கிராண்ட்பாஸ் பள்ளி விவகாரம்;பௌத்தர்களின் பொறுமை எல்லைதாண்டி விடும் - JHU

Friday, May 30, 20140 comments


கிராண்ட்பாஸில் மீண்டும் பள்ளிவாசலை புனர்நிர்மாணம் செய்ய முனைந்தால் பௌத்தர்களின் பொறுமை எல்லைதாண்டி விடும் என எச்சரிக்கை விடுக்கும் ஜாதிக ஹெல உறுமய இப்பகுதியில் மீண்டும் குழப்பகரமான சூழல் தோன்றி இனமத மோதல்கள் ஏற்பட்டால் அதற்கான பொறுப்பை அமைச்சர் பைசல் முஸ்தபாவும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அனுர சேனாநாயகவுமே ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று  தெரிவித்தது.

பத்தரமுல்லையிலுள்ள ஜாதிக ஹெல உறுமயவின் தலைமையகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய ஜாதிக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க

கிராண்ட்பாஸ் மோலவத்த பகுதியில் களஞ்சியசாலையாக பயன்படுத்தி வந்த கட்டிடமொன்றை தொழுகைக்கான பள்ளிவாசலாக மாற்ற முனைந்ததன் விளைவாக 2013 ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி அங்கு மோதல்கள் ஏற்பட்டன. இதன் பின்னர் அமைச்சர் சம்பிக ரணவக்க தினேஷ் குணவர்தன மற்றும் பௌத்த குருமார் இணைந்து சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அனுர சேனாநாயக்க மற்றும் அமைச்சர் பைசல் முஸ்தபாவுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தினோம்.

அப்போது அப்பிரதேச முஸ்லிம் பிரதிநிதிகள் தாம் பயன்படுத்தும் பள்ளிவாசலில் இடவசதி இல்லையென்றும் அரச மரமொன்று வளர்ந்திருப்பதாகவும் எனவே தான் புதிய இடத்தில் பள்ளிவாசலை அமைப்பதாகவும் தெரிவித்தனர்.

இதன் பின்னர் பழைய பள்ளிவாசலில் வளர்ந்துள்ள அரச மரத்தை வெட்டி அப்புறப்படுத்தவும் அதனை விஸ்தரிக்கவும் நாம் ஆதரவு வழங்கினோம்.

இவ்வாறானதொரு இணக்கப்பாட்டுடன் அன்று பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது.

அத்தோடு அன்று இடம்பெற்ற மோதல்கள் சேதங்கள் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது.

இவ்வாறானதொரு நிலையில் மீண்டும் களஞ்சியசாலை இரவோடு இரவாக புனர் நிர்மாணம் செய்யப்பட்டு நோன்பை இலக்காக வைத்து பள்ளிவாசலாக்க முயற்சிக்கின்றனர்.

இங்கு பள்ளிவாசல் இருக்கக்கூடாதென மத அலுவல்கள் திணைக்களச் செயலாளரும் தடை விதித்துள்ளார்.
இதனையெல்லாம் மீறி அப்பிரதேச பௌத்த குருமாரோடு பேச்சு நடத்தாது அமைச்சர் பைசல் முஸ்தபாவும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அனுர சேனாநாயகவும் பௌத்த குருமார்களின் இணக்கப்பாடுடன் புதிய பள்ளிவாசல் புனர் நிர்மாணம் செய்யப்பட்டு வருவதாக ஊடகங்களுக்கு செய்திகள் வழங்கியுள்ளார்.

இச்செய்திகளில் உண்மையில்லை. பௌத்தர்களை மடையர்களாக்கி பௌத்த குருமாரை ஏமாற்றி தற்போது புதிய நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது.

அத்தோடு பழைய பள்ளிவாசலுக்கு அருகிலுள்ள சிங்களவர்களின் வீடுகளை பணம் கொடுத்து வாங்கி விட்டதாகவும் கூறியுள்ளார்கள்.

அம் மக்கள் இதனை மறுக்கின்றனர். எனவே தொடர்ந்தும் பிரச்சினைகளை ஏற்படுத்தி பெளத்தர்களை நெருக்கடியில் தள்ள வேண்டாம். சட்ட விரோதமான கட்டிடத்தில் மீண்டும் பள்ளிவாசல் ஆரம்பிக்கப்பட்டால் பௌத்தர்களின் பொறுமையும் எல்லை தாண்டிவிடும். இப்பிரச்சினையால் கிராண்பாஸில் இன மத மோதல்கள் தலைதூக்கும் ஆபத்து உள்ளது.

அவ்வாறானதொரு நிலையேற்பட்டால் அதற்கான முழுப் பொறுப்பையும் அமைச்சரும் பொலிஸ் அதிகாரியுமே ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றும் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்தார்.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கிரேண்ட்பாஸ் சுவர்ண சைத்திய விஹாரையின் மெட்டரம்பே தம்மானந்த தேரர் சமாதி விஹாரையை சேர்ந்த அநுருத்த தேரர் உட்பட தேரர்கள் கலந்து கொண்டனர்.
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham