தம்புள்ளை பள்ளிவாசல்: வாக்குறுதிகளை நம்பமுடியாது - ரிஷாத்
Sunday, May 11, 20140 comments
தம்புள்ளை ஹைரிய்யா பள்ளிவாசலுக்கு மாற்றுக்காணி வழங்கப்படும் என்று வழங்கப்பட்டுள்ள வாக்குறுதியில் நம்பிக்கையில்லை. ஜனாதிபதி பள்ளிவாசலின் இருப்புக்கு ஏற்கெனவே உறுதி வழங்கியிருந்த நிலையில், மதகுரு ஒருவரின் அழுத்தத்தின் பேரில் இந்த புதிய வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன என கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், பள்ளிவாசல் நிர்வாகம் இந்த மாற்று வழிக்கு இணக்கம் கண்டுள்ளது. பள்ளிவாசல் நிர்வாகம் விரும்பும் பகுதியில் மாற்றுக்காணி வழங்கப்பட்டு பள்ளிவாசல் நிர்மாணிக்கப்பட வேண்டும். பள்ளிவாசலும் நிர்மாணிக்கப்பட்டு வழங்கப்பட வேண்டுமென்பதே சமூகத்தின் எதிர்பார்ப்பாகும்.
ஆனால், அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமா என்ற சந்தேகம் மக்கள் மத்தியிலுள்ளது. கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் விவகாரம் இதற்கு சிறந்த உதாரணமாகும். கிராண்ட்பாஸ் சின்னப் பள்ளியை மூன்று மாதங்களுக்குள் பக்கத்து காணியில் நிர்மாணித்து தருவதாக உறுதியளிக்கப்பட்டது. இந்த உறுதி மொழி அமைச்சர்கள், உலமாக்கள், பௌத்த குருமார்கள், பொலிஸ் உயரதிகாரிகள் முன்னிலையில் வழங்கப்பட்டன. ஆனால், பல மாதங்கள் கடந்தும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.
மதஸ்தலங்களை அழித்துவிட்டு அபிவிருத்திகளை மேற்கொள்வது இனங்களுக்கிடையிலான நல்லுறவுகளைப் பாதிக்கும். முஸ்லிம்களுக்கு இந்நாட்டில் மதச் சுதந்திரம் அரசியல் யாப்பின் மூலம் வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் அனைத்து மக்களுக்கும் மதச் சுதந்திரம் உள்ளது. தம்புள்ளை பள்ளிவாசல் இன்று நேற்று நிர்மாணிக்கப்படவில்லை. 60வருட வரலாறுடைய பள்ளிவாசல் அது.
பள்ளிவாசல் நிர்வாகம் இது விடயத்தில் இணக்கத்துக்கு வந்துள்ளமையால் என்னால் இதனையும் மீறி எதுவும் கூறமுடியாது. ஆனால்,நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்வாகத்துக்கு வழங்கப்பட்டுள்ள வாக்குறுதிகள் காற்றில் கலந்துவிடக்கூடாது. காப்பாற்றப்பட வேண்டும்.
நகர அபிவிருத்தி சபை அவ்விடத்திலிருந்து பள்ளிவாசலை அப்புறப்படுத்துவதென்றால் நிர்வாகம் விரும்பும் இடத்தில் புதிதாக பள்ளிவாசலொன்று நிர்மாணித்து வழங்கல் வேண்டும். இதுவே நியாயமானதாகும். இது விடயத்தில் சமூகமும் நானும் தொடர்ந்தும் அவதானத்துடனே இருப்போம் என்றார்.
இது தொடர்பில் முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் எம்.எச்.எம். ஸமீலை தொடர்பு கொண்டு வினவியபோது, திணைக்களத்துக்கு பள்ளிவாசல் அகற்றப்படுவது தொடர்பாக உத்தியோகபூர்வ அறிவிப்புகள் எதுவும் கிடைக்கவில்லை எனவும் பள்ளிவாசல் நிர்வாகம் சம்பவம் குறித்து தொலைபேசியூடாக முறையிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
Post a Comment