மத அலுவல்கள் பொலிஸ் பிரிவினை மூடிவிடுவது தொடர்பாக எதிர்வரும் 16ஆம் திகதி திங்கட்கிழமை அரச தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாக ராவணா பலய அமைப்பு தெரிவித்தது.
இப் பிரிவால் சர்வதேச ரீதியில் நாட்டுக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளதாகவும் அவ் அமைப்பு தெரிவித்தது.
இது தொடர்பாக ராவணா சக்தி அமைப்பின் தலைவர் இத்தேகாந்தே சத்தாதிஸ்ஸ தேரர் மேலும் தெரிவிக்கையில்
இலங்கையில் மதங்களிடையே மோதல்கள் கிடையாது. கோவில்களை உடைத்து பூசகர்கள் கொல்லப்படவில்லை.
அதேபோன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் முஸ்லிம் பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டு மத குருமார் கொல்லப்படவில்லை. அனைத்து மதங்களிடையேயும் நல்லுறவு நிலவுகின்றது.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் மத அலுவல்கள் தொடர்பாக தனியான பொலிஸ் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளமையானது சர்வதேச ரீதியில் நாட்டுக்கு அவப்பெயரையும் நாட்டின் கௌரவத்திற்கு இழுக்கையும் ஏற்படுத்தியுள்ளது.
எனவே இப்பிரிவை உடனடியாக மூடிவிட வேண்டும். இதனை கடுமையாக எதிர்க்கின்றோம்.
இவ்விடயம் தொடர்பாக பௌத்த சாசன அமைச்சிற்கு சென்று எமது எதிர்ப்பை வெளியிட்டோம்.
இது தொடர்பாக ஆராய்ந்து தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுமென பௌத்த சாசன மத அலுவல்கள் அமைச்சு உறுதியளித்தது.
இதற்கமைய எதிர்வரும் 16 ஆம் திகதி திங்கட்கிழமை பொலிஸ் மா அதிபர் பௌத்த சாசன அலுவல்கள் அமைச்சின் செயலாளர் மற்றும் சட்டம் ஒழுங்கு தொடர்பான அமைச்சின் செயலாளர் ஆகியோருடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவுள்ளன.
இதன்போது இப் பிரிவை மூடிவிடுவதற்கான அழுத்தத்தை வழங்குவோம் என்றும் இத்தேகாந்தே சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்தார்.

Post a Comment