கண்டி மாவட்டத்தில் மண்சரிவு அபாயம்; 590 பேர் பாதிப்பு
Thursday, December 25, 20140 comments
கடும் மழை மற்றும் மண்சரிவு அபாயத்தினால் கண்டி மாவட்டத்தில் 173 குடும்பங்களைச் சேர்ந்த 590 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த சில தினங்களாக பெய்து வரும் அடை மழையினால் மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டி மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவு குறிப்பிடுகின்றது.
சீரற்ற வானிலை காரணமாக மாவட்டத்தில் 4 வீடுகள் முழுமையாகவும், 63 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
அதிக மழை மற்றும் மண்சரிவு அபாயம் காரணமாக உடதும்பர மற்றும் தொலுவ பிரதேச செயலகப் பிரிவுகளே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதுடன், உடதும்பரயில் 40 குடும்பங்களைச் சேர்ந்த 103 பேரும், தொலுவயில் 34 குடும்பங்களைச் சேர்ந்த 104 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீரற்ற வானிலையினால் கண்டி மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், 8 நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கான நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதுதவிர கண்டி மாவட்டத்தின் ஹப்புகந்த, மினிபே, ஹசலக, தொலுவ, புபுரஸ்ஸ, பாத்த ஹேவாஹெட்ட, தலாதுஓயா, உடுவெல பகுதிகளில் தொடர்ந்தும் மண்சரிவு அபாயம் நிலவியுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
Post a Comment