BBS தொடர்பில் இந்து மாமன்றத்தின் கருத்தை வரவேற்கிறது சமாதான பேரவை
Sunday, August 31, 20140 comments
இந்து மதத்தை பாதுகாப்பதற்காக பொதுபலசேனாவுடன் இணைய வேண்டிய தேவை எங்களுக்கில்லை என அகில இலங்கை இந்து மாமன்றம் விடுத்துள்ள அறிக்கையை நாம் வரவேற்கிறோம் என அம்பாறை மாவட்ட சமாதான பேரவையின் தலைவர் எஸ்.எம்.ஏ. ஜப்பார் தெரிவித்தார்.
பொதுபலசேனாவுடன் அகில இலங்கை இந்து சம்மேளனம் இணைந்துள்ளதாகவும் பெளத்த இந்து மதங்களைப் பாதுகாப்பதற்காக ஒன்றிணைந்து செயற்படப்போவதாகவும் பொதுபலசேனா இந்து சம்மேளனம் என்பன வெளியிட்டுள்ள கருத்துகளுக்கு மறுப்புத் தெரிவித்து அகில இலங்கை இந்து மாமன்றம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அவ்வறிக்கையை வரவேற்று அம்பாறை மாவட்ட சமாதான பேரவையின் தலைவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது;
யுத்தத்தின் பின்னர் தமிழர்களும், முஸ்லிம்களும் மிகவும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் இரு சமூகங்களுக்கிடையே பகைமையை ஏற்படுத்தும் நோக்கில் சில பேரினவாத சக்திகள் ஈடுபட்டுள்ளன. இன்று சிறுபான்மைச் சமூகம் என்றுமில்லாதவாறு பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். பிரச்சினைகள் வெவ்வேறு வடிவங்களில் உருவாக்கப்பட்டாலும் அதன் குறிக்கோள் ஒன்றாகவே உள்ளது.
சலுகைகளுக்காகவன்றி உரிமைகளுக்காகப் போராடும் இரு சமூகங்களையும் நெருக்கடிக்குள்ளாக்க வேண்டுமென்றும் எவ்வகையிலும் ஜனநாயக அரசியல் மூலம் தமிழர்களும், முஸ்லிம்களும் தமது உரிமைகளைப் பெற்று விடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கும் பொதுபலசேனா போன்ற அமைப்புக்களின் செயற்பாடுகளுக்கு அகில இலங்கை இந்து மாமன்றம் களத்தில் இறங்கியிருப்பதையிட்டு முஸ்லிம் சமூகம் தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றது.
கெளதம புத்தருடைய போதனைகளையும், உபன்னியாசங்களையும் மதியாமல் தான்தோன்றித்தனமாக செயற்படும் அமைப்பொன்று ஏனைய மதங்களைப் பாதுகாக்கப் போவதாகக் கூறுவது கேலிக்குரிய விடயம்.
மனிதனை மனிதப் புனிதனாக வாழச் செய்ய வேண்டிய மதத்தினை மதங்கொண்ட யானையின் செயற்பாட்டின் மூலம் வழிநடத்த முற்படுவது அறியாமையின் வெளிப்பாடாகும்.
பொதுபலசேனாவும், அகில இலங்கை இந்து சம்மேளனத்தின் ஏற்பாட்டாளர்கள் கல்முனை, அக்கரைப்பற்று போன்ற இடங்களுக்கு வருவதற்குத் திட்டமிட்டிருப்பதாகவும் அறிகின்றோம். நாங்கள் சமாதானமாக வாழ்ந்து கொண்டிருக்கும் நல்ல சூழலை சீர்குலைப்பதற்கு இவ்விரு சாராரும் ஈடுபடக்கூடாது என வேண்டிக்கொள்கின்றோம்.
நாம் வாழும் இச்சிறிய நாட்டில் அன்பையும் புரிந்துணர்வையும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையையும் சகோதரத்துவத்தையும் வளர்ப்பதன் மூலம் பொருளாதார ரீதியில் சுபீட்சமான, அமைதியான தேசியத்தைக் கட்டியெழுப்ப முடியும். இதன் மூலம் ஜனாதிபதியின் சிந்தனையின் வெளிப்பாடான ஆசியாவின் ஆச்சரியமிக்க நாடாக இதனைக் காண முடியும்.
ஒவ்வொரு மனிதனுக்குள்ள மத உரிமையையும், தொழில்படும் உரிமையையும், கலை, கலாசார, பண்பியல், பாரம்பரிய, மரபு ரீதியான விடயங்களை மதிப்பதன் மூலம் பேறுபெற்ற மனிதப் பண்புகளை நாம் அடைந்து கொள்ள முடியும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment