உலகிலேயே அதிக கடன் சுமையுள்ள நாடாக இலங்கையை மாற்றியமைத்த பெருமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவையே சாரும். இக்கடன் சுமைகளிலிருந்து எமது எதிர்கால சந்ததியினரை காப்பாற்ற வேண்டுமானால் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். இதற்கு நடைபெறவுள்ள ஊவா மாகாண சபை தேர்தலை சாதகமாக பயன்படுத்தி கொள்ள வேண்டியது மக்களின் கைகளிலேயே உள்ளது என ஊவா மாகாண ஐ.தே.க. முதலமைச்சர் வேட்பாளர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார்.
பண்டாரவளை மாநகர சபை மண்டபத்தில் மாநகர சபை தவிசாளர் சமிந்த விஜயசிறி தலைமையில் நடைபெற்ற ஊவா மாகாண சபை அபேட்சகர்கள் அறிமுக விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
இலங்கையினை அதிக கடன் சுமையுள்ள நாடாக மாற்றிய பெருமை ராஜபக் ஷ ஜனாதிபதியினையே சாரும். எனவே நாம் இக்கடன் சுமைகளிலிருந்து எமது எதிர்கால சந்ததிகளை காப்பாற்ற வேண்டுமானால் ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்தியே ஆக வேண்டும். இதனை கருத்தில் கொண்டு இம் மாகாணத்தில் இடம் பெறும் மாகாண சபைத்தேர்தலில் நாம் அரசுக்கு நல்ல பாடம் புகட்ட வேண்டும்.
நாட்டின் ஜனாதிபதியின் அண்ணனின் மகன் முதலமைச்சராகவிருந்த இம் மாகாணம் இலங்கையில் மிகவும் வறுமையுள்ள மாகாணமாகவே காணப்பட்டது. செழுமையான பகுதிகளில் இடம்பெறும் நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் இவர் மாகாண சபை பிரதேசங்களில் இடம்பெறுகின்ற நிகழ்வுகளுக்கு செல்வதில்லை. இப்படிப்பட்டவர்களால் எவ்வாறு இம்மாகாணத்தினை முன்னேற்ற முடியும்.
உலகத்தில் மிகவும் குறைந்த சனத்தொகை கொண்ட நாடான சீசலஸ் நாட்டில் இலங்கை பணங்களைக் கொண்டு இலங்கை வங்கியொன்று கட்டப்பட்டுள்ளது. இதனால் யாருக்கு இலாபம் கிடைக்கப்போகிறது ? ராஜபக் ஷ குடும்பத்தின் பணங்களே அங்கு வைப்பிலிடப்படவுள்ளது. மீண்டும் எமது நாட்டுக்கு அவை கடனாக பெறப்படப்போகின்றது என்பதை நீங்கள் அறிய வேண்டும். இவ்வாறு இந்த அரசின் பல தவறான நிதிக் கொள்கைகளின் மூலம் இந்த நாடு அதல பாதாளத்திற்கு இட்டுச்செல்லப்படுகின்றது. யுத்தம் முடிவுற்று பத்து வருடங்களுக்குள் பத்து வீத விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. வங்கிகளில் ஓடி மற்றும் கடன் பெற முடியாதுள்ளது. இதனால் வர்த்தகர்கள் பெரும் நிதி நெருக்கடியில் திண்டாடி வருகின்றனர்.
எனவே ஊவா மாகாண தேர்தலில் சூட்சுமமான முறையில் பல வேலைத்திட்டத்தினை முன்னெடுக்கும் பாணியில் ஜனாதிபதி உள்ளிட்ட பல அமைச்சர்கள் வருவார்கள் அவர்களின் வார்த்தைக்கு மயங்காமல் ஐ.தே.க. வுக்கு வாக்களித்து இந்த ராஜபக் ஷ ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வழங்கும் ஒரு சமிஞ்சையை ஏற்படுத்த வேண்டும் என்றார்.

Post a Comment