பெளத்த தேரர் ஒருவர் மீது முஸ்லிம் இளைஞர் ஒருவர் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் சம்பவத்தை அடுத்து அளுத்கம பிரதேசத்தில் இன்று மாலை பெரும் பதற்ற சூழல் ஒன்று நிலவியது. இந் நிலையில் தேரர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் சந்தேக நபர்கள் மூவரை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டது. இன்று இரவும் நீடித்த இந்த பதற்ற சூழல் காரணமாக அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை தம்மிடம் ஒப்படைக்குமாறு தேரர்கள் அடங்கிய ஆயிரக்ககணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் அளுத்கம பொலிஸ் நிலையத்தை சுற்றி வளைத்ததை அடுத்தே அங்கு பதற்ற சூழல் ஒன்று ஏற்பட்டது. இதனை அடுத்து பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரும் இராணுவத்தினரும் அளுத்கம பொலிஸ் நிலையத்தை அண்மித்த பகுதிக்கு வரவழைக்கப்பட்டு விஷேட பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டது.
இந் நிலையில் அளுத்கம நகருக்கு அமைச்சர்களான ரோஹித்த அபே குணவர்தன, ராஜித்த சேனரத்ன மற்றும் குமார வெல்கம ஆகியோர் நேரில் சென்று நிலைமையை அவதானித்ததுடன் பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோனும் ஸ்தலத்துக்கு இன்று இரவு சென்று நிலைமைகளை ஆராய்ந்து பாதுகாப்பை பலப்படுத்துமாறு ஆலோசனை வழங்கியிருந்ந்தார்.
சம்பவம்
நேற்றைய தினம் பாடகொடை விகாரையின் தேரர் ஒருவர் தனது சாரதியுடன் வாகனத்தில் சென்றவேளை முஸ்லிம் ஒருவருடன் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து வாகன சாரதி முஸ்லிம்களை கேவலமாக திட்டியதாக தெரிவித்து சாரதி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன் போது அருகில் இருந்த தேரரும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்தே நேற்று அங்கு பதற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து நிலைமையை சமாளிக்க பொலிஸார் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் முஸ்லிம்கள் மூவரை உடன் கைது செய்து பொலிஸ் பாதுகாப்பில் வைத்ததுடன் அவர்களை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.ராவன பலயகவினர் பொலிஸ்நிலையத்தை சுற்றிவலைப்பு
இந் நிலையில் இன்று மாலையாகும் போது இராவண பலகாய அமைப்பை சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் பிக்குகள் பலர் உள்ளிட்ட ஆயிரக்ககணக்கான மக்கள் அளுத்கம பொலிஸ் நிலையத்தை சுற்றிவளைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களை தம்மிடம் ஒப்படைக்குமாறு தெரிவித்தே அவர்கள் பொலிஸ் நிலையத்தை சுற்ரி வளைத்தனர். எனினும் பொலிஸ் நிலையத்தின் பாதுகாப்பை பலப்படுத்த பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டதுடன் இராணுவத்தினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு - காலி வீதியின் போக்கு வரத்து சில மணி நேரம் பெரிதும் தடைப்பட்டது. எவ்வாறாயினும் பொதுமக்களின் அன்றாட நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டவர்களை கலைத்த பொலிஸார் விஷேட அதிரடிப்படையினரின் உதவியுடன் நகரின் பாதுகாப்பை பலப்படுத்தினர்.
அமைச்சர்கள் விஜயம்
இன்று மாலை அளுத்கமவில் பதற்ற சூழல் நிலவிய நிலையில் நிலைமை தொடர்பில் ஆராய்ந்து ஆர்ப்பாட்டக்காரர்களை சமாதானப் படுத்த அரசின் அமைச்சர்கள் சிலர் அங்கு விஜயம் செய்தனர். ம்னீன் பிடித்துறை அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, துறைமுகங்கள் தொடர்பான அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன மற்றும் போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம ஆகியோர் அங்கு விஜயம் செய்திருந்தனர்.இன்றைய தினம் அம்பாறையில் இருந்த அமைச்சர் ரவூப் ஹக்கீம் சம்பவம் தொடர்பில் பொலிஸ் மா அதிபரை தொடர்பு கொண்டிருந்ததுடன் உரிய பாதுகாப்பு மற்றும் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஆலோசனை வழங்கியிருந்தார்.





Post a Comment