அல்குர்ஆனை விமர்சிக்கும் செயற்பாட்டை பொதுபல சேனா நிறுத்த வேண்டும் - பைஸர் முஸ்தபா

Tuesday, April 29, 20140 comments


முஸ்லிம் சமூகத்திற்கும், அவர்களின் புனித அல்குர்ஆனுக்கும் தொடர்ந்தும் அபகீர்த்தி ஏற்படும் வகையில் பொதுபலசேனா அமைப்பினர் நடந்து கொள்ளும் விதத்தை அரசில் அங்கம் வகிக்கும் பிரதியமைச்சர் என்ற வகையில் வன்மையாகக் கண்டிக்கின்றேன். இத்தகைய அவர்களது செயலானது, முஸ்லிம் மக்களுக்கிடையிலும் ஏனைய சமூகங்களுக்கிடையிலும் விரிசலை ஏற்படுத்த வழிவகுக்கும்.  எனவே பொதுபலசேனா அமைப்பினர் இத்தகைய சிந்தனைக்குதவாத அருகதையற்ற செயல்களை உடனடியாக கைவிட வேண்டும் என ஸ்ரீல.சு.க. மத்திய கொழும்பு அமைப்பாளரும் முதலீட்டு ஊக்குவிப்பு பிரதியமைச்சருமான பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

பொதுபல சேனாவின் செயற்பாடுகளை கண்டித்து இவர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இலங்கை வாழ் முஸ்லிம் மக்களுக்கும் ஏனைய சமூகங்களுக்கிடையிலும் நிலவும் உறுவுகளைச் சீர்குலைக்க முனைந்து வருகிறார். இவர் கடந்த 2014.04.12 ஆம் திகதி தொலைக்காட்சி மூலம் வெளியிட்ட கருத்துக்கள் என் கவனத்தை ஈர்க்க வைத்துள்ளதுடன், இது தொடர்பில் நான் மனவேதனை அடைந்து விரக்தி நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளேன்.

புனித அல்குர்ஆனில் தக்கியா எனும் பெயரில் மற்றவர்களின் காணிகளை அபகரியுங்கள் அடுத்தவர்களின் சொத்துக்களை பறித்தெடுங்கள் என ஒரு வசனம் இருப்பதாக பொதுபல சேனா அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இவ்வாறானதொரு வசனம் இருப்பதாக தெரிவிப்பது, உண்மைக்குப் புறம்பான அப்பட்டமான பொய் என்பதை உலக வாழ் முஸ்லிம்கள் அனைவரும் அறிவார்கள். இவ்வாறானதொரு வசனம் குர்ஆனில் இடம்பெறவில்லை என்பதை நாம் உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.

புனித அல் குர்ஆன் என்பது அல்லாஹுத ஆலாவினால் இறக்கப்பட்ட திருவசனங்களாகும். இவ்வசனங்கள் ஊடாக ஏனையோரை நிந்திப்பதோ அல்லது மானபங்கப்படுத்துவதோ அல்குர்ஆன் அருளப்பட்டதன் நோக்கமல்ல. அனைவருக்கும் வழிகாட்டும் ஒரு அற்புத வேதமாகவே அல்குர்ஆன் அமைந்துள்ளது. புனித குர்ஆன் நம்பத்தகுந்ததும், உண்மையானதுமாகும். இதில் எவ்வித சந்தேகங்களுமில்லை. இந்நிலையிலேயே பொதுபல சேனாவின் செயலாளர் குர்ஆனை அவமதித்துப் பேசி வருகிறார்.

ஞானசார தேரர் புனித குர்ஆனை அவமதித்துப் பேசியிருப்பது  இது முதற்தடவையல்ல. இதற்கு முன்பும் பல தடவைகள் இவ்வாறான தகாத வார்த்தைகளினால் அல் குர்ஆனை விமர்சித்துப் பேசியிருக்கிறார். இதனை அவர் வேண்டுமென்றே செய்து வருகின்றமை தெட்டத்தெளிவாகப் புரிகின்றது. கண்டியில் சில மாதங்களுக்கு முன் நடாத்திய கூட்டமொன்றில் கூட முஸ்லிம் மக்கள் முஸ்லிம் அல்லாதோருக்கு உணவு வகைகளை வழங்கும் போது அந்த உணவில் எச்சில் துப்பியே வழங்கும் வசனமொன்றும் அல் குர்ஆனில் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக 2013.03.17 ஆம் திகதி சகல ஊடகங்களிலும் செய்திகள் பரவலாக வெளிவந்திருந்ததை யாவரும் அறிவீர்கள்.

உண்மைக்கு புறம்பான கருத்துக்களை அல்லது வேண்டுமென்றே திணிக்கப்பட்ட கருத்துக்களை திரும்பத் திரும்பக் கூறி வரும் இவர்கள் போன்றவர்களால் பௌத்த தர்மத்தின் மகிமை சீர்கெட்டுப் போயுள்ளது. பௌத்த தர்மத்தின் பிரகாரம் உலகம் போற்றும் உத்தமர்களாக இருக்க வேண்டியவர்கள் இன்று காவி உடைகளை அணிந்து கொண்டு புத்த பெருமானுக்கும் பௌத்த தர்மத்துக்கும் பங்கம் விளைவித்துக் கொண்டிருக்கின்றனர்.

புத்த பெருமான் போதித்தவாறு அன்பு, கருணை, அகிம்சை, பொருமை, எளிமை போன்ற நற்குணங்களும், நற்செயல்களும் இவர்களிடம் இல்லையென்றால் இந்த பௌத்த தர்மத்தைப் பின்பற்றுவதிலும் எதுவித நன்மையுமில்லை. அர்த்தமுமில்லை. இவ்வாறான செயற்பாடுகள் மூலம் அவர் போதித்த தர்மத்துக்கும், அவருடைய வழிகாட்டலுக்கும் இழுக்கு ஏற்படுகிறது.

முஸ்லிம் சமூகத்தையும், புனித அல் குர்ஆனையும் விமர்சித்தும் இவ்வாறு கோபத்தை ஊட்டும் செயற்பாடுகளினால் முஸ்லிம் மக்கள் நிதானத்தை இழந்து போயுள்ளனர். இந்நிலையிலும் கூட புனித அல் குர்ஆனின் கூற்றுப்படி முஸ்லிம்கள் அமைதியையும் பொறுமையையும் கடைப்பிடித்து இன்று புனித அல் குர்ஆனுக்கு மதிப்பையும், மரியாதையையும் கொடுத்து வருகின்றனர். எனினும் முஸ்லிம்களின் பொறுமையை தொடர்ந்தும் சோதிக்கக் கூடாது என பொதுபல சேனா அமைப்பிடம் மீண்டுமொரு முறை வேண்டிக்கொள்கிறேன்.

நான் ஐக்கிய இலங்கை ஒன்றுக்காக மிகுந்த விசுவாசம் வைத்துள்ளதோடு அதனைப் பாதுகாத்து கட்டியெழுப்புவதிலும் பெரும் ஆர்வம் காட்டி வருகிறேன். இலங்கையின் ஒருமைக்காக இடைவிடாது துணிந்து பாடுபடவும் நான் என்னை அர்ப்பணித்துள்ளேன். பாராளுமன்ற உறுப்பினராக நான் கண்டி மாவட்டத்தில் தெரிவாகி வரப்பிரசாதங்களைப் பெற்றுக் கொண்டாலும் சிங்கள - பௌத்த மக்கள் அதிகதமாக வாழும் தொகுதியிலேயே என்னைத் தெரிவு செய்து பாராளுமன்றம் அனுப்பி வைத்துள்ளனர். இந்த நன்றியை நான் ஒருபோதும் மறக்கமாட்டேன். இதற்கு நன்றிக் கடனாக பௌத்தர்களின் சில முக்கிய தேவைகளை நிறைவேற்றிக் கொடுத்துள்ளதோடு பல்வேறு அபிவிருத்திப் பணிகளையும் அவர்களுக்காக மேற்கொண்டுள்ளேன்.

இதுதவிர பௌத்த மகாநாயக்க தேரர்களுடனும், நான் மிகவும் அன்யோன்யமாக, கௌரவமாக நெருங்கி பழகி வருகின்றேன். முப்பது வருட கால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ள அரசாங்கம் இன்று நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சமாதானத்தின் பின்னணியில் அனைத்து சமயங்களும் ஒரே கொடியின் கீழ் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதே எனது விருப்பமும் வேண்டுகோளுமாகும்.

Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham