அளுத்கம சம்பவத்தை கண்டித்து திருகோணமலை சட்டத்தரணிகள் போராட்டம்
Monday, June 16, 20140 comments
களுத்துறை மாவட்டம் பேருவளை மற்றும் அளுத்கம பிரதேசங்களில் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை கண்டித்து இன்று திங்கட்கிழமை நண்பகல் திருகோணமலையில் சட்டத்தரணிகள் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருகோணமலை சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக வீதியில் கூடிய சட்டத்தரணிகள், பேருவளை மற்றும் அழுத்கம சம்பவங்களை கண்டிக்கும் வகையிலான வாசக அட்டைகளை ஏந்தியவாறு இந்த போராட்டத்தில் கலந்து கொண்டார்கள்.
''சிறுபான்மை இனத்தவர்கள் மீதான இந்தத் தாக்குதல்கள் இனவாத, கொடூரமான மற்றும் நாகரீகமற்ற தாக்குதல்கள்'' என்று தமிழ், ஆங்கிலம் மற்றும் சிங்களத்தில் எழுதப்பட்ட அந்த வாசக அட்டைகளில் குறிப்பிடப்பட்டு, அரசாங்கத்திடம் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலை நாட்ட வேண்டும் என்ற வேண்டுகோளும் வலியுறுத்தப்பட்டிருந்தது.
இதேவேளை அரசாங்கத்தில் அங்கம் பெற்றுள்ள முஸ்லிம் பங்காளி கட்சிகள் அரசாங்கத்திற்கு வழங்கும் ஆதரவை மீளாய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் அந்த கட்சிகளுக்கு உள்ளேயும் எழுந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் . அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் தேசிய காங்கிரஸ் ஆகிய முஸ்லிம் கட்சிகள் நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தின் பங்காளி கட்சிகளாக இருக்கின்றன.
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திற்கு வழங்கி வரும் ஆதரவு குறித்து இன்று கூடி ஆராயவிருப்பதாக கூறப்படுகின்றது.
அதேவேளை கிழக்கு மாகாண சபையின் துணை தவிசாளரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கொள்கை பரப்பு செயலாளருமான எம். எஸ். சுபைர் தமது கட்சி தலைவருக்கு எழுதியுள்ள அவசர கடிதமொன்றில், அரசிற்கு வழங்கும் ஆதரவை மீளாய்வு செய்யுமாறு கேட்டுள்ளதாக தெரியவருகின்றது.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment