பொது பல சேனாவின் ஆதரவே அரசுக்கு தேவை: வினோ எம்.பி
Monday, April 28, 20140 comments
'ஆட்சியில் உள்ள அரசாங்கத்திற்கு அமைச்சரை விட பொது பல சேனாவின் ஆதரவும், பலமும் தேவையாக உள்ளது. பௌத்த மதவாத அமைப்புக்களையோ, கட்சிகளையோ பகைத்துக்கொண்டு ஒரு நாள் கூட ஆட்சியில் அமர முடியாது என்பதே எந்தவொரு பெரும்பான்மை கட்சிக்கும் பொருந்தக்கூடிய அரசியல் வரலாறு' என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.
அன்று நீதிமன்ற கட்டிடத்திற்கு கல்லெறிந்து நீதவானுக்கு தொலைபேசியில் அச்சுறுத்தி, மன்னார் நகரமே எரியப்போகின்றது... தீர்ப்பை மாற்றி எழுது... என சட்டத்திற்கு சவால் விடுத்த அமைச்சர் றிஸாட் பதியுதீன் இன்று அமைச்சுக் கட்டிடத்திற்குள் அத்துமீறி நுழைந்த பொது பல சேனா அமைப்பைச் சேர்ந்த பிக்குகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கையில் இறங்கப்போவதாக மக்களை ஏமாற்ற நினைப்பது வேடிக்கையாக இருப்பதாகவும் வினோ எம்.பி குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இறுதியில் பொது பல சேனாவிடமும் மன்னிப்பு கேட்டு வழக்கை விளக்கிக்கொள்ளும் கூத்தாகத்தான் இந்த பிரச்சினையும் முடியும். பொது பல சேனாவை சட்ட ரீதியாக சந்திப்பதற்கு அமைச்சர் றிஸாட்டிற்கு எந்தத் தகுதியும் கிடையாது.
அவர் சட்டத்தை தவறாகப் பயன்படுத்தியவர். தான் விட்ட அம்பு தன்னையே திரும்பித் தாக்குவதை கற்பனையிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். கட்டுக்கடங்காத காட்டுத்தர்பார் நடத்தும் பொது பல சேனாவை கட்டுப்படுத்த முடியாத கையறு நிலையில் தான் அமைச்சரவை அந்தஸ்து பெற்ற அமைச்சரின் நிலை இன்று இருக்கின்றது.
அமைச்சரின் அலுவலகத்திற்கே இந்த நிலை என்றால் நாளை அமைச்சருக்கும் இதே நிலையே ஏற்படும். இந்த நிலையில் அப்பாவி தமிழ், முஸ்ஸிம் மக்களின் நிலை என்ன? முஸ்லிம் மக்களுக்கு தலைமைத்துவத்தை வழங்கும் தார்மீகத் தகுதியை இழந்து நிற்கும் அமைச்சர் றிஸாட், நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சுப் பதவிகளை தூக்கி எறிந்து விட்டு மறுச்சிக்கட்டி மக்களுடன் வீதியில் இறங்கி போராட முனவர வேண்டும்.
மன்னாரிலும், வட, கிழக்கு பிரதேசங்களிலும் தமிழ், முஸ்ஸிம் இனங்கள் பிரிந்து நின்றால் இழந்த உரிமைகளை, இழந்த நிலங்களை ஒரு போதும் மீட்டெடுக்க முடியாது. தமிழ் முஸ்ஸிம் மக்களும், தலைமைகளும் ஓரணியில் நின்றால் எத்தனை சேனாக்களையும் எதிர்கொள்ள முடியும். பதவிகளை தூக்கி எறிந்து போராட நாங்கள் தயாராக இருக்கின்றோம். அமைச்சர்களும் தமது பதவிகளை இராஜினாமா செய்து விட்டு வரத் தயாரா?
அடுத்தவன் வீட்டில் தீப்பிடிக்கும் போது கைகட்டி வேடிக்கை பார்த்து அமைதியாக எஜமானிய விசுவாசம் காட்டிய அமைச்சர், சொந்த வீட்டில் தீப்பிடிக்கும் போதுதான் அயலவனைப் பற்றி சிந்திக்கின்றார்' என வினோ எம்.பி தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment