பள்ளிவாசலுக்கு செல்வதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எச்.எம். அஸ்வர், ஏ.ஆர்.எம்.ஏ.காதர், பைஸர் முஸ்தபா ஆகியயோருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி. காமினி ஜயவிக்கிரம பெரேரா தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தின் நேற்று செவ்வாய்க்கிழமை அமர்வின் போது தேசிய பொது விதிகள் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான விவாதம் இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய காமினி ஜயவிக்கிரம பெரேரா கசினோ தொடர்பிலும் குறிப்பிட்டார். இதன் போதே இவ்வாறு தெரிவித்தார்.
உலக நாடுகளின் அடிப்படையில் தற்கொலை செய்வோரின் எண்ணிக்கையில் இலங்கை முன்னிலை வகிப்பதாக அறியப்பட்டுள்ளது. அவ்வாறு தற்கொலை செய்து கொள்ளும் நிலைமை இங்குள்ள முஸ்லிம் எம்.பி.க்களுக்கு நேர்ந்தால் அவ்வாறானவர்கள் பள்ளிவாசல்களுக்கு கொண்டு போகப்படமாட்டார்கள். அவர்களை காட்டுக்குத்தான் கொண்டு செல்வர். ஏனெனில் அவ்வாறானவர்கள் பள்ளிவாசல்களில் நுழைவதற்கே தடை விதிக்கப்பட்டிருக்கின்றது எனக் குறிப்பிட்டார்.
காமினி ஜயவிக்கிரம பெரேரா எம்.பி. இவ்வாறு தனது உரையை நிகழ்த்திக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் அஸ்வர் எம்.பி. சபையில் இருக்கவில்லை. காமினி ஜய விக்கிரம பெரேரா எம்.பி.யின் உரை நிறைவடைந்த பின்னர் சபைக்கு வந்த அஸ்வர் எம்.பி. ஒழுங்கு பிரச்சினை ஒன்றை எழுப்பி நான் மதிய உணவுக்காக சென்றிருந்த வேளையில் இங்கு உரையாற்றிய காமினி ஜய விக்கிரம பெரேரா எம்.பி. எனது பெயரைக் கூறி இங்கு பேசியிருந்தார்.
முஸ்லிம்கள் குறித்து பேசுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி. காமினி ஜயவிக்கிரம பெரேராவுக்கு அருகதை கிடையாது. மேலும் அவர் கூறுவது போன்று எந்தவொரு பள்ளிவாசலிலும் எனக்கு எந்தவொரு தடையும் விதிக்கவில்லை என்று ஆளும் கட்சி எம்.பி. ஏ.எச்.எம். அஸ்வர் நேற்று சபையில் தெரிவித்தார்.
நான் பள்ளிவாசலில் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக அவர் கூறியுள்ளார். அவர் கூறுவது போல் எந்தவொரு பள்ளிவாசலில் நுழைவதற்கும் எனக்கு தடை விதிக்கப்படவில்லை. அவ்வாறு தடை விதிக்கவும் முடியாது.
என்னைப்பற்றியோ அல்லது முஸ்லிம்கள் பற்றியோ பேசுவதற்கு காமினி ஜயவிக்கிரம பெரேராவுக்கு அருகதை இல்லை. இத்தகைய கருத்துக்கள் கன்சாட்டிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்றார்.
இதற்குப் பதிலளித்த சபாநாயகர் சமல் ராஜபக் ஷ காமினி ஜயவிக்கிரம பெரேரா எம்.பி. யின் உரையின் போது அஸ்வர் எம்.பி. யின் பெயரைக் குறிப்பிட்டதாக தெரியவில்லை எனத் தெரிவித்தார்.
Post a Comment