மாற்று மதத்தை தூற்றுவது மார்க்கத்துக்கு முரணாகும் - உலமா சபை

Friday, May 23, 20140 comments


ஒருவர் மற்றையவரின் மதங்களையும், மதத்தலைவர்களையும் தூற்றுவது இஸ்லாமிய வழிமுறைக்கு முற்றிலும் மாற்றமானதாகும். இதை எவர் செய்தாலும் நாம் வன்மையாக கண்டிக்கிறோம். ஒருசில வழி தவறியவர்களின் செயற்பாடுகள் குறித்து கவலைப்படுவதுடன் இவற்றை பெரும்பான்மை முஸ்லிம்கள் ஆதரிக்கவில்லை என்றும் அவர்களுக்கு தக்க தண்டனை வழங்கப்பட வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை தெரிவித்துள்ளது.

இன மற்றும் மத அடிப்படையில் செயற்படும் தீவிரவாத போக்குள்ள குழுக்கள் ஒன்றுக்கொன்று தூற்றிக் கொண்டும் மோசமாக விமர்சித்துக் கொண்டும் இருப்பதற்கு கண்டனம் தெரிவித்து உலமா சபையின் ஊடக செயலாளர் அஷ்ஷெய்க் பாசில் பாரூக் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையில் முஸ்லிம்கள் பெரும்பான்மை சிங்கள பௌத்த மக்களுடன் சிநேகபூர்வமாக நூற்றாண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். பௌத்த மதத்திற்கு மதிப்பளிக்கின்றனர். இந்து, கிறிஸ்தவர்களுடனும் நல்லுறவுடன் வாழ்கிறார்கள்.

யுத்தத்துக்கு பின்பு சமாதானம் உருவாகி சுமுகமான சூழலொன்று உருவாகும் என்ற மக்களின் நம்பிக்கை வீண்போய் விடுமோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. நாட்டில் நடைபெறும் சம்பவங்கள் கவலை தருகின்றன. இன மற்றும் மத அடிப்படையில் செயற்படும் தீவிரவாத போக்குள்ள குழுக்கள் ஒருவர் மற்றவரைத் தூற்றிக் கொண்டும் மோசமாக விமர்சனம் செய்து கொண்டும் நாட்டை பயங்கரமான அழிவொன்றுக்கு இட்டுச் செல்லும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது நடைபெற்று வரும் சில குழப்பங்களுக்கு இந்நாட்டின் பெரும்பான்மை முஸ்லிம்களின் ஆதரவு  சிறிதும் கிடையாது என்பதை ஏனையோரும் ஆணித்தரமாக சுட்டிக் காட்டுகின்றோம். இந்த காலகட்டத்தில் முஸ்லிம்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற வழிகாட்டல்களையும் முன்வைக்கிறோம்.

மத மற்றும் இன ஒற்றுமை சீர்குலைவதற்கான முக்கியமான காரணிகள் சிலவற்றை உலமா சபை இனம் கண்டுள்ளது. இதில் முதலாவது விடயம் ஒருவருடைய மதத்தை மற்றவருக்குத் திணிக்க முயற்சிப்பதாகும். இஸ்லாம் இதை ஒரு போதும் ஏற்பதில்லை. மார்க்கத்தில் வற்புறுத்தல் கிடையாது என்றே திருக்குர்ஆன் கூறுகின்றது.

அடுத்த விடயம் ஒருவர் மற்றவரின் மதங்களையும், மதத்தலைவர்களையும் தூற்றுவதாகும். இதுவும் இஸ்லாமிய வழி முறைக்கு முற்றிலும் மாற்றமானதே. இதை எவர் செய்தாலும் முஸ்லிமாகிய நாம் வன்மையாக கண்டிக்கிறோம். அவர்கள் வணங்கும் அல்லாஹ் அல்லாதவற்றை நீங்கள் தூற்ற வேண்டாம் என்றே குர்ஆன் தெரிவிக்கிறது. ஒரு சில வழி தவறியவர்களின் இது போன்ற செயற்பாடுகள் தொடர்பாக நாம் கவலையைத் தெரிவித்துக் கொள்கிறோம். இதனை இந்நாட்டில் வாழும் பெரும்பான்மை முஸ்லிம்கள் அங்கீகரிப்பதில்லை என்பதை ஆணித்தரமாக கூறுகிறோம்.

மத ஒற்றுமையச் சீர் குலைக்கும் இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளைக் கேட்டுக் கொள்கிறோம்.

இறுதியாக சகவாழ்வு தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வழங்கி வரும் வழிநடத்தல்களை பேணியவாறு  சகல இன மக்களுடனும் சகோதரத்துவம் மற்றும் பரஸ்பர நட்புடன் நடந்து கொள்ளுமாறு இந்நாட்டு முஸ்லிம்களை உலமா சபை கேட்டுக்கொள்கிறது.

குறிப்பிட்டவாறு ஒரு சிலர் மேற்கொள்ளும் முறை கெட்ட செயல்கள் இந்நாட்டில் வாழும் சகல முஸ்லிம்களினதும் எண்ணத்தைப் பிரதிபலிப்பதாக எண்ண வேண்டாம் எனவும் பௌத்த, இந்து மற்றும் கிறிஸ்தவ சகோதரர்களிடம் நாம் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

அத்தோடு ஏற்றத்தாழ்வோ இன, மத சார்புகளோ இன்றி சகலருடைய விடயத்திலும் சட்டத்தை பாராபட்சமின்றி நடைமுறைப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நாம் கேட்டுக் கொள்கிறோம்.

நம்மிடையே தோன்றும் பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் அமைதி வழியில் தீர்த்தவர்களாக இலங்கைத் தாயின் பிள்ளைகளாக கைகோர்க்க நாம் முன்வருவோமாக எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham