உலக இளைஞர் மாநாடு இன்று ஆரம்பம்
Tuesday, May 6, 20140 comments
உலக இளைஞர் மாநாடு ஹம்பாந்தோட்டை மாகம்புர மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (06) ஆரம்பமாகவுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் உத்தியோகபூர்வமாக இன்று ஆரம்பித்து வைக்கப்படும் இம் மாநாட்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தலைவர் கலாநிதி ஜோன் டபிள்யூ ஆஷி மற்றும் இளைஞர் விவகாரங்களுக்கான ஐ.நா. செயலாளர் பான் கீ மூனின் விசேட பிரதிநிதி அஹமட் அல்ஹெந்தாவி ஆகியோர் விசேட பிரதிநிதிகளாக கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
நேற்று மாலை வரை 15 நாடுகளைச் சேர்ந்த இளைஞர் விவகார அமைச்சர்கள் இலங்கை வந்து சேர்ந்துள்ளதாக உலக இளைஞர் மாநாட்டின் பேச்சாளர் தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தான், சீசல்ஸ், பங்களாதேஷ், பல்கேரியா, சீனா, நைஜீரியா, டொங்கா, ரினிடேட், சாம்பியா, பிஜி, நேபாளம், கியூபா, கெபோன்., மியன்மார், அல்ஜீரியா போன்ற நாடுகளிலிருந்து பிரதிநிதிகள் நேற்று இலங்கை வந்தனர்.
168 நாடுகளைச் சேர்ந்த இளைஞர் பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்துகொள்கின்றனர்.
இன்று காலை 7.30 க்கு கொழும்பிலிருந்து உலக இளைஞர் மாநாட்டு பிரதிநிதிகள் ஹம்பாந்தோட்டை புறப்பட்டுச் செல்வதுடன் காலை 11.30 க்கு ஹம்பாந்தோட்டை மாகம்புர மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் உலக இளைஞர் மாநாட்டின் ஆரம்ப வைபவம் ஆரம்பமாகிறது.
பிரதமர் டி. எம். ஜயரட்ண, பிரதம நீதியரசர் உட்பட சிரேஷ்ட அமைச்சர்கள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.
நாளை இரண்டாவது அமர்வுகள் கொழும்பில் நடைபெறும்.
நேற்று மாலை பிரதிநிதிகள் தங்கியிருந்த ஹோட்டல்களில் அவர்களுக்கான மாநாடு தொடர்பான விசேட செயலமர்வுகள் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் வெளியிடப்படவுள்ள கொழும்பு பிரகடனத்தின் விடயங்கள் ஐக்கிய நாடுகள் சபையின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு உள்ளூர் மற்றும் சர்வதேச ரீதியில் கொண்டு செல்லப்படவுள்ளது.
விசேடமாக இலங்கையில் ஒவ்வொரு கிராமங்களிலும், இத்திட்டம் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது.
உலகின் முன்னணி இளைஞர் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்வதன் ஊடாக இவர்களுடைய யோசனைகள் அரசு மற்றும் தனியார் துறையின் ஆலோசனைகளும் பெறப்பட்டு கொழும்பு பிரகடனம் தயாரிக்கப்பட உள்ளது.
இந்த பிரகடனத்தில் எமது எதிர்கால இளைஞர்களுக்குத் தேவையான யோசனைகள் உள்ளடக்கப்படவுள்ளன.
இலங்கையில் முதல் தடவையாக நடத்தப்படும் உலக இளைஞர்கள் மாநாடு நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment