நாட்டில் அமைதியும் சமாதானமும் சுபீட்சமும் ஏற்பட்டுள்ளதாக பலர் வாய்கிழியக் கூக்குரல் இட்டாலும் 80 வயதையும் தாண்டிய ஒரு மூதாட்டிக்கு தனிமையில் வாழ முடியாது என்பதையே அண்மையில் அளவத்துக்கொடை ரம்புக்எல்ல பிரதேசத்தில் கொலையுண்ட மூதாட்டி தொடர்பான சம்பவம் எடுத்துக் காட்டுகிறது. இது தொடர்பாக பகிரங்கத் தீர்பளிக்கப்பட்டுள்ளது.
எமக்குத் தெரிந்த காலத்தில் இப்படியான ஒரு அலங்கோலமான அவலட்சனமான செய்தியை கேள்விப்பட்டிருக்க முடியாது. யுத்தகாலத்தில் நடந்தவை பிரத்தியேக மானவை. ஆனால் அமைதியும் சுதந்திரமும் கொண்ட ஒரு இடத்தில் இப்படியான ஒரு விடயம் அதுவும் ஒரு முதாட்டிவிடயத்தில் கொலைகாரர்கள் நடந்து கொண்டுள்ளதை வெளிப் படுத்தும் தடயங்கள் சொல்லும் கதை கவலை அளிக்கிறது.
அலவத்துகொடை பொலிஸ் பிரிவிலுள்ள ரம்புக்-எல பள்ளிவாசல் வீதியில் உள்ள வீடு ஒன்றில் தனிமையாக வசித்து வந்த சுமார் 80 வயது மதிக்கத் தக்க மூதாட்டியின் ஜனாஸா (2014 05 10) இரவு நேரம் பொலிஸாரால் மீட்கப்பட்டது.
சனிக் கிழமை காலை முதல் இவர் வழக்கம் போல் வெளியே நடமாடாத காரணத்தால் மாலையில் அயலவர்கள் அவரைத் தேடி உள்ளனர். வீட்டுக் கதவு பூட்டப்பட்டிருந்ததால் கூறை வழியாக பார்த்த போது இவர் இரத்த வெள்ளத்தில் மரணித்திருப்பது தெரிய வந்துள்ளது. பின்னர் பொலிஸாருக்கு அறிவித்த பின் விசாரணைகள் ஆரம்பமாகின.
கண்டி பதில் நீதவான் மஹிந்த லியனகே (11.5.2014) மரண விசாரணையை நடாத்தியதுடன் பிரேத பரிசோதனைக்கும் உத்தரவிட்டார்.
கண்டி வைத்திய சாலையில் பிரேத பரிசோதனை நடாத்தப்பட்டு பகிரங்கத் தீர்ப்பு வழங்கப்பட்ட வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பத்திரிகைச் செய்தியானது 'தனிமையில் வசித்து வந்த முஸ்லிம் மூதாட்டி ஒருவர் ஆடைகள் கலையப்பட்ட நிலையில் இரத்தவெள்ளத்தில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார்' என்று இருந்தாலும் அதன் உட்கருத்துக்கள் பலகோணத்தில் ஆராயப்பட வேண்டியவை. ஏனெனில் அப்பெண்ணின் பின்னணியை சற்றுபார்ப்போம்.
அயலவர்கள் தெரிவித்த கருத்தின் படி ரம்புக்எல என்பது அளவத்துக்கொடை பொலிஸ் பிரதேசத்தில் அங்கும்புற வீதியில் அமைந்துள்ள ஒரு சிறிய முஸ்லிம் கிராமம். பிரதான பாதையில் இருந்து சற்று தொலைவில் தெரிந்தாலும் ஒரு மலைக்குன்றில் கீழ் இறங்கி சிற்றோடையைக் கடந்து மீண்டும் குத்தான ஒரு மலைக்குன்றில் ஏறினால் றம்புக்எல முஸ்லிம் வித்தியாலமும் அதனை அடுத்து பள்ளிவாசலும்வரும். பள்ளி வாசலைத் தாண்டிச் சென்றால் முஸ்லிம் கிராமத்தின் ஏனைய வீடுகளை சந்திக்கலாம். சுருங்கக் கூறின் ஒரு புறமாக வந்தால் எல்லைப் பகுதியாகவும் மறுபுறமாக வந்தால் நடுக்கிரமமாகவும் சம்பவ இடம் அமைந்துள்ளது.
எனவே கொலையாளிகள் அனேகமாக எல்லைப் புறமாகவே பிவேசித்திருக்க முடியும். கொலை செய்யப்பட்டுள்ள ்பெண் சுமார் 40 அல்லது 50 வருடமாக இக்கிராமத்தில் வசிக்கும் சித்தி சாதுனா என்பவராவார். இவரது பூர்வீகம் தெரியாது. ஏனெனில் இவரது குடும்பத்தார்கள் மாத்தளைப் பகுதியில் உள்ளனர். அவர்கள் ஒரு விபத்தில் மரணித்ததை அடுத்து இவர் மட்டும் இப்பகுதிக்கு வந்து தனிமையாகவே வாழ்ந்து வந்துள்ளார்.
இவருக்கு தேவையான சகல உதவிகளையும் விருந்தோம்பும் பண்பு கொண்ட ரம்புக்எல மக்கள் வழங்கியுள்ளனர். பள்ளிவாசலின் உதவியுடன் பள்ளி வீதியில் வீடு ஒன்றையும் அமைத்துக் கொடுத்துள்ளனர். அவருக்குத் தேவையான சகல உதவிகளையும் செய்து கொடுத்து வந்துள்ளனர்.
திருமணம் முடிக்காத இவரிடம் அதிகளவு சேமிப்புக்கள் இருக்கலாம் எனக் கொலையாளி யூகித்திருக்கலாம்.அவர் கொலை செய்யப்பட்டிருந்த சமயம் ஆடைகள் அகற்றப்பட்டிருந்தன. இது விடயமாக புலன் விசாரணைகள் மூலமே தெளிவு பெறமுடியும். தலையை பொல்லால் அடித்துக் கொலை செய்த கொலைகாரன் ஏன் உடைகளை அகற்ற வேண்டும் என்பது சிந்திக்க வேண்டிய விடயம். அல்லது வேதனையால் ஆடைகள் கழன்றனவா? என்றும் தெரியாது.
சில வேளை இவரிடம் பணம் இருக்கு மென்று நினைத்து கொலையைச் செய்திருக்க முடியும். சிலவேளை பாலியல் வல்லுறவுக்கு உற்படுத்தப்பட்டுள்ளரா? அப்படியாயின் அது கொலைக்கு முன்பா? கொலைக்குப் பின்பா? என்பது சிந்திக்க வேண்டியது.
ஆனால் மாஜிஸ்திரேட் விசாரணை முடிவில் பகிரங்கத் தீர்பளிக்கபட்டுள்ளது. எனவே பொலிசாரின் மேலதிக விசாரணைகளின் அடிப்படையிலேதான் அவற்றை அறிய முடியும்.
அத்துடன் இக்கொலை நடந்த இடத்திற்கு மோப்ப நாய்கள் கொண்டுவரப்பட்டன. அவை பள்ளி ஹவுல் அடிவரை சென்று திரும்பி விட்டது. அப்படியானால் கொலைகாரன் பள்ளி ஹவுல்வரை ஏன் சென்றான் என்பது ஒரு கேள்வி. இதற்கு இரண்டு விடயங்களை அனுமானிக்கலாம். சிலவேளை கைகால்களைக் கழுவிவிட்டுச் சென்றிருக்கலாம். அப்படியாயின் அவன் பள்ளி பற்றி தெரிந்தவன். அதுவும் அவ்வாறே என்றால் ஒன்று அவன் அயலவனாக இருக்க வேண்டும் அல்லது முஸ்லிம்கள் பற்றி தெரிந்த ஒருவனாக இருக்க வேண்டும்.
இந்நிலையில் கொலையாளியை கைது செய்வதற்கு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அலவத்துகொடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிஷாந்த ஹெட்டியாரச்சி தெரிவித்தார். -ஜே.எம். ஹாபீஸ்

Post a Comment