும், அந்த உறவு ஆன்மீக உயர்வுகளை ஈடேற்றத்தை அடையச் செய்கிறது குடும்பத்திலும் சமூகத்திலும் தேசத்திலும் ஒரு மனிதப் புனிதரை அவதரிக்கச்செய்கிறது, ஒரு மாத காலம் பெறப்படும் ஆன்மீக பண்பாட்டுப் பக்குவப் பயிற்சிகள் ஏனைய பதினோரு மாதங்களிலும் மனிதனை உயரிய மனித விழுமியங்களுடன்குண நலன்களுடன் வாழ வைக்கின்றது.
அல்குரான் அருளப்பட்டதால் ரமழான் மாதம் புனிதம்,மகத்துவம் பெற்றது,
லைலதுல் கத்ர் ஆயிரம் மாதங்களை விட சிறப்படைந்தது, எங்கள் உயிரிலும் மேலான முஹம்மத் (ஸல்) அவர்கள மீது அல் குரான் அருளப்பட்டு அகிலத்தாருக்கு இறுதி இறைதூதரை அறிமுகப்படுத்திய புனிதமிகு மாதம். இது அல் குரானுடயதும் அல் சுன்னாஹ் வினதும் மாதமாகும்.
“ரமழான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும்,தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல்குர்ஆன் இறக்கியருளப் பெற்றது.
ஆகவே,உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்;.எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும்;.அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர,உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை. குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும்,உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்).” (ஸுரத்துல் பகறா:185)
இன்னும் முறையாக அணுகப்படாத,புரியப்படாத அல் குரான்...
“ நிச்சயமாக,இக் குர்ஆனை நன்கு நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம். எனவே (இதிலிருந்து) நல்லுணர்வு பெறுவோர் உண்டா?” (54:17)
“ மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இருதயங்கள் (இருக்கின்றனவே) அவற்றின் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா? “ (47:24 )
அல் குரான் யாருக்கு வழிகாட்டும்..?
இது,(அல்லாஹ்வின்) திரு வேதமாகும்;,இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை, (தக்வா) இறையச்சம் உடையோருக்கே (இது) நேர்வழிகாட்டியாகும் (ஸுரத்துல் பகறா:02)
நோன்பு அதற்குரிய அடிப்படை தகைமையை பெற்றுத்தரும்.!
”:ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் (தக்வா) இறையச்சம் உடையோராக ஆகலாம்.” (ஸுரத்துல் பகறா:183)
செயல் வடிவில் இறையச்சம்
ஷஹ்பான் மாதத்தின் இறுதிநாளில் நபியவர்கள் எமக்கு மத்தியில் பின்வருமாறு உரையாற்றினார்கள்,'மக்களே மகத்தான ஒரு மாதம் உங்களிடம் வந்திருக்கிறது. இது பறக்கத் பொருந்திய மாதம். ஆயிரம் மாதங்களை விட சிறந்த ஒரு இரவு இந்த மாதத்திலேயே காணப்படுகிறது. இதன் பகழ்ப் பொழுதுகளில் நோன்பு நோற்பது கடமையாகும். இரவுப் பொழுதுகளில் நின்று வணங்குவது சுன்னத்தாகும்.
இதில் எவர் நற்காரியத்தைச் செய்கிறாரோ அவர் ஏனைய நாட்களில் எழுபது கடமைகளை நிறைவேற்றியதைப் போலாகும். இது பொறுமையின் மாதம். பொறுமைக்குரிய கூலி சுவர்க்கமாகும். இது துயர் துடைக்கும் மாதம். இது ஒரு விசுவாசியினுடைய ரிஸ்க் அதிகரிக்கப்படும் மாதம். இதில் ஒருவருக்கு நோன்பு திறக்க உதவி செய்தால் அந்த செயல் அவருக்கான பாவ மன்னிப்பகவும் நரக விடுதலையாகவும் காணப்படும். இவருக்கும் நோன்பு நோற்றவரைப் போன்ற கூலி கிடைக்கும். அதேவேளை நோன்பாளியின் கூலியில் எந்தக் குறைவும் ஏற்படாது.
அறிவிப்பவர் ஸல்மானுல் பாரிஸி(ரழி)
“யார் பொய்யான பேச்சுக்களையும் பொய்யான நடவடிக்கைகளையும் விடவில்லையோ அவர் பசித்திருப்பதோ தாகித்திருப்பதோ அல்லாஹ்வுக்குத் தேவை இல்லை” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரீ 1903)
யா அல்லாஹ்...!
அல்-குர்ஆன் அருளப்பட்ட புனிதமிகு ரமழானை எங்களுக்கு ஆன்மீக ஈடேற்றங்களின் மாதமாக அருளிய உனக்கே எல்லாப் புகழும் புகழ்ச்சியும் உண்டாவதாக.!
பசித்திருப்பதற்கும் தாகித்திருப்பதற்கும் அப்பால் புனிதமிகு நோன்பின் மாண்புகளையும் ஆன்மீக பண்பாட்டு வரைமுறைகளையும் கற்றுத் தந்த உனது தூதர் எமது தலைவர் அருமை நாயகம் முஹம்மது (ஸல்) அவர்கள் மீது உனது ஸலாத்தும் ஸலாமும் என்றென்றும் உண்டாவதாக!
உனது கருணையையும் அருள் பாக்கியங்களையும் அடையாள படுத்துகின்ற முதலாவது பத்து நாட்களிலும்,உனது பெரும் தன்மைகளையும் பவ மன்னிப்பையும் பிழை பொறுத்தலையும் அடையாள படுத்துகின்ற இரண்டாவது பத்து நாட்களையும் நோன்புடனும் இயன்றவரை நல்ல அமல்களுடனும் கழித்த எங்கள் மீது அருள் கூர்ந்து எமது பாவங்களையும் பலவீனங்களையும் குறை நிறைகளையும் மன்னித்து அருள் புரிவாயாக!
புனித அல்-குர்ஆன் அருளப்பட்ட ஆயிரம் மாதங்களையும் விட சிறந்த புனிதமிகு லைலதுல் கத்ர் இரவை சுமந்துவரும் இறுதி பத்து நாட்களையும், யா அல்லாஹ்.. நல்ல அமல்களைக் கொண்டு இந்த நாட்களையும் கழிக்க எமக்கு தவ்பீக்கு செய்வாயாக.!
யா அல்லாஹ்..!!
அல்-குர்ஆனைக் கொண்டு எங்கள் ஆன்மாக்களையும்,உள்ளங்களையும்,அறிவு ஆற்றலையும்,செயற்பாடுகளையும் ஒளிபெறச் செய்வாயாக..! அல்-குர்ஆனின் மாதமான ரமழான் சுமந்து வரும் சுப சோபனங்களுக்கு உரித்துடையவர்களாக எம் அனைவரையும் ஆக்கியருளவாயாக.! எங்கள் பெற்றாரகளது பாவங்களை மன்னித்து அவர்கள் மீது ஈருலக வாழ்விலும் கருணை காட்டுவாயாக.
Post a Comment