ஓய்வுபெறுவது குறித்து இன்னமும் நான் தீர்மானிக்கவில்லை - டில்ஷான்
Thursday, December 18, 20140 comments
ஒருநாள் கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வுபெறுவது குறித்து நான் இன்னமும் தீர்மானிக்கவில்லை என இலங்கை அணியின் சகலத்துறைவீரர் திலகரட்ண டில்ஷான் தெரிவித்துள்ளார்.
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 07 ஆவதும் இறுதியுமான போட்டி நேற்றுமுந்தினம் (16) கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்றது.
இந்தப் போட்டியில் இலங்கையணி 87 ஓட்டங்களால் வெற்றிபெற்று தொடரை 5 - 2 என கைப்பற்றியது. நேற்றைய போட்டியில் 101 ஓட்டங்களை பெற்ற டில்ஷான் போட்டியின் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டதோடு தொடரின் ஆட்டநாயகனாகவும் தெரிவுசெய்யப்பட்டார்.
இதனையடுத்து ஊடகவியலாளர்களை சந்தித்த டில்ஷான் தனது ஓய்வுகுறித்து கருத்து தெரிவிக்கையில்: இந்த தொடரில் நூறு ஓட்டங்களை பெற்றது சிறப்பானதொன்றாகும். இந்ததொடரில் சகல துறையில் சிறப்பாக செயற்பட்டதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். இளையவீரர்கள் சிறப்பாக விளையாடுகின்றனர். இவர்களுடன் சேர்ந்து உலகக் கிண்ணத்தொடரை வெல்வது தொடர்பான சிந்தனைகளே உள்ளன.
மேலும் ஒருநாள் அரங்கில் நான் ஓய்வுபெறுவது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை. எனது உடல் நிலை நன்றாகவே உள்ளது. எதிர்வரும் உலகக் கிண்ணத் தொடருக்குபின்னர் எதுவரை என்னால் விளையாட முடியுமோ அதுவரை விளையாடுவேன். அதற்கு பின்னரே ஒருநாள் அரங்கில் ஓய்வுபெறுவது குறித்த தீர்மானத்தை எடுப்பேன் என்றார்.
ஒருநாள் அரங்கில் 300 போட்டிகளில் விளையாடியுள்ள டில்ஷான் துடுப்பாட்டத்தில் 18 சதங்கள் 41 அரைச் சதங்கள் அடங்கலாக 9004 ஓட்டங்களை கடந்துள்ளார். 2012 பெப்ரவரி 28 ஆம் திகதி அவுஸ்திரேலியா ஹோபர்ட் மைதானத்தில் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் ஆட்டமிழக்காது 160 ஓட்டங்களை பெற்றதே அவர் ஒருநாள் தொடரில் பெற்ற அதிகூடிய ஓட்ட பிரதியாகும். மேலும் பந்துவீச்சில் 300 போட்டிகளில் பங்குபற்றி 93 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளதோடு களத்தடுப்பில் 109 பிடியெடுப்புகளை எடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment