தம்புள்ள ஹைரிய்யா பள்ளிவாசல் இடமாற்றத்திற்கு முஸ்லிம்களும் பள்ளிவாசல் நிர்வாகமும் இணக்கம் தெரிவித்ததையடுத்து பிரதமரும் புத்தசாசன மற்றும் மத அலுவல்களுக்கான அமைச்சருமான டி.எம்.ஜயரத்ன தம்புள்ளை புனித பூமி எல்லையில் மாற்றுக்காணி பெற்றுத் தருவதாக உறுதியளித்துள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை பிரதமர் தனது கம்பளை வாசஸ்தலத்தில் தன்னை சந்தித்த வை.எம்.எம்.ஏ. மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில் பிரதிநிதிகளிடம் இந்த உறுதி மொழியினை வழங்கியுள்ளார்.
பிரதமரைச் சந்தித்த குறிப்பிட்ட பிரதி நிதிகள் தம்புள்ளை ஹைரிய்யா பள்ளிவாசலின் வரலாறு தம்புள்ளையில் பள்ளிவாசலொன்றுக்கான அத்தியாவசியம் என்பதை எடுத்து விளக்கினார்கள். முஸ்லிம்கள் நாட்டின் அபிவிருத்திக்கும் இன நல்லுறவுக்கும் எப்போதும் பங்களிப்பு செய்பவர்களாகவே இருக்கிறார்கள் என்பதும் பிரதமரிடம் தெளிவுபடுத்தப்பட்டது.
பள்ளிவாசல் நிர்வாகம் பள்ளிவாசலை இடமாற்றிக் கொள்வதற்கு இணக்கம் தெரிவித்துள்ளமையும் வசதியான ஓர் இடத்தில் பொல்வத்த காணியில் மாற்றுக்காணி பெற்று தருமாறு கோரிக்கை விடுத்துள்ளமை பற்றிய விபரங்களும் பிரதமரிடம் முன்வைக்கப்பட்டன.
நேற்று ஞாயிற்றுக்கிழமை கம்பளை பள்ளிவாசல் ஒன்றில் நடைபெற்ற பிரதமரின் 82 ஆவது பிறந்ததினம் தொடர்பான நிகழ்வில் கலந்து கொண்ட பிரதமர் அங்கும் தம்புள்ளை பள்ளிவாசலுக்கு விரைவில் மாற்றுக்காணி பெற்றுக் கொடுக்கவுள்ளதாக உறுதியுரை வழங்கினார்.
பிரதமருடனான சந்திப்பில் வை.எம்.எம்.ஏ.யின் தலைவர் கே.என்.எம்.என். செயலாளர் சட்டத்தரணி ஆர்.ஆப்தீன் எம்.எச்.எம்.றிஸ்மி டாக்டர் எம்.என்.எம்.இக்பால் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸிலின் தலைவர் என்.எம்.அமீன் ஆகியோர் பங்கு கொண்டனர்.

Post a Comment