அளுத்கமவில் மேற்கொள்ளப்பட்டமை முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல் மட்டுமல்ல முழு இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நாசகாரவேலையாகும். இதனை மேற்கொண்டவர்கள் தேசத்துரோகிகளாவர் என்று எதிர்கட்சித்தலைவரும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க குற்றம் சுமத்தினார்.
இதுவரை ஐக்கிய நாடுகள் சபை இந்த அரசாங்கத்துக்கு எதிராகவே செயற்பட்டுக்கொண்டிருந்தது. எனினும் அளுத்கம விவகாரத்தினால் இலங்கை நாட்டுக்கு எதிராக செயற்படுவதோடு சிங்களவர்களை சர்வதேசம் மிலேச்சத்தனமானவர்கள் என பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அளுத்கம, பேருவளை, தர்கா நகர் உள்ளிட்ட பிரதேசங்களுக்கு நேற்று மாலை விஜயமொன்றை மேற்கொண்ட எதிக்கட்சித் தலைவர், வன்முறைகளால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து கலந்துரையாடினார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு குற்றம் சுமத்தினார்.
கடும்போக்காளர்களின் செயற்பாடுகள் காரணமாக அச்சமடைந்துள்ள முஸ்லிம்களுக்கு இம்முறை நிம்மதியான முறையில் நோன்பை நோற்க முடியாதுள்ளது. எனவே, இம்முறை முஸ்லிம்களுக்கு ரமழான் இல்லை எனவும் அவர் தெரிவித்தார். தர்கா நகர், அதிகாரிகொட பள்ளிவாசலில் மக்களை சந்தித்து எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரம சிங்க கலந்துரையாடினார்.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்களான கபீர் ஹாஸிம், எம்.எச்.ஏ.ஹலீம், திஸ்ஸ அத்தநாயக்க, ஆர். யோகராஜன், அஜித் பி. பெரேரா மற்றும் மாகாண சபை உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான், இப்திகார் ஜெமீல், பைரூஸ் ஹாஜியார், எஸ்எம். மரிகார் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
இதனையடுத்து மக்கள் மத்தியில் ரணில் விக்கிரம சிங்க தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
கடந்த 15 ஆம்திகதி அளுத்கம, தர்கா நகர், பேருவளை, துந்துவ, வெலிப்பனை உள்ளிட்ட பகுதிகளில் கடும்போக்குவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலானது முஸ்லிம்களுக்கும் இப்பிரதேசத்திற்கும் மட்டும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் அல்ல, இலங்கை மீதே மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாகும். இத்தாக்குதலுக்கு காரணமானவர்களும், வன்முறையில் ஈடுபட்டோரும் தேசத்துரோகிகளேயாவர்.
இதுவரை காலமும் ஐ.நா.வும் சர்வதேசமும் இலங்கை அரசுக்கு எதிராகவே செயற்பட்டன. இந்த அசம்பாவிதங்கள் காரணமாக இலங்கையில் நேரடியாக சர்வதேசம் தலையிட்டு செயற்படும் சூழ்நிலையை அரசாங்கம் தோற்றுவித்துள்ளது.
கடும்போக்காளர்களின் செயற்பாடுகள் காரணமாக அச்சமடைந்துள்ள முஸ்லிம்களுக்கு இம்முறை நிம்மதியான முறையில் நோன்பை நோற்க முடியாதுள்ளது. எனவே இம்முறை முஸ்லிம்களுக்கு ரமழான் இல்லை.
இப்பிரதேசங்களுக்கு தாக்குதல் நடத்துவதற்கு முன்னர் பொதுபல சேனாவினர் ஸ்ரீகோத்தா மீது தாக்குதல் நடத்தியிருந்தனர். அதற்கு நாம் தகுந்த பாடம் புகட்டியிருந்தோம். இந்த விவகாரத்திலும் நாம் அவர்களுக்கும் தாக்குதல்களின் பின்னால் இருப்பவர்களுக்கும் பாடம்புகட்டவுள்ளோம்.
அளுத்கம, தர்கா நகர், பேருவளை உள்ளிட்ட பிரதேசங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களானது பொருளாதாரத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாகவே கருதவேண்டியுள்ளது. தயா கமகேயின் சீனிதொழிற்சாலையில் கைவைத்த இவர்கள் தெற்கு பகுதியில் உள்ள வர்த்தகத்தையும் பொருளாதாரத்தையும் முற்றாக நாசமாக்கிவிட்டனர்.
அத்தோடு பேருவளை, பெந்தோட்டை உள்ளிட்ட சுற்றுலா மையங்களுக்கு வெளிநாட்டு பயணிகளின் வருகையிலும் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் இருக்கின்றது.
இவ்வாறான தாக்குதல்கள் காரணமாக சர்வதேச மட்டத்தில் சிங்களவர்கள் மிருகத்தனமாக நடந்துகொள்ளும் மிலேச்சத்தனமானவர்கள் என்று கூறும் அளவுக்கு நிலைமைகள் உருவாகியுள்ளன.
பேருவளையில் இதற்கு முன்னரும் முஸ்லிம் சிங்களவர்களுக்கிடையில் முறுகல் நிலை தேன்றியிருக்கின்றது. இதன்போது பேச்சுவார்த்தை மூலம்இந்தப் பிரச்சினைகள் சுமுகமாக தீர்க்கப்பட்டுள்ளன. எனவே அண்மையில் பிக்கு மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்பட்டபோது உரிய முறையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் பிரச்சினை முற்றியிருக்காது. அரசு அதனை மேற்கொள்ளத் தவறியமையினாலேயே இனவாதிகள் வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டனர். இதனால் நாட்டுக்கே பாதிப்பும் அபகீர்த்தியும் ஏற்பட்டுள்ளது.
2006 ஆம் ஆண்டு இப்பிரதேசத்தில் ஏற்பட்ட வன்முறை காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரையில் எவ்விதமான நஷ்டஈடும் வழங்கப்படவில்லை. இம்முறையாவது மக்களுக்கான நஷ்டஈட்டை சரியான முறையில் அரசாங்கம் வழங்கவேண்டும் என்றார்.
Post a Comment