பேரினவாதம் என்ற சிக்கலான நிலையில் இந்த நாட்டில் சிறுபான்மை சமூகத்திலிருந்து ஜனாதிபதியாக என்ன பிரதமராகவோ, சபா நாயகராகவோ, பிரதம நீதியரசராகவே வரவே முடியாத நிலையே உருவாகி இருப்பதாகத் தெரிவித்த நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் கடந்த காலத்தில் குற்றவியல் பிரேரணை கொண்டுவரப்பட்டதன் பின்னணியிலேயே இத்தகைய நிலைதோன்றி இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார். கடந்த கால அனுபவங்களினூடாக எதிர்கால அரசியலுக்காக பரந்தளவிலான விட்டுக்கொடுப்பு அவசியமானதெனவும் அவர் தெரிவித்தார்.
மறைந்த தொழிற்சங்கத் தலைவர் ஏ.அஸீஸின் 24ஆவது ஞாபகார்த்ததின வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே நீதியமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது;
தொழிற்சங்கத் தலைவர் அஸீஸை தனியே தொழிற்சங்கத் தலைவராக பார்க்க முடியாது. தூரநோக்கில் சிந்திக்கும் அரசியல் தலைவராகவும் நாம் அவரை பார்க்கின்றோம். நாட்டின் சுதந்திரத்துக்கு முன்னும் அதன் பின்னரும் அவரது பங்களிப்பு மிக முக்கியமானவையாகும். இந்திய வம்சாவளி மக்களுக்கு பல உரிமைகளை வென்றெடுத்துக் கொடுப்பதில் தொடர்ந்து வெற்றிகளைக் கண்டவராவார். அவரது பங்களிப்பு இன்றைய இளம் தலைமுறையினருக்குத் தெரியவில்லை.
இதனை இப்படியே விட்டுவிடாது அவரது அரசியல், தொழிற்சங்கச் செயற்பாடுகள் தொடர்பிலான வரலாறு ஆவணப்படுத்தப்பட வேண்டும். இந்த ஞாபகார்த்தக் கமிட்டியும், அஸீஸ் மன்றமும் அந்தப் பணியை தாமதமின்றி முன்னெடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கின்றேன்.
நாட்டின் இன்றைய அரசியல் போக்கு விசித்திரமானதாகவும், வித்தியாசமானதாகவுமே காணப்படுகின்றது. இலங்கையின் அரசியல் வரலாற்றில் சிறுபான்மைச் சமூகத்தை சேர்ந்த ஒருவர் ஜனாதிபதியாகவோ, பிரதமராகவோ, வந்தது கிடையாது, வரவும் விடமாட்டார்கள். இன்றைய நிலையில் சபா நாயகராகவோ, பிரதம நீதியரசராகவோ கூட வரமுடியாது. ஒரு காலக்கட்டத்தில் சபாநாயகராகவும், பிரதம நீதியரசராகவும் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டனர்.
இன்று உருவாகியுள்ள பேரினவாதச் சிக்கல் அதற்கும் ஆப்பு வைத்துள்ளது. இவ்வாறான நிலையில் பொதுவேட்பாளராக சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர் நிறுத்தப்படுவது குறித்து கவனம் செலுத்தப்படுகின்றது.
இந்த விடயங்களில் ஆரோக்கியமாகச் சிந்திக்க வேண்டும் 50இற்கு 50 என்ற கோரிக்கை தொடர்பில் பல தடவைகள் பேசப்பட்ட விடயமாகும். அதனைக் கூட நடைமுறைப்படுத்த முடியவில்லை. அன்று தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் மு.சிவசிதம்பரம், முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் ஆகியோருக்கிடையில் கூட இந்த விடயங்கள் பேசப்பட்டன.
இவ்வாறான கடந்த கால அனுபவங்களூடாக எதிர்கால அரசியலுக்கு பரந்தளவிலான விட்டுக்கொடுப்பு அவசியமென நான் கருதுகின்றேன். தலைவர் அஸீஸ் காட்டிய அரசியல் அணுகுமுறைகளையும் நாம் சீர்தூக்கிப் பார்த்து பேரினவாத அரசியல் போக்குக்கு ஈடுகொடுக்கக் கூடிய புதிய அணுகுமுறையை நோக்கிப் பயணிப்பதற்கான வழிமுறையைத் தேடவேண்டும் எனவும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
Post a Comment