ஜனாதிபதி சீனாவிலிருந்து நாடு திரும்பியதும் முஸ்லிம் எம்பிகளை சந்திக்கவிருப்பதாக கூறப்பட்ட போதிலும் அவர் இவர்களை சந்திக்காது அவசரமாக அமைச்சர் விமல் வீரவன்சவையே சந்தித்தார். முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்திப்பதற்கு ஜனாதிபதிக்கு நேரம் ஒதுக்க முடியவில்லையா? அல்லது முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்த ஜனாதிபதிக்கு விருப்பமில்லையா என மேல்மாகாண சபை ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கேள்வி எழுப்பினார்.
கடந்த திங்கட்கிழமை ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான ஸ்ரீ கொத்தாவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினர்.
இதேவேளை, ஊழல் மோசடிமிக்க காங்கிரஸ் ஆட்சி கவிழ்க்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவை தாக்கிய அரசியல் சூறாவளி இலங்கையை தாக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
ஜனாதிபதி மஹிந்த இந்தியாவின் பிரதமராக பதவியேற்கவுள்ள நரேந்திர மோடியை விடவும் அமைச்சரான விமல் வீரவன்ஸவிற்கே அதிகம் பயந்து நடுங்குகிறார். முஸ்லிம் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைக்கு நேரம் ஒதுக்காத ராஜபக்ஷ அமைச்சர் விமலுடன் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த நேரம் ஒதுக்குகின்றமையிலிருந்தே அவருடைய பயம் வெளி உலகுக்கு காட்டப்படுகிறது என்றார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்;
பாராளுமன்றத்தில் இரண்டு ஆசனங்களை தன்வசம் வைத்து கொண்டுள்ள விமல் வீரவன்ஸவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் ஜனாதிபதி, முஸ்லிம்களுடைய பிரச்சினைகள் தொடர்பில் முஸ்லிம் எம்.பி.க்கள் பேச்சுவார்த்தைக்கு அழைத்து கடிதம் எழுதி 3 வாரங்கள் கழிந்துவிட்ட நிலையிலும் இதுவரையில் ஜனாதிபதி எவ்வித பேச்சுவார்த்தைக்கும் அழைப்பு விடுக்கவில்லை.
அவர்கள் இந்நாட்டின் சிறுபான்மையின மக்கள் தொடர்பிலும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் எவ்வாறான நிலைப்பாட்டை வைத்துள்ளார் என்பது தெளிவாகிறது.
அரசின் பங்காளிகளான அமைச்சர் விமல் வீரவன்ஸ, சம்பிக்க ரணவக்க உள்ளிட்டோர் அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட்டு வருகின்றனர். அதேபோன்று நாட்டில் போராட்டங்களும் குறைந்தபாடில்லை. எனவே ராஜபக்ஷ குடும்ப ஆட்சி முடிவுக்கு கொண்டு வரப்படவுள்ளது.
அண்மையில் பஹ்ரைனுக்கு விஜயமொன்றை மேற்கொள்வதற்கு முன்னர் மத விவகாரங்களை கையாள்வதற்கான பொலிஸ் பிரிவொன்றை ஆரம்பித்துவிட்டுச் சென்றார். அது அரபு நாடுகளை ஏமாற்றுவதற்காகத்தான். அது போன்று வட மாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு இந்தியாவுக்கு அழைத்துக்கொண்டுபோய், 'நாட்டில் 13 முழுமையாக அமுல்படுத்திவிட்டோம்' 'பிரச்சினைக்கு தீர்வு கண்டுவிட்டோம்' என அந்நாட்டையும் ஏமாற்ற நினைத்தார். ஆனால் அது நடக்கவில்லை என்றார்.
.jpg)
Post a Comment